ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 154

கேள்வி: யாகத்தின் போது அபிஷேகம் செய்யும் முறை:

பொதுவாக யாகம் முடிந்த பிறகுதான் அந்தந்த முர்த்தங்களுக்கு அபிஷேகம் அலங்காரம் வழிபாடு செய்வது வம்சாவளியாக வரும் பழக்கம். எம்மை பொருத்தவரை யாகத்திற்கு முன்பும் சிவனுக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் போன்ற வழிபாடு செய்து யாகம் பூர்த்தி அடைந்த பிறகும் ஒரு அபிஷேகம் வழிபாடு செய்வதுதான் பரிபூரணமான ஒரு முறையாகும். அடுத்து யாகம் செய்விப்பவனும் கலந்து கொள்பவனும் மனதை பூப்போல் வைத்திருக்க வேண்டும். அங்கு எதிர்மறை வார்த்தைகளோ எரிச்சலூட்டும் வார்த்தைகளோ வெறுப்பை உமிழும் வார்த்தைகளோ பேசக்கூடாது. உடலையும் உள்ளத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆடைகள் பழையதாக இருந்தாலும் துவைத்து சுத்தமாக இருக்க வேண்டும். அமரும் போது ஏதாவது ஒரு விரிப்பின் மீது அமர வேண்டும். யாகத்தில் கலந்து கொள்ளும் ஆண் பெண் இருவருமே எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு வர வேண்டும். நகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது அறவே நீக்கி விட வேண்டும். மறை ஓதுவோர்கள் மந்திரங்களை உச்சரிக்கும் போது வாயில் இருக்கும் எச்சில் யாகத்தீயிலோ வேறு எந்த யாகப் பொருள்களின் மீதோ விழக் கூடாது.

ஆண் பெண் இருபாலரும் கை கால்களில் மறுதோன்றியை (மருதாணி) இட்டுக் கொள்வது சிறப்பு. உடைகளில் பருத்தி ஆடைகள் ஏற்றது. ஆண்கள் மேல் ஆடை அணியாமல் இருப்பது சிறப்பு. மந்திரங்களை அவசர அவசரமாக மென்று விழுங்கி மென்று விழுங்கி ஏனோ தானோ என்று உச்சரிக்காமல் அட்சர சுத்தமாக ஸ்பஷ்டமாக ஆணித்தரமாக நிதானமாக சொல்வது நல்ல பலனைத் தரும். எந்த ஒரு யாகத்திற்கும் முன்பாக மூத்தோனுக்கு உரிய கணபதி யாகத்தை செய்து மற்றவற்றை பின் தொடரலாம். நெருப்பினால் சமைக்கப்பட்ட உணவைவிட இயற்கை கனிகள் அன்னைக்கு ஏற்றது. எல்லா வகை வாசமிக்க மலர்களையும் குறிப்பாக தாமரை மலர்களை தூய்மையான நெய்யிலே கலந்து கலந்து கலந்து இடுவது சிறப்பு. அதோடு ஒவ்வொரு பொருளையுமே நெய்யோடு கலந்து இடுவது மிகுந்த பலனைத் தரும். யாகப் பொருள்களை சிதற விடாமல் ஒழுங்காக வைப்பது சிறப்பு. ஆலயமாக இருந்தாலும் யாகக் கல்லை அடுக்குவதற்கு முன்னால் அந்த இடத்தை தூய நீரினால் சுத்தி செய்து பசும் கற்பூரம் மங்கலப் பொடி கலந்த நீரினாலும் சுத்தம் செய்து விட்டு யாகக் கல்லையும் சுத்தம் செய்ய வேண்டும். உள்ளே போடும் மணல் உமி போன்றவற்றை சலித்து தூய்மை செய்து பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். எதையெல்லாம் நீரினால் சுத்தம் செய்ய முடியுமோ செய்ய வேண்டும். பல்வேறு மனக்குழப்பத்தில் இருக்கும் மனிதர்களை அதிக காலம் ஒரே இடத்தில் அமர வைக்க முடியாது. நீண்ட காலம் பூஜை செய்வது என்பது மனம் பக்குவப்பட்ட ஆத்மாக்களால் மட்டும்தான் முடியும். யாக மந்திரம் ஒலிக்கும் போது தேவையற்ற பேச்சிக்களும் தேவையற்ற குழப்பங்களும் இருக்கக் கூடாது. எனவே மந்திர ஒலி ஒலிக்கத் தொடங்கி விட்டால் அனைவரும் அமைதியாக கவனிக்க வேண்டும். யாகத்தை சிறப்பாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் செய்ய வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.