ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 109

கேள்வி: யுத்தம் என்றால் என்ன?

ஒரு மனிதனை அவனுடைய மன எண்ணங்கள் தாறுமாறாக அழைத்துச் செல்கிறது. பஞ்ச புலன்களும் மனதிற்கு கட்டுப்படாமல் விருப்பம் போல் அலைகிறது. ஒரு மனிதன் யுத்தம் செய்ய வேண்டும் என்று கருதினால் முதலில் தன்னுடன்தான் யுத்தம் செய்ய வேண்டும். தன்னைத்தான் யுத்தம் செய்து எவன் வெல்கிறானோ அவனுக்குத்தான் பிறரை வெல்லக்கூடிய யோக்யதை வருகிறது. தன்னையே வெல்லமுடியாத ஒருவன் எப்படி பிறரை வெல்ல முடியும்? எனவே மனிதர்கள் செய்கின்ற போர் அல்லது யுத்தம் என்பதெல்லாம் எம் போன்ற ஞானிகளால் ஏற்கப்படக்கூடிய நிலையில் என்றுமே இல்லை. ஆனால் விதி அப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் அது நடந்துவிட்டுப் போகட்டும் என்று நாங்கள் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருப்போம். அதே சமயம் பகவான் கிருஷ்ண பரமாத்மா யுத்தம் என்று கூறும் பொழுது இந்த யுத்த தர்மத்தை அப்படி வகுத்ததன் காரணம் யுத்தமே செய்யக்கூடாது. செய்யக்கூடிய நிலை வந்தால் எதற்காக செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? அந்த யுத்தத்தில் யார் யார் என்ன விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்? என்றெல்லாம் அவர் போதித்தது உண்மை. ஆனால் யுத்தமே வேண்டாம் என்ற நிலையிலே இதுபோன்ற விதிமுறைகளே தேவையில்லை. அடுத்ததாக யுத்தமே வேண்டாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறினாலும் ஆதியிலிருந்தே கூறி வந்திருக்கிறார். அதை யாரும் கேட்பதாக இல்லை. முதலில் பாண்டவர்களே கேட்பதாக இல்லை. எனவே விதி வழி மதி செல்கிறது. அதை இறைவனாலும் தடுக்க முடியாது என்பது போல அங்கே கிருஷ்ண பரமாத்மாவும் எம் போல் பார்வையாரகத்தான் இருந்திருக்கிறார்.

அடுத்ததாக தர்மத்திற்காக யுத்தம் செய்தால் யுத்தமே வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்குகின்ற மனிதரிடம் தேவையில்லாமல் யுத்தம் திணிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் அதை கர்மயோகமாக ஏற்று அவன் யுத்தம் செய்யும் பட்சத்தில் உடலை விட நேர்ந்தால் அவன் சொர்க்கம் செல்வான் என்பது வெறும் அந்த யுத்த நிகழ்வைப் பொறுத்ததல்ல. வாழ்க்கையின் அடிப்படையையும் சேர்த்துதான். வெறும் யுத்தத்தில் ஒருவன் வீரமரணம் அடைந்தால் வீர சொர்க்கம் அடைவான் என்பதெல்லாம் எதற்காக கூறப்பட்டது தெரியுமா? இல்லையென்றால் போர் என்றால் யாராவது துணிந்து வருவார்களா? தர்மம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்குமப்பா. உனக்கு பிணி வராது என்று கூறுகிறார்களே அதைப் போல் இந்த போரிலே கலந்து கொண்டால் இது நேர்மையான யுத்தம். நம் தேசத்தின் மீது எந்த தவறும் இல்லை. நீ நேர்மையாக யுத்தத்தில் ஈடுபடு. புறமுதுகிட்டு ஓடாதே. யார் வந்தாலும் எதிர்த்து நில். அதை மீறி உன் உயிர் போனால் உனக்கு மேலே சொர்க்கம் காத்திருக்கிறது என்று கூறி யுத்த பயத்தை நீக்குவதற்காக கூறப்பட்ட வாசகங்கள். இவை எங்களால் (சித்தர்களால்) ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. வாழ்க்கை முழுவதும் எல்லா தவறுகளையும் செய்துவிட்டு யுத்தத்திலே ஒருவன் வீரமரணம் எய்தினால் அவன் தன் நாட்டிற்காக வீரமரணம் எய்தினாலும் அதற்காக அவனுக்கு இறைவன் சொர்க்கமெல்லாம் தரமாட்டார் இதை நன்றாக புரிந்துகொள்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.