ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 263

கேள்வி: ஷ ஹ ஸ போன்ற எழுத்துக்களைப் பேசவோ எழுதவோ முடியவில்லையே? இது எதனால் ஏற்பட்டது?

இறைவனின் கருணையாலே மொழியாகட்டும் மனிதனின் பழக்க வழக்கமாகட்டும் ஒரு காலத்தில் இருந்தது போல் மறுகாலத்தில் இருப்பதில்லையப்பா. அதைப் போல மொழியிலே கலப்பு வருவதையும் யாராலும் தடுக்க இயலாது. வேண்டுமானால் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மை இருக்கிறது. பிற மொழி கலப்பால் அது பாதிக்கப்படுகிறது என்று மனிதன் வாதம் செய்யலாம். எந்த மொழியும் பிற மொழி சேர்வதால் எக்காலத்திலும் எந்த பாதிப்பும் அடைந்து விடாது. ஆனால் அதே சமயம் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழும் காலம் அல்லது சம காலம் அல்லது நிகழ்காலம் என்று வைத்துக் கொண்டால் சக மனிதர்கள் பெருவாரியான மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய ஊடகமாகத்தான் மொழி இருக்க வேண்டுமே தவிர அது தனித்தனியாக இருக்க வேண்டும். மிக சிறப்புற மொழி இப்படியெல்லாம் சீரழிந்து கிடக்கிறதே என்றெல்லாம் வருத்தம் அடைந்து விடக்கூடாது. அப்படியொரு நிலையை கடைபிடிக்கத் துவங்கினால் எல்லொருக்குமே ஒருவிதமான அயர்வும் வெறுப்பும்தான் ஏற்படும். இன்னொன்று. நீ கூறியது போல எல்லா வகையான ஒலிக் குறிப்புகளும் இந்த மொழியில் அதாவது தமிழ் மொழியில் ஒரு காலத்தில் இருந்தது.

காலப் போக்கிலே இப்பொழுது எப்படி வேற்று மொழியின் ஆதிக்கம் பரவலாக இருக்கிறதோ அதுபோல ஒரு காலத்தில் அந்த மந்திர மொழி (வட மொழி) என்று இன்று கருதப்படுகின்ற அந்த வட மொழியின் ஆதிக்கம் இருந்தது. அந்த மொழியைப் பேசினால்தான் கெளரவம் என்று இப்பொழுது போல் அப்பொழுதும் மனிதர்கள் எண்ணினார்கள். அதன் விளைவாக பலவிதமான கலப்புகளும் ஏற்பட்டது. ஆனாலும் கூட அந்த ஒலிக் குறிப்புகள் எல்லாம் அடியோடு இல்லாமல் போய் விட்டது. இப்பொழுது அந்த ஒலிக் குறிப்புகள் இல்லையென்று நீ வருந்தத் தேவையில்லை. இருக்கின்ற அந்த ஒலிக் குறிப்பினையே வைத்து தாராளமாக நீ உச்சரிக்கலாம். அப்படி உச்சரித்தால் அது தமிழ் மொழியை சார்ந்தது அல்ல என்கிற கருத்து எம்மால் ஏற்கக்கூடியது அல்ல. எந்த ஒரு வரி வடிவமும் எக்காலத்திலும் தொடர்ந்து அதைப் போலவே நிலை பெறுவது இல்லை. இப்பொழுதுள்ள மொழிக்கும் இப்பொழுதுள்ள சமுதாயத்திற்கும் எது ஏற்றதோ அதனை இறைவன் தந்திருக்கிறார்.

கேள்வி: தங்கள் அருளாசியால் 35 (திருவண்ணாமலை) சித்தர்களின் வரலாறு விளையாடல்களை வெளியிட மட்டுமே அருள் செய்தீர்கள். மீதியுள்ளவற்றையும் வெளியிட தங்களின் ஆசி வேண்டும்:

இறைவன் கருணையாலே இறைவன் அருளாணையிட மீண்டும் ஏனைய மகான்களின் விளையாடல்கள் இறையோடு தொடர்புடைய அந்த திருகிரி (திருவண்ணாமலை) தொடர்புடைய நிகழ்வுகள் மனிதர்களுக்கு தேவைப்படும் மனிதர்களுக்கு நம்பக்கூடிய மனிதர்களுக்கு இந்த வெளி உலகத்தில் தெரிய வருமப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.