அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஜாதகத்திலே இராகு கேதுவிற்குள் எல்லா கிரகங்களும் அடங்கி விட்டாலும் அல்லது இராகு கேது லக்னம் (முதல் வீடு) லக்னத்திற்கு அடுத்த இடம் (2 ஆம் வீடு) குறிப்பாக சப்தமஸ்தானம் (7 ஆம் வீடு) அட்டம ஸ்தானம் (8 ஆம் வீடு) விய ஸ்தானம் (12 ஆம் வீடு) ருண ரோக ஸ்தானம் (6 ஆம் வீடு) இது போன்ற இடங்களில் அமர்ந்து அதிலும் சுபாவ சுபர்களாலும் அந்த ஜாதப்படி உள்ள சுப கிரங்களாலும் பார்க்கப்படாமல் இருக்கும் பட்சத்திலே கடுமையான நாக தோஷம் என்று பொதுவாகக் கூறப்படுவதுண்டு. உடனடியாக மனிதன் என்ன எண்ணுகிறான்? பாம்புகளையெல்லாம் கொன்றால் தான் இந்த பாவம் வந்து விட்டதாக எண்ணுகிறான். அப்படியானால் பசுவைக் கொன்றால் பாவம் வராதா? பிறகு எதற்கு இவ்வாறு கூறப்பட்டது? இது ஒரு வகையான அடையாளம். உச்சக்கட்ட பாவ தோஷம் என்பதை அடையாளப்படுத்த அங்கு ஒரு அடையாள சின்னமாக வைத்திருக்கிறார்கள் அவ்வளவே. எனவே அதற்காக அந்த நாக தோஷம் போவதற்குண்டான ஸ்தலங்கள் சென்று வழிபாடுகள் செய்தால் மட்டும் நல்ல பலன் வந்துவிடும் என்று எண்ணி விடாமல் இந்த நாக தோஷத்தால் பாதிக்கப்பட்ட பிற மனிதர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் குறிப்பாக ஒவ்வாமை நோய் பலரை பிடித்து வாட்டுகிறது.
இந்த ஒவ்வாமை நோய்க்குண்டான மருத்துவ சிகிச்சையை தக்க மனிதர்களுக்கு செய்து வந்தாலும் நாக தோஷம் குறையும். அதைப் போல நாக தோஷங்களுக்கு உண்டான ஸ்தலங்கள் சென்று உரிய முறையிலே பரிகாரங்கள் செய்து கொள்வதும் இல்லத்திலே அமர்ந்து அது தொடர்பான மந்திரங்களை உருவேற்றி வருவதும் நல்லப் பலனைத் தருவதோடு இன்னமும் கூறப்போனால் நாக தோஷம் இருக்கக்கூடிய ஜாதகரின் தேகத்தை ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்தால் (இந்த விஷ பொருள்கள் என்று உடலிலே மருத்துவ இயல் கூறும்) அந்த விஷ பொருள்கள் அதிகமாக கழிவுகளாக தேங்கி நிற்கும். எனவே தேகம் (உடல்) சார்ந்தும் விஷத்தை எடுத்துவிட வேண்டும். இவற்றிற்கு உரிய பரிகாரத்தோடு நல்விதமான பூஜைகளோடு நாங்கள் கூறிய தர்மகாரியங்களை செய்து வருவதும் நல்ல பலனைத் தருவதோடு மிகவும் சிறப்பான ஸ்தலம் அந்த காளஹஸ்தி அருகே வேதபுரம் என்று முன் அழைக்கப்பட்டு இன்று திரிந்து போய் வேடியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்தலம் சென்று வழிபட நன்மை உண்டாம்.