ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 639

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

இறைவன் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் தளராத பக்தி தடைபடாத தர்மம் தவறாத தர்மம் என்றென்றும் இதுபோல் வழியிலே மாந்தர்கள் செல்ல செல்ல இறைவனின் பரிபூரண அருளும் தொடருமப்பா. அப்பனே இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய என்றுமே நலமே நடக்கும் என்று யாம் காலாகாலம் கூறிக் கொண்டே இருக்கிறோம். ஆயினும் இயம்புங்கால் மனிதனின் மனதிலே உறுதியின்மையும் தெளிவு இல்லாததாலும் லோகாயத்தை அழுத்தம் திருத்தமாக பிடித்துக் கொண்டிருப்பதாலும் உடனடியாக ஆதாயத்தை எப்பொழுதுமே மனித மனம் எதிர்பார்ப்பதாலும்தான் அனைத்து குறுக்கு வழிகளையும் மனிதன் கையாளுகிறான். நீக்கமற நிறைந்துள்ள இறைவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கின்ற என்கிற ஒரு உணர்வு உண்மையாகவே மெய்யாகவே ஒரு மனிதனுக்கு அழுத்தம் திருத்தமாக இருக்குமானால் அவன் யாருமே பார்க்கவில்லை யாருக்கும் தெரியவில்லை நான் இடர்படுகிறேன் எனவே இந்த தவறை செய்யலாம். என்னை விட அதிக தவறு செய்யக் கூடிய மனிதன் நன்றாக தானே இருக்கிறான். எனவே நான் தவறு செய்யலாம். அது தவறு இல்லை என்ற வாத பிரதிவாதங்களை தமக்குள் வைத்துக் கொண்டு தவறான வழியில் சென்று கொண்டே இருக்கிறான்.

ஆயினும் கூட இறைவன் பார்க்கிறார் பார்க்கவில்லை மற்றவர்கள் அறிகிறார்கள் அறியவில்லை என்று சிந்திக்காமல் அவனவன் மனமே சாட்சியாக வைத்து ஒரு மனிதன் நேர்மையான வாழ்க்கையை வாழ வேண்டும். அப்படி வாழ்ந்தாலே அம்மனிதனுக்கு இறை வழிபாடு கூட தேவையில்லை எனலாம். நன்றான இறை வழிபாட்டையும் நன்றாக பாசுரங்களையும் ஓதுவதோடு ஒரு மனிதன் நின்று விடக்கூடாது. அதையும் தாண்டி அப்பழுக்கற்ற மனிதனாக எல்லோருக்கும் நலத்தை செய்யும் புனிதனாக போராடியாவது வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுபோல் நல்ல வழியை தொடர்ந்து கடைபிடித்தாலே இறைவன் அருள் பரிபூரணமாக தொடரும். இல்லையென்றால் வெறும் சடங்குகளை மட்டும் செய்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு சராசரி மனித நிலைதான் அங்கு நிற்கும்.

எனவே இறைவனை வணங்கவும் தர்மங்களை செய்யவும் சத்தியத்தை பேசவும் மட்டுமல்லாது அடிப்படை மனித நேயத்தை மறந்து விடாமல் வார்த்தைகளில் பணிவு செயல்களில் பணிவு தேகத்தில் பணிவு பார்வையில் பணிவு என்று ஐம்புலனும் ஆதாரமாக இருக்கும் மனம் பணிய மனதோடு இருக்கும் ஆத்மா பணிய இப்படி பணிதலே இறைவனருளை பரிபூரணமாக பெற்றுத் தரக்கூடிய நல்லதொரு உயர் நிலையாகும். எனவே பணிதல் என்பது இறங்குதல் அல்லது தாழ்ந்து போதல் என்ற பொருள் அல்ல. வேடிக்கையாக கூறப்போனால் நிறை காட்டும் நிறை காட்டுமனி (தராசு) தூலக்கோல் அதை கவனித்தால் தெரியும். எங்கே அதிக கனம் பரிமாணம் தெரிகிறதோ அந்த தளம் தாழ்வு இருக்கும். கன பரிமாணம் இல்லாத அடுத்த தளம் உயர்ந்தே இருக்கும். இப்பொழுது அது உயர்ந்து இருப்பதால் மெய்யாக அது உயர்ந்ததா? இன்னொரு தளம் தாழ்ந்திருப்பதால் மெய்யாகவே அது தாழ்ந்ததா? எனவே முற்றிய பயிர் தலை கவிழ்ந்தே இருக்கும். ஆங்கே நிறை குடம் தளும்பாது இருக்கும். இவற்றையெல்லாம் மனிதர்கள் குறிப்பாக எமது வழியில் வரக்கூடியவர்கள் புரிந்து கொண்டு வாழ இறைவன் அருளும் தொடர்ந்து கொண்டே வருமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.