ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 223

ஆதிக்கும் ஆதியான இறைபாதம் வணங்கி போற்றி அறிவிப்பேன் சிலவாக்கு இத்தருணம். அகத்தில் நுணுக்கமாய் கருத்தினை பதிய வைத்துவிடு. அறிவதை தெளிவாக உள் உணர்ந்து அறியவில்லை என்றால் எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கின் அர்த்தங்கள் விபரீதமாகுமப்பா. மனதை ஒரு நிலைபடுத்தியே எமது வாக்கினை அறிய வேண்டும். ஏற்றம் பெற ஏற்றம் பெற கர்மம் தொலைய பல தடங்கள் தரிசிப்பதும் தர்மங்கள் செய்வதும் என்றென்றும் சிறப்புதான் உயர் சிறப்புதான் எக்காலமும். காலகாலம் பல்வேறு மகான்கள் வழிபட்ட தடங்கள் (வழிகள்) சென்று வணங்குவதும் சிறப்புதான். அப்பனே (மகனே) எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன்(மனிதன்) ஆயினும் இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும் எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும் பித்ருக்கள் தோஷ நிவர்த்தி செய்தாலும் தெய்வ தீவிலும்(இராமேஸ்வரம்) தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம். செப்புவேன் எம்மாந்தன் ஆயினும் இறை தடமோ தெய்வீக வழிபாட்டு கூடமோ அமைத்து அமைத்து அமைத்து எத்தனை தான் சிறப்பாக வழிபட்டாலும் எத்தகைய அமைப்பு தன்னிலே சதம் சதம் (நூற்றுக்கு நூறு) பிராயசித்தங்கள் எடுபடாது. அப்பனே மாந்தர்கள் எத்தனை ஞான உபதேசத்தை செய்தாலும் கேட்டாலும் மனம் கொள். சதம் சதம் (நூற்றுக்கு நூறு) அகத்தில் சத்தியமும் தெளிவும் உடைய எத்தகைய ஆன்மீக மாந்தனும் (மனிதனும்) இன்றைய அண்டத்தில் இல்லையப்பா. ஆட்சி வழி மாந்தர்களோடு எவ்வித தொடர்பும் எந்த நிலையில் எதற்காக வைத்தாலும் அங்கே ஆன்ம ஞானம் கறைபடுகிறதப்பா.

அதிகாரம் உள்ள மாந்தனையோ (மனிதனையோ) ஆட்சி வழி மாந்தனையோ ஆன்ம வழி அமைப்பில் சேர்த்தால் சேர்த்தால் அது அமைப்பு சிதறுண்டுதான் போகுமப்பா. எந்தநிலையிலும் தான் (நான் என்ற எண்ணம்) தோன்றக் கூடாது. தோன்றினால் இறைவன் தோன்ற மாட்டான். குற்றமோ பாவமோ செய்வது மாந்தர்களின் (மனிதர்களின்) இயல்புதான். பாதகமில்லை. பாதகம் அதில் இல்லையப்பா. செய்வதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதே பாதகமப்பா. பகருங்கால் லக்கினத்தை ராசியை திருட்டிக்க (பார்க்க) பாலனே பொன்னன் திருட்டிருக்க இத்தகு மாந்தர்கள் (மனிதர்கள்) எம்வழி வரத்தக்கவர்கள். பகருவேன் ஏனையோர் இது போல் இருந்தால் இறை கருணை பெறலாம். பகருவேன் ஏக ஏக மாந்தனுக்கும் சரியோ தவறோ தனி தனி உணர்வு உண்டு. தனித்தனி கருத்து உண்டு உண்டு என்பதால் அதனை ஏளனம் செய்வதில் எவருக்கும் லாபமில்லை. உணர்ந்து உரைக்க வேண்டினால் மட்டுமே அறஉரை உரைக்க வேண்டும். நல் உணர்வு அற்றோர் இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர் இயலும் இயலும். தீமையை விலக்க இயலும் இயலும். உயர்ந்ததை பேச இயலும் இயலும். உன்னதத்தை உன்னதமாய் உரைக்க இயலும் இயலும். உள்ளத்தில் உறுதியும் திடமும் அறமும் கொண்டு வாழ இயலும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.