ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 519

கேள்வி: இராகு திசை சனி திசை அங்காரக திசைகளில் குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் தீய வழிகளில் செல்கிறார்கள். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

பதில்: இறைவனின் கருணைக் கொண்டு நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது நவகிரகங்கள் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக் கொள்ளலாம். எந்த கிரகத்தையும் தீயகிரகம் என்றும் அசுப கிரகம் என்றும் கூறுதல் மகாபாவம். அவரவர்கள் கடமையை இறைவனின் அருளாணைக்கேற்ப செய்கிறார்கள். ஆக ஒருவனின் விதிப்படி எதை அவன் நூகர வேண்டுமோ அது அவனுக்கு வருகிறது. வெற்றியும் புகழும் நல்ல சுகமும் கிடைக்கும் பொழுது இவையெல்லாம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. அதே மனிதனுக்கு திசை மாற்றங்கள் அந்தர மாற்றங்கள் ஏற்பட்டும் பொழுது சில மாறுபட்ட நிகழ்வுகள் துன்பங்கள் நிகழும் பொழுது இறைவா என்னால் தாங்க முடியவில்லை. கிரகங்கள் என்னை பாடாய் படுத்துகிறது என்று புலம்புகிறான். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்ற வழக்கு (சொல்) இருக்கிறது. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவ புண்ணியத்திற்கேற்ப கிரகங்கள் செயல்படும் தருணம் ஒரு மனிதனின் அறியாமையில் அமர்ந்து கொண்டுதான் செயல்பட முடியும். எனவேதான் ஒரு மனிதன் இறைவனை நோக்கி இறைவா எனக்கு செல்வத்தை கொடு இறைவா. எனக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடு இறைவா. என் கடனை தீர்த்துவிடு இறைவா. என் பிள்ளைகள் நன்றாக வாழ வை என்று கேட்பதைவிட இறைவா என் அறியாமையை நீக்கிவிடு இறைவா. எனக்கு தெய்வீக ஞானத்தை கொடு என்று வேண்டிக் கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் அதிலையே தீர்த்துவிடும்.

யோகிக்கும் கிரக பலன்களால் நன்மை தீமைகள் உண்டு. மனிதனுக்கும் உண்டு. அஞ்ஞானிக்கும் உண்டு. ஞானி துன்பங்களால் கலங்க மாட்டான். அஞ்ஞானிதான் கலங்குகிறான். இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக முடியாது என்பதற்காகத்தான் சில வழிமுறைகளை கூறுகிறோம். பொதுவாக நாங்கள் நேரிய (நேரான) வழியைத்தான் காட்டுவோம். ஆனாலும் கூட கிரகங்களால் மனிதர்கள் அவஸ்தைக்கு ஆளாகி துன்பத்திலே ஆழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சில குறுக்கு வழிகளை கூறுகிறோம்.

எத்தனையோ விளக்கங்கள் கூறினாலும் இன்னவன் வினவியதுபோல ஏழரை சனியின் பலனும் அட்டம சனியின் பலனும் அர்த்தாட்டம சனியின் பலனும் ஏனைய இராகு கேது திசைகளும் பொத்தாம் பொதுவாக தீங்கைதான் தருகிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம். நல்ல ஞானத்தையும் நல்ல அனுபவத்தையும் கூட அதன் மூலம் மனிதன் கற்றுக் கொள்ளலாம். இந்த இடத்திலே சுருக்கமாக நாங்கள் கூறுவது என்னவென்றால் இது போன்ற தருணங்களில் மனிதன் கூடுமானவரை மனதை தளர விடாமல் அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று ஒரு நெய் தீபமாவது ஏற்ற வேண்டும். நாங்கள் கூறுவது குறைந்தபட்சம். அது கூட இயலாதவர்கள் இல்லத்திலேயே உடல் சுத்தி உள்ளம் சுத்தி செய்து குறைந்தபட்சம் இரண்டரை நாளிகை இயன்ற வழிபாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக நவகிரக அதிதெய்வ வழிபாடுகளை செய்ய வேண்டும். அடுத்ததாக இது போன்ற ஒரு சூழல் உள்ளவர்கள் சற்றே பொருளாதாரம் உள்ளவர்கள் குடும்பத் தேவைக்காக ஒரு இல்லத்தை புதிதாக வாங்குவதோ வாகனத்தை வாங்குவதோ போன்ற செயல்களில் ஈடுபடாமல் அப்படி வாங்கியதாக எண்ணிக் கொண்டு அந்த தனத்தை எல்லாம் தக்க ஆலயத்திற்கோ தக்க ஏழைக்கு தர்மமாக கொடுத்துவிட்டால் கட்டாயம் கூறுகிறோம் இதுபோன்ற திசா புத்திகளில் ஒரு மனிதனை துன்பங்கள் அதிக அளவில் தாக்காது.

சுருக்கமாக கூறுகிறோம் ஒருவனிடம் சில லகரங்கள் தனம் இருக்கிறது. அவன் ஒரு இல்லம் வாங்க வேண்டும் என்று எண்ணுகிறான். அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. சுயமாக இல்லம் இருந்தால் வசதி என்று அவன் எண்ணுகிறான். ஆனால் அப்பொழுது அதை செய்ய உகந்த காலம் அல்ல. அவன் இல்லம் வாங்கினால் என்னவாகும்? எல்லா சிக்கல்களும் தொல்லைகளும் அந்த இல்லத்தால் வரும். அந்த தனமும் தேவை இல்லாமல் விரையம் ஆகும். ஆனால் அதே தருணத்தில் அந்த தனத்தை சுபா விரயம் தர்ம விரயம் செய்து விட்டால் பாவங்களும் குறையும். அந்த திசா புத்தி அந்தரம் முழுவதும் பெரிய அளவிலே அவனுக்கோ அவன் குழந்தைகளுக்கோ அபாயம் வராமல் இருக்கும். இது ஒன்றுதான் சுருக்கமான வழிமுறையாகும். ஆனால் மனிதன் என்ன எண்ணுகிறான். அன்றாடம் திறமையாக வாழ்கிறேன் என்று தனத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். கனகத்தை (தங்கம்) சேர்த்து வைத்துக் கொள்கிறான். விலை ஏறுகிறது என்று மேலும் மேலும் ஆங்காங்கே மனைகள் வாங்குகிறான். இதை தவறு என்று கூறவில்லை. ஆனால் எமது வழியில் வரவேண்டும் கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச தேவைகளோடு வாழ்ந்து கொண்டு ஏனைய தேவைகளை எல்லாம் யார் யாருக்கு தேவையோ அவர்களுக்கு தாராளமாக பெருந்தன்மையோடு அளித்து விட்டால் கட்டாயம் யாம் இறைவனால் இறைவன் அருளால் கூறுகிறோம். ஏழரை சனியோ அட்டமா சனியோ அர்த்தாட்டமா சனியோ அல்லது வேறு இவள் கூறியது போல உகந்தது அல்லாத திசா புத்திகள் ஏற்புடையது அல்லாத திசா புத்திகள் எந்தவிதமான கெடு பலனையும் மனிதனுக்கு செய்யாது. தர்மத்தின் உச்ச நிலைக்கு எவன் செய்துவிட்டானோ அவரிடம் கிரகங்கள் தன்னுடைய அருளாணையை இறைவன் அருளாணையை முழுமையாக செலுத்தாது. அவனுக்கு துன்பம் வரும். ஆனால் அதை தாங்குகின்றது அவன் செய்த தர்மம் என்பதால் அந்த துன்பத்தை அவன் உணர இயலாமல் போய்விடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.