ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 175

கேள்வி: பசு பாவம் செய்வதில்லையே அதற்கு மோட்சமா? அல்லது மறுபிறவியா?

தேவர்களோ மாந்தன் (மனிதன்) நிலையை விட மேம்பட்ட ஆன்மாக்களோ தாமே விரும்பி பூமியில் பிறவி எடுப்பது உண்டு. சாபத்தினாலோ பாவத்தினாலோ இவ்வாறு பிறவி எடுப்பதும் உண்டு. பாவம் காரணமாக பிறவி எடுத்த ஆன்மாக்கள் எத்தனை பிறவிகள் எவ்வகையான விலங்குகள் எந்த வனங்கள் எத்தனை மனிதரிடம் சித்ரவதை பட வேண்டும்? எத்தனை நாள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அலைய வேண்டும்? என்று எல்லாம் கூட கணக்கு இருக்கிறது. ஒரே வகை விலங்கா? அல்லது வேறு வகை விலங்கா? என்று கூட கணக்கு இருக்கிறது. ஒரு ஆத்மாவிற்கு விலங்கு பிறவி வந்து விட்டால் மீண்டும் மனித பிறவி எடுக்க எத்தனையோ கல்ப கோடி ஆண்டுகளாகும். ஆனாலும் கூட இறுதியாக மனிதனாக அல்லது தேவனாக இருந்து செய்த புண்யம் தவறுகள் இரண்டின் அளவுகளையும் இறைவன் கணித்து மீண்டும் மேம்பட்ட பிறவியை அடைய அருள் செய்வார். எனவே ஒரு முறை விலங்காக பிறந்து விட்டால் அதற்கு பாவம் இல்லை என்பது உண்மை. ஆனால் அது பாவத்தை கழிக்கத்தான் அவ்வாறு பிறந்திருக்கிறது. இப்படி அது சேர்த்த வைத்த பாவ தொகுப்பு கழியும் வரை அது பிறவி எடுத்து மீண்டும் அது மேன்மையான சிந்திக்கக்கூடிய பிறவியாக பிறக்கும். அதனால்தான் மனித பிறவி மேம்பட்டது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறுகிறோம். ஏன் என்றால் மனிதன் தானம் தர்மம் பிறருக்கு உதவி செய்து பாவத்தை ஒரு பிறவிலேயே போக்கி கொள்ளலாம். விலங்குகளுக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் மீண்டும் மீண்டும் விலங்கு தேகத்தையே (உடலையே) பெற வேண்டி இருக்கிறது. சரி விலங்கின் பாவம் எங்கு போகும்? அது விலங்காக இருந்தாலே கழியுமா? கழியாது. அதை ஒரு மனிதன் பிடித்து அடைத்து சித்ரவதை செய்வதன் மூலம் அந்த விலங்கின் பாவத்தை இவன் எடுத்து கொள்கிறான். இவனிடமிருந்து அந்த புண்யம் அந்த விலங்குக்கு போகிறது. இப்படி சில விலங்குகள் வேண்டும் என்றே தனது தவ வலிமையால் சித்ரவதை பட்டு வெகு விரைவிலேயே பிறவியை முடித்து கொள்கிறது. அதற்கும் முந்தைய புண்ய பாவம் இடம் தர வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.