ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 62

கேள்வி: திருப்பதி பெருமாளை பற்றி சில விஷயங்களை தொலைக்காட்சியில் காட்டினார்கள் அது பற்றி?

மனித அறிவும் தெய்வீகமும் எக்காலத்திலும் ஒன்றுபடாது என்பது உண்மையிலும் உண்மை. இருந்தாலும் யாம் கூறுகிறோம். அந்த பெருமாளின் திருமேனி சாட்சாத் மகாவிஷ்ணுவே கலியுகத்திலே துன்பத்தைப் போக்க அவதாரம் எடுத்ததை யாமே (அகத்திய மாமுனிவர்) நேரில் பார்த்திருக்கிறேன். இப்போது நீ கூறுகின்ற விஷயத்தையெல்லாம் எம்மால் ஏற்க இயலாது. அதற்காக யாங்கள் கூறுவதையெல்லாம் மனிதர்களும் ஏற்கவேண்டும் என்று நாங்களும் கூறவில்லை. உண்மையில் தெய்வீகத்திற்குள் அறிவை புகுத்தக்கூடாது என்று நாங்களும் கூறவில்லை. ஆனால் எல்லா விஷயங்களும் அவ்வாறுதான். புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்தான் என்று எண்ணி அதற்குள் நுழைந்தால் குழப்பம்தான் வரும். காரணம் மனித அறிவுக்குள் உண்டான விஷயம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே சென்றாலும் தெய்வீகம் சார்ந்து அவன் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தியானமும் தன்னை அறிதலும்தான் எளிய வழி. வெறும் புற ஆய்வுகளை செய்து கொண்டே இருந்தால் குழப்பம்தான் மிஞ்சும். எனவே சாட்சாத் பெருமாளின் திவ்ய அவதாரம்தான் அங்கு (திருப்பதி).

வேறு வேறு தெய்வ மூர்த்தங்கள் அங்கு இருந்ததாகவும் அதனையெல்லாம் திசை மாறிவிட்டதாகவும் ஒரு கதை நிலவுகிறது. அவற்றையெல்லாம் நாங்கள் ஏற்கவில்லை. ஆனாலும் கூட தமிழ் மண்ணிலே இருந்ததால் தான் அதற்கு பெயரே (திருப்பதி) அவ்வாறு வழங்கப்பட்டு அங்கு இன்றும் கூட தமிழ் பாசுரங்கள் தான் ஓதப்பட்டு வருகிறது. காலம் அதனை இவ்வாறு மொழி மாற்று மண்ணிலே (ஆந்திர பிரதேசம்) அமைத்து விட்டாலும் கூட எம்மைப் பொருத்த வரை எல்லாம் ஒன்றுதான் என்பதால் இந்த மாற்றத்தையும் நாங்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. எனினும் கூட அங்கு சென்று வணங்குவது பெருமாளின் அருளைப் பெறுவது என்பது தீர்க்கமான ஒன்று. அதற்காக அங்கு சென்றால்தான் பெருமாள் அருள்வார் என்று எண்ணிவிடக்கூடாது. இருக்கும் இடத்திலேயே தூய்மையோடு இறைவனை எண்ணினால் இறையருள் எல்லோருக்கும் எப்பொழுதும் கிட்டும்.

திருப்பதி கோவில் வரலாற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து படிக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.