ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 295

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

ஒன்றுமில்லாத நிலைத்து இல்லாத சில காலம் இருந்து அழிந்து போகக் கூடிய உலகியல் வாழ்க்கைக்காகவே தன் முயற்சியையும் உழைப்பையும் செலவு செய்ய துணியும் மனிதன் இப்படி எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் ஒன்று இருக்கிறது என்று வெறும் நம்பிக்கையின் அடிப்படையிலே அந்த நம்பிக்கையோடு மட்டும் அதை நோக்கி என்றால் அவனால் செல்ல முடியாது என்பது எமக்குத் (அகத்திய மாமுனிவர்) தெரியும். ஆனால் இதை எப்படி புரிந்து கொள்வது என்றால் வெறும் உலகியல் வாழ்க்கையோடு அல்லாமல் அதனைத் தாண்டி இறை தேடல் என்கிற உணர்வும் ஒரு மனிதனுக்கு இருந்தால் அடிப்படையிலே சிறு பொறி போல் இருந்தால் அதனை எம்போன்ற (அகத்திய மாமுனிவர்) ஞானிகளும் மகான்களும் ஊதி ஊதி மிகப்பெரிய அக்னிப்பிழம்பாக மாற்றி விடலாம். ஆனால் அடிப்படையிலேயே அந்த பொறி இல்லையென்றால் பொறி என்றால் அந்த ஆன்மிகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற உணர்வை தரக்கூடிய புண்ணியம் இல்லையென்றால் இறைவனே நேரில் வந்தாலும் அந்த மனிதனை புரிந்து கொள்ள வைப்பது கடினம்.

ஆதியில் குறிப்பிட்டதைப் போல இரண்டு வகையாக இதனை நோக்க வேண்டும். ஒன்று உலகில் சார்ந்த வெற்றிகள் இரண்டாவது உலகியல் சார்ந்த இன்பங்கள். இவை அனைத்தும் மனிதனால் விரும்பப்படுபவை. எந்த மனிதனும் உலகில் துன்பமாக வாழ விரும்புவதில்லை. சதாசர்வ காலம் இன்பமாக வாழவேண்டும் சாந்தியோடு இருக்க வேண்டும் என்றே மனிதன் விரும்புகிறான். ஆனால் அப்படி எல்லாம் எல்லோருக்கும் வாழ்க்கை அமைந்து விடுவதில்லை. பெரும்பாலான மனிதர்கள் பொருளாதார சிக்கலில் நெருக்கடியில் இருக்கிறார்கள். இன்னும் சிலர் தேக நலம் குன்றி அதனால் துயரமடைகிறார்கள். இன்னும் சிலர் உறவு சிக்கலால் வேதனைப் படுகிறார்கள். இப்படி பலவிதமான பிரச்சனைகளால் மனிதன் சூழப்பட்டு காலகாலம் பெரும்பாலும் ஒன்று போனால் ஒன்று என்று துன்பத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான். இரண்டு மனிதர்கள் வேண்டுமானால் துன்பம் இல்லாமல் வாழலாம். ஒன்று சித்தம் தெளிந்தவன். இன்னொன்று சித்தம் கலைந்தவன். அதாவது பைத்தியக்காரனுக்கு எந்த விதமான துன்பமும் தெரியாது அல்லது ஞானத்தில் உச்ச நிலையடைந்த தோற்றத்தில் பைத்தியக்காரன் போல் இருக்கின்ற அவனுக்கும் துன்பம் தெரியாது. எனவே இரண்டிற்கும் இடையில் இருந்து வாழுகின்ற மனிதனுக்கு ஏதாவது ஒரு துன்பமென்பது இருந்து கொண்டேதான் இருக்கும். எனவே யாங்கள் (சித்தர்கள்) கூற வருவது யாதென்றால் ஒரு மனிதன் அல்லது உயிர் எதுவாக இருந்தாலும் துன்பமில்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நிம்மதியாக வாழ வேண்டும் என்று எண்ணுகிறது. நீடித்த இன்பம் வேண்டும். நிலைத்த நிம்மதி வேண்டும் என்று விரும்பாத மனிதர்களே இல்லை. அதற்கு ஒரே வழி மறந்தும் கனவிலும் பாவத்தை செய்யாமல் இருப்பது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.