ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 220

அகத்திய மாமுனிவர் பொதுவாக்கு:

உலகரீதியாக ஒரு மனிதனின் செயல்பாட்டை பார்ப்பதை விட கர்மரீதியாக பார்க்கும் பொழுது ஒரு அமைதி கிட்டும். நியாயம் நியாயம் இல்லை என்பது அடுத்த நிலை. இந்த நிலையிலே விதி என் மகனை தவறான வழிக்கு அழைத்து செல்கிறது. விதி என் மகனை தவறு செய்ய தூண்டுகிறது என்று நியாயம் கற்பித்து விட்டு அமைதியாக இருந்து விடலாமா? இருந்து விடக்கூடாது. விதி ஒரு மனிதனை இறை வழியில் அழைத்து சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால் விட்டுவிடலாம். விதி ஒரு மனிதனை தர்மம் செய்ய தூண்டினால் விட்டுவிடலாம். ஆனால் விதி ஒரு மனிதனை தவறு செய்ய தூண்டும் பொழுது கூடுமானவரை நேர் வழியில் சாத்வீக வழியில் ஆன்மீக வழியில் அதனை திருத்த மாற்ற முயல வேண்டும். அப்பொழுதும் நன்றாக கவனிக்க வேண்டும். தவறு செய்யும் மனிதனை உலக ரீதியாக தண்டிக்கின்ற முறைகளோ கண்டிக்கின்ற முறைகளோ சித்தர்களுக்கு ஏற்புடையது அல்ல. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். பழுது வராத கருவிகள் உலகில் ஏதும் இல்லை. கருவி என்று இருக்குமானால் பழுது என்பது வந்து கொண்டே இருக்கும். மனிதன் ஒருவன் இருக்கும் வரையில் அவனிடம் குறைகளும் குற்றங்களும் இருந்து கொண்டே இருக்கும். எப்படி செம்பை எத்தனை துலக்கி வைத்தாலும் மீண்டும் களங்கம் வந்து விடுகிறதோ மனிதன் தன்னை அன்றாடம் சுத்தி படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அன்றாடம் சுத்திபடுத்த தவறினால் செம்பிலே ஒரு களிம்பு ஏறுவது போல மனிதனிடம் மாசு ஏறிவிடும். எனவே அதிகம் மாசு ஏறிவிட்டால் ஏறிவிட்டால் ஏறிவிட்டால் அதனை தூய்மைபடுத்துவது கடினமாகிவிடும். எனவே அன்றாடம் செம்பை துலக்குவது போல அன்றாடம் ஆடையை தூய்மை செய்வது போல அன்றாடம் மனிதன் தன் மனதை தூய்மை செய்து கொண்டே இருக்க வேண்டும்.

தன்னைத்தான் நீதிபதியாக தன்னைத்தான் குற்றவாளியாக வைத்துக் கொண்டு மனிதன் என்றுமே அன்றாடம் செய்கின்ற செயல்களையெல்லாம் சீர்தூக்கி பார்த்து ஒரே தீர்ப்பை அவன் எழுத வேண்டும். நாம் செய்த இந்த செயலை எல்லாம் மற்றவர்கள் செய்தால் நாம் ஏற்றுக் கொள்வோமா? நாம் செய்கின்ற இந்த செயலை நாளை நமது மகன் செய்தால் ஆதரிப்போமா? கட்டாயம் ஆதரிப்போம் அதற்கு வழி வகுப்போம் உதவியும் செய்வோம் என்றால் அந்த செயலை தொடரலாம். தன் மகன் செய்யக் கூடாத செயலை அல்லது செய்ய வேண்டாத ஒரு செயலை கட்டாயம் தகப்பனும் தாயும் செய்யக்கூடாது. இது தான் ஒரே வழி தவறிலிருந்து தப்பிக்க. இப்படி மனதை நன்றாக ஆய்ந்து ஆய்ந்து ஆய்ந்து பார்த்து மனிதன் சோதனை செய்து சோதனை செய்து தன்னை நன்றாக உயர்த்திக் கொள்ள பாடுபட வேண்டும்.

இறைவனின் கருணையால் இதனை யார் கேட்டார்? இந்த போதனைகள் எதற்கு போதனைகள் கேட்டு கேட்டு சலித்து விட்டது எமக்கு. தத்துவார்த்த விளக்கங்கள் கேட்டு கேட்டு புத்தி பேதலித்து விட்டது. இவையெல்லாம் தேவையில்லை. இவைகளை தாண்டி அதிசயங்களை எதிர்பார்க்கிறோம். அதிசயங்களை எதிர்பார்த்து மனித சக்திக்கு மீறிய ஒரு செயல் இக்குடிலில் (அகத்தியர் அருட்குடில் தஞ்சாவூர்) நடந்தால் தான் இறை நம்பிக்கையும் சித்தர்களின் மீது நம்பிக்கையும் பலருக்கு ஏற்படும். அப்படி ஏற்படும் பொழுது அதை எப்பொழுதும் சத்சங்கமாக கூடிப்பேசி புளங்காகிதம் அடையலாம் என்று ஒருவன் இருக்கிறான். இறைவன் அருளால் அதனை நடத்த ஞானியர் நிலையில் எப்பொழுதுமே ஒப்பிதம் இல்லை என்றாலும் அது தப்பிதம் இல்லை என்ற நிலையில் இறை அனுமதிக்கும் தருணம் அப்படி வெளிப்படையாக ஒரு வித்தையை சுருக்கமாக கூற போனால் அது ஒரு வித்தை தான். அந்த வித்தையை காட்டலாம். அது ஒருபுறம் இருக்க அன்றாடம் அதிசயங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனை சுற்றியும் மனிதன் விழிப்புணர்வோடு கண்டு அதனை உணரத் தவறினால் அதற்கு சித்தர்களோ மகான்களோ ஞானியர்களொ பொறுப்பில்லை. அன்றாடம் இக்குடிலிலும் நடந்து கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல தூய பக்திமானின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டே இருக்கிறது. அவன் ஆய்ந்து பார்க்கவேண்டும். அதை புரிந்து கொள்ளும் தகுதியை அவனே வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.