ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 328

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

நன்றாக உதவி செய்யக் கூடிய எண்ணம் ஒருவனுக்கு வலுத்து விட்டது. இனி யார் கேட்டாலும் என்ன கேட்டாலும் தருகின்ற மன நிலைக்கு வந்து விட்டான். அவனை பொருத்தவரை தயக்கமின்றி தன் ஆஸ்தி முழுவதையும் அள்ளித் தர சித்தமாகி விட்டான் என்ற நிலையிலே அடுத்த நிலையில் நாங்கள் என்ன கூறுவோம்? அள்ளிக் கொடுத்துக் கொண்டே போ. இவன் நல்லவனா? கெட்டவனா? என்று ஆய்ந்து பார்க்காதே. ஒரு அமைப்பு நல்ல அமைப்பா? தீமையான அமைப்பா? என்றெல்லாம் ஆய்ந்து பார்க்காதே என்று ஆதியில் கூறுவோம் ஏன்? எடுத்த எடுப்பிலேயே சிந்தித்து பார்த்து நீ இவனுக்கு உதவி செய்கிறாயே இவன் நல்லவனா? தீயவனா? நீ தருகின்ற தனத்தை வைத்துக்கொண்டு தவறான வழியில் செலவழித்தால் என்ன செய்வாய்? எனவே ஆய்ந்து (ஆராய்ந்து) பார்த்து செய் என்றால் ஏற்கனவே தர்ம சிந்தனையே இல்லாத மனிதன் சித்தர்கள் வாயிலாக இந்த வார்த்தையும் கேட்டு விட்டால் அவ்வளவுதான். சித்தர்களே பார்த்து செய் யோசித்து செய் என்று கூறி விட்டார்கள் என்று அவன் அணுவளவும் யோசிக்க மாட்டான் நிறுத்தி விடுவான். எனவே முதலில் செய்கின்ற மனநிலைக்கு சிந்தனைக்கு ஒருவன் வந்து விட வேண்டும். அப்படி வந்த பிறகு அடுத்த நிலையாக கட்டாயம் அள்ளி அள்ளி ஒருவன் தருகிறான் என்றாலே ஏமாற்றுகின்ற கூட்டம் வஞ்சகமான எண்ணம் கொண்ட கூட்டமும் அவனை சுற்றி வரத்தான் செய்யும். அது போன்ற நிலையிலே சற்றே நிதானித்து உண்மையில் உதவி தேவைப்பட்டு கேட்கிறானா? அல்லது நாம் தருகிறோம் என்பதற்காக கேட்கிறானா? என்று ஆய்ந்து பார்த்து ஒருவன் தரலாம்.

ஒரு வேளை தந்து கொண்டே வரும் சமயம் ஏதாவது ஒரு அமைப்பைக் குறித்து பிற்காலத்திலே அந்த அமைப்புக்கு அள்ளி அள்ளி தந்தோமே? அங்கு எதுவும் முறையாக பயன்பட்ட மாதிரி தெரியவில்லையே? ஏமாற்றிவிட்டார்களே என்று வருந்த வேண்டாம். அதுபோல் செய்திகள் வந்தாலும் கொடுத்தது கொடுத்ததுதான். கொடுக்க வைத்தது இறைவன். எப்படி சேர்க்க வேண்டுமோ எங்கு சேர்க்க வேண்டுமோ சேர்த்து விடுவார் என்று எண்ணி பயமில்லாமல் குழப்பம் இல்லாமல் தொடர்ந்து ஒரு மனிதன் அற வழியில் சென்று கொண்டே இருக்க வேண்டும். இந்த கருத்தைத்தான் எம்முன் அமரும் ஒவ்வொரு மனிதனுக்கும் கால காலம் கூறிக்கொண்டே இருக்கிறோம். இதுபோல் நிலையிலே செய்த பாவத்தை குறைத்துக் கொள்ளவும் இனி பாவங்கள் சேராமல் விழிப்புணர்வோடு வாழவும்தான் இந்த உடல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெறும் லௌகீக சுகங்களை நுகர மட்டும் அல்ல. லௌகீக சுகங்களை நுகர்வதோடு நாங்கள் கூறுகின்ற இந்த கருத்துகளையும் மனதிலே பதிய வைத்துக் கொண்டால் கட்டாயம் நல்ல பலன் ஏற்படும். இதுபோல் நிலையிலே மிகப்பெரிய ஞானிகளும் மகான்களும் தோன்றி இறைவனின் கட்டளைப்படி மனிதன் எங்ஙனம் வாழ வேண்டும்? எங்ஙனம் வாழக்கூடாது? என்றெல்லாம் வழிகாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.