ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 522

கேள்வி: பில்லி சூனியம் ஏவல் உண்டா? இருந்தால் இவற்றிற்கு பரிகாரம் என்ன?

இறைவனின் அருளால் இது குறித்து பலமுறை விளக்கம் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னவன் பொருட்டு கூறுகிறோம். வேதத்திலே அதர்வண வேதம் என்ற ஒன்று இருக்கிறது. அதிலேயே இது குறித்து நிறைய விளக்கங்கள் இருக்கிறது .பொதுவாக அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படும் நெருப்பு கூரையை எரிக்க பயன்படுத்துவது போல வனாந்திரங்களில் (காடுகளில்) முனிவர்கள் தனிமையிலே தவம் செய்யும் பொழுது விலங்குகளாலும் கள்வர்களாலும் தமக்கு இடர்பாடு தொல்லைகள் ஏற்படாமலிருக்க தன்னைச் சுற்றி ஒரு காப்பு கட்டி கொள்வார்கள். அதற்காகத்தான் இது போன்ற மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும்கூட மனிதர்களின் சுயநலமும் பேராசையும் இது போன்ற மந்திரங்களை தீமைக்கு பயன்படுத்தி பிறரை இடர்படுத்துகிறான்.

இது போன்ற மந்திரப் பிரயோகங்களை கற்றவர்கள் மிகவும் குறைவு. இவற்றால் பாதிப்பு என்பது உண்மை என்றாலும்கூட ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அதனால் பாதிக்கப்பட வேண்டும் என்ற திசா புத்தி ஒருவன் ஜாதகத்தில் இருந்தால் தான் அந்த பாதிப்பு இருக்கும். ஆனால் ஒரு மனிதன் என்ன எண்ணுகிறான்? அடுத்தடுத்து இரண்டு மூன்று துன்பங்கள் வந்து விட்டாலே யாராவது செய்வினை செய்து இருக்கிறார்களோ? என்று அஞ்சுகிறான். இந்த அச்சத்தை அரைகுறையாக அறிந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவனிடமிருந்து பொருளை பறித்து விடுகிறார்கள். எனவே இப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது குறித்து மனிதன் அஞ்சாமல் முன்பு கூறியது போல நேர்மையான முறையில் உலக வாழ்வை நடத்திக் கொண்டே இறை வழிபாட்டை செய்து கொண்டே தர்மத்தை அதிகப்படுத்திக் கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஒரு மனிதனுக்கு வராது.

இருந்தாலும் குறிப்பாக இதுபோன்ற பாதிப்பு இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் அன்னை பிரத்யங்கிரா வழிபாட்டை செய்து நலம் பெறலாம். நரசிம்மர் வழிபாட்டை செய்து நலம் பெறலாம். சரபேஸ்வரர் வழிபாட்டை செய்து நலம் பெறலாம். அதுபோல் பரசுராம தேசத்திலே அன்னையை (சோட்டானிக்கரை பகவதி) நாடி சென்று குறிப்பாக பௌர்ணமி தினங்களிலே வழிபாடு செய்து நலம் பெறலாம். இது போன்ற வழிபாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்துவதும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தமது இல்லங்களில் இப்பொழுது உரைத்த தெய்வங்களை நாமங்களை பயன்படுத்தி யாகங்கள் செய்வதும் இது போன்ற தீய சக்தியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.

இறைவன் அருளால் மனிதனுக்கு தெரிந்த நியாயம் மனிதனுக்குத் தான் நியாயமாகத் தெரியும். இறைவனுக்கு அது நியாயமாகத் தெரியாது. மனிதனுக்கு உண்மையிலேயே நியாயமாகத் தெரிந்தாலும் நான் நல்லவனாக தானே இருக்கிறேன். நான் தொடர்ந்து துன்பத்திலே இருக்கிறேன் எனக்கு வர வேண்டிய நியாயமான பங்கு வரவில்லையே? கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லையே? என்று மனிதன் வேண்டுமானால் வேதனைப் படலாம். நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனாலும் இறைவன் நியாய தராசிலே ஒருபொழுதும் தவறு நிகழ்வதில்லை. காரண காரியம் இல்லாமல் எந்த துன்பமும் யாருக்கும் வருவதில்லை. இருந்தாலும் இன்னவன் போன்று இருப்பவர்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏதாவது ஒரு ஆலயம் சென்று முருகாப் பெருமானை நல்ல முறையிலே வழிபாடு செய்து வணங்கிக் கொண்டே இருந்தால் நல்ல பலன் உண்டு. சிறுவை என்றொரு ஸ்தலத்திற்கு முடிந்த பொழுது சென்று வழிபாடு செய்து வந்தாலும் நல்ல பலன் ஏற்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.