ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 235

கேள்வி: தந்தையே இறைவன் உறையும் இடம் கயிலை. கயிலை செல்ல பொருளாதாரம் இல்லை. பொருளாதாரம் இருந்தால் உடல் ஒத்து வரவில்லை. எனவே கயிலைக்கு சமமான ஸ்தலம் இங்கு எங்கு இருக்கிறது? எல்லா ஸ்தலங்களும் என்று சொல்லக்கூடாது குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.

இறைவன் உறையும் இடம் கயிலை என்று நீ கூறுகிறாய். வேறு மார்க்கத்தைப் பின்பற்றுபவனைக் கேட்டால் வேறு ஒன்றைக் கூறுவான். இறைவன் உறையும் இடம் அவனவன் கையிலே. எனவே அவனவன் கையைக் கொண்டு அவன் ஆற்றுகின்ற செயலும் அவன் மனப்பக்குவமும்தான் இறைவனை உணர்த்துகிறது. எனவே கயிலை சென்றுதான் இறைவனை வணங்க வேண்டும் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லையப்பா. மனிதர்களுக்கு ஒரு ஆசை தூர தூரமான இடங்களுக்கு சென்று வழிபட வேண்டும் என்று. அப்படியெல்லாம் முற்காலத்திலே செல்லும் பொழுது நீண்ட காலம் ஆகும். இக்காலத்திலும் கால அவகாசம் தேவைப்படுகிறது. அப்படி இறைவனை நோக்கி செல்கிறோம் என்ற உணர்வோடு பரிசுத்தமான எண்ணத்தோடு செல்லும் பொழுது அந்தப் புனிதப் பயணம் பூரத்தியடைகிறது. ஆனால் அப்படியோரு எண்ணமில்லாமல் எங்கு சென்றாலும் அந்த இறை பக்தி என்பது நிறைவடையாது. எனவே கயிலை தான் செல்ல வேண்டும் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. இருக்கும் இடத்திலேயே உருக்கமான வழிபாடும் நல்ல எண்ணங்களும் இருந்தால் அதுபோல மனிதனைத் தேடி இறைவன் வருவான். மன்னன் கட்டிய ஆலயத்தில் அல்ல பூசலார் (63 நாயன்மார்களில் ஒருவர்) இதயத்தில்தான் இறைவன் அன்று கலச விழா என்று தேடிச் சென்றார். எனவே மனம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் கயிலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருவண்ணாமலையாக இருக்க வேண்டும். அவனவன் மனம்தான் திருப்பதியாக இருக்க வேண்டும். எனவே மனதை நல்ல எண்ணங்களால் இட்டு நிரப்புவதுதான் இறைவனுக்குப் பிடித்த பூஜையப்பா.

கேள்வி: புருவ மத்தி தியானத்தை எப்படி செய்வது?

வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக (ஒரு) நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா? என்று முயற்சி செய்து பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக் கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல மெல்ல சாத்தியமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.