ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 264

கேள்வி: சிறு குழுந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் குணமடைய மருத்துவ முறைகள் பரிகாரம்:

இறைவனின் கருணையாலே பிணியாகட்டும் வேறு துன்பமாகட்டும் ஒரு மனிதனுக்கு குழந்தைப் பருவத்தில் அல்லது மத்திய காலத்தில் வருகிறது என்றாலே அதுவும் ஒரு வகையான பாவ வினைகளின் எதிரொலிதான். இது ஒருபுறமிருக்கட்டும். வழக்கம் போல் பரிபூரண வழிபாட்டோடு அதிகமதிகம் தர்ம காரியங்களை செய்வதும் வினைப் பயனால் வறுமையில் வாடுகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை தேடிச் சென்று அந்தக் குடும்பமும் குழந்தையும் எண்ணிப் பார்க்க முடியாத மிக மிக உயர்வான கனி வகைகளையும் உயர்ந்த நெய்யினால் தயாரிக்கப்பட்ட சுவையான பண்டங்களையும் தொடர்ந்து வழங்கி வருவதும் இது போன்ற தர்ம காரியங்களை இன்னும் தொடர்ந்து செய்து வருவதும் கட்டாயம் நல்லதொரு பலனைத் தரும். அதோடு இஷ்ட தெய்வத்தை வணங்குவது ஒரு புறமிக்க நவக்கிரங்களை வணங்கி அதிலே இந்த இனிப்புக்கு காரகத்துவம் பெற்ற சுக்ர பகவானையும் வணங்கி வந்தால் கட்டாயம் வினையினால் வந்த பிணியாக இருந்தாலும் மருந்திற்கும் கட்டுப்படும் பிறகு மட்டுப்படும். பிறகு அதனால் எதிர்விளைவுகள் இல்லாமல் போகும்.

கேள்வி: உத்தம் ஆன்மீக உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் 9 உடல்கள் இருப்பதாகவும் தினசரி வாழ்க்கையில் இந்த 9 உடல்களிலும் மாறி மாறி வாழ்வதாகவும் சொல்லப்படுவது பற்றி:

தேகம் தேகத்திற்குள் இருக்கின்ற உயிர் அல்லது ஆத்மா இது தொடர்பாக மனிதன் தாம் தாம் உணர்ந்தவற்றை அவ்வப் பொழுது கூறிவிட்டு செல்கிறான். அவைகள் அனைத்தும் உண்மையென்றோ அல்லது அனைத்தும் பொய் என்றோ எம்மால் கூறவியலாது. சில உண்மைகளும் உண்டு. சில உண்மைக்கு மாறான கருத்துக்களும் உண்டு. ஏனென்றால் அந்தந்த ஆத்மா எந்த அளவிற்கு அதனைப் புரிந்து கொண்டதோ அதனையே சிலருக்கு போதிக்கிறது. எனினும் கூட நீ கூறியது போல அந்த எண்ணிக்கை நவத்தை (ஒன்பது) தாண்டியும் கூட தேகத்தின் பரிணாமம் இருக்கிறதப்பா. அவையெல்லாம் பல விதமான சூட்சும தேகம் என்று அழைக்கப்படுகிறது. அவை ஆத்மாவின் விதவிதமான வடிவங்கள் என்று சுருக்கமாக நீ இத்தருணம் வைத்துக் கொள். இது குறித்து விளக்கமாக தக்க காலத்தில் கூறுவோம்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.