ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 199

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 199

கேள்வி: தஞ்சையில் கரந்தைப் பகுதியில் உள்ள கோவிலில் தங்களால் அசுரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட குளம் ஒன்று இருப்பதாகவும் அதில் ஒன்பது கிணறுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அத்தலத்தில் உரோமரிஷி அடக்கமாகி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது அது குறித்து:

இறைவன் கருணையால் முற்காலத்திலெல்லாம் நீர் ஆதாரங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் ஆங்காங்கே குளங்களும் ஏரிகளும் வெட்டப்பட்டன. அவற்றை நேரடியாக செய்தால் மனிதன் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றுதான் அது தீர்த்தம் என்றும் புனித தடாகம் என்றும் ஆலயத்தோடு பின்னிப் பிணைக்கப்பட்டது. அதனால்தான் இந்தளவுக்கு நீர் பஞ்சம் இல்லாமல் முற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். அப்பொழுதும் பஞ்சம் வந்தது. ஆனால் உடனடியாக அதற்கு அறிவுபூர்வமான தீர்வு ஏற்படுத்தப்பட்டது. இப்பொழுதும் கவனிக்கலாம். மழை குறைவான இதுபோல தென்பகுதியை நோக்கி செல்ல செல்ல நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க முற்கால மனிதர்கள் என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்திருப்பார்கள்? என்பதற்கு இன்னும் அழியாத சில சாட்சிகள் இருக்கின்றன. மிகப்பெரிய நீர்பரப்பு குளங்களெல்லாம் வெட்டப்பட்டு பாறைகளால் பாதுகாக்கப்பட்ட நிலை இருந்தது. எனவே இந்த அடிப்படையில்தான் தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதற்காக எல்லா தீர்த்தங்களும் அப்படியல்ல. சில இன்னவன் வினவியது போல் முனிவர்களால் ஏற்படுத்தப்பட்டவை. சில தேவதை வர்க்கங்களால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஆனால் மனிதனின் பாவம். இது போன்ற புனித விஷயங்களை அவன் அறிவிற்கு எட்டாமலேயே செய்து விடுகிறது. எனவே மனிதர்கள் இதை உணர்ந்து கொண்டு மீண்டும் தீர்த்தங்களை பாதுகாக்கின்ற நிலைக்கு தன்னை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இன்னவன் வினவிய அந்த தீர்த்தம் எம் போன்ற மகான்கள் அங்கு வந்து தவம் செய்திருந்தாலும் கூட விண்ணுலக தேவன் ஒருவனால் ஏற்படுத்தப்பட்ட தீர்த்தமாகும். ஆனால் அந்த இடத்தை விட்டு சற்றே இந்த நீர் தடாகம் விலகியிருக்கிறது.

கேள்வி: அமாவாசையன்று நானே சில சமயங்களில் எள்ளும் தண்ணீரும் என் தந்தையின் பெயரைக் கூறி விட்டிருக்கிறேன். இந்த முறை அதாவது சுயமாக செய்வது சரியா? தவறா? அல்லது தகுந்த மனிதரை வைத்து தான் செய்ய வேண்டுமா?

பக்தியை நேர்மையாக அவனவன் அறிந்த வழியில் செலுத்தினால் இறையருள் கிட்டும். எல்லாவகையான தோஷமும் குறையும் என்பதை நாங்கள் (சித்தர்கள்) மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் உலகியல் ரீதியாக ஒரு பணி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தொழில் வல்லுனரை மனிதன் நாடுகிறானே? ஒரு வாதுமன்றம் (நீதிமன்றம்) என்றால் தானே சென்று ஒருவரும் வாதாடுவதில்லை. ஒரு வழக்கறிஞரை நாடுகிறான். கடுமையான பிணி ஏற்பட்டால் மருத்துவரை நாடுகிறான். ஒரு இல்லத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்குரிய தொழிலாளியை பார்க்கிறான். ஆனால் ஆன்மீகம் என்று வரும் பொழுது மட்டும் ஏன் அதற்குரிய ஒரு நல்ல மனிதனை போராடி தேர்ந்தெடுத்து அவனுக்குரிய உதவிகளை செய்து அந்த பணிகளை பூர்த்தி செய்து கொண்டால் என்ன? என்பது தான் எமது(அகத்திய மாமுனிவர்) வினா. அதற்காக சுயமாக செய்யக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. தாராளமாக அவரவர்களால் இயன்றதை செய்யலாம். அதற்கும் பலனுண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.