ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 335

ஆலய கோபுரம் பற்றி

இறைவன் அருளால் ஆலயம் ஆகமங்கள் என்பது மகான்களாலும் ஞானிகளாலும் வகுக்கப்பட்டு மயன் மற்றும் விஸ்வகர்மாக்களால் அவை படி எடுக்கப்பட்டு பின்னாளில் மனிதர்களுக்கு உரைக்கப்பட்டது. எனவே மனிதன் குடி இருக்கின்ற மனை சாஸ்திரம் என்பது வேறு இறையருள் நிரம்பி இருப்பதாக கருதப்படுகின்ற ஆலய சாஸ்திரம் வேறு. சில விஷயங்களில் ஒத்து வந்தாலும் பல விஷயங்களில் ஆலய விதிகள் வேறு. ஆனால் கலிகாலத்தில் மனிதனிடம் நல் தன்மை விட தீய தன்மை அதிகரித்து கொண்டே வருவதால் ஆலய விதிமுறைகள் எல்லாம் மீறப்பட்டு மறக்கப்பட்டு வருவதால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆற்றல்கள் கிடைக்காமல் போகிறது. தோஷங்கள் அதிகம் ஆகிறது. பொதுவாக பொது விதி மனிதன் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் சாலையானது அகலமாகவும் நல்ல முறையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சாலையை விட பல மடங்கு தான் ஆலயமும் மனிதன் குடி இருக்கும் இல்லமும் உயரமாக இருக்க வேண்டும். எங்காவது அந்த சாலை உயரமாகவும் ஆலயம் அந்த சாலையின் உயரத்தை விட பள்ளமாகவும் இருந்தால் கட்டாயம் அப்பகுதியில் இறையின் அருளாட்சி என்பது குறைவு என்று புரிந்து கொண்டு இதை தக்க முறையில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

பிரகாரங்கள் முறையாக வகுக்கப்பட்டு 1 3 5 7 9 என்று பிரதானமாக ஒற்றை படையில் வைப்பது ஒரு வகையான ஆகமம். அதை போல் அஷ்ட திக்கு பாலகர்களையும் அந்தந்த திசைகளில் முறையாக பிரதிஷ்டை செய்து அங்கு பரிபாலனம் செய்யும் வண்ணம் வைக்கப்பட வேண்டும். இவை பல ஆலயங்களில் பின்பற்றபடுவதில்லை. ஆலயம் என்பது முன்புறம் சென்று விட்டு அதே புறம் தான் வர வேண்டும் என்பது ஒரு விதி. நான்கு புறம் மட்டுமல்ல அஷ்ட திக்குகளும் பாதை வைக்கலாம் தவறொன்றுமில்லை. ஆனால் காலப் போக்கில் இந்த முறை மறைந்து பின்னர் பாண்டியர் காலத்தில் நான்கு முறையும் சோழர் காலத்தில் பிரதானமாக ஒரு வாயில் மட்டுமே திறக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த விதி எதனால் மீறப்பட்டது என்றால் பாதுகாப்பு கருதி எல்லா புறத்திலும் பாதை இருந்தால் அங்கே பாதுகாப்பு பணிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிற்காலத்தில் அந்தந்த வாயில்களெல்லாம் மூடப்பட்டு பிரதான வாயில் மட்டும் மூலஸ்தானத்தை நோக்கி உள்ள வாயில் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மனிதர்களாக தன் ஆட்சிக்காக சொந்த நலனுக்காக மீறப்பட்ட விஷயங்கள். உண்மையான ஆகமம் என்றால் ஒரு ஆலயத்திற்கு குறைந்தபட்சம் நான்கு புற வாயில்கள் இருக்க வேண்டும் கட்டாயம். ஆலயத்தை சுற்றி நெருக்கமாக வீடுகளோ அங்காடிகளோ கட்டாயம் இருக்கவே கூடாது.

ஆலயத்தை சுற்றி பிரதானமாக சோலைகளும் கட்டாயம் பசு மடமும் அதுபோல் ஆலயத்தை சுற்றி அகலமான வீதிகளும் அந்த வீதிகளில் தேரோட்டம் வருவதற்கு உண்டான அந்த சூழல் இருக்க வேண்டும். இதுபோல் ஆலயத்தில் உள்ள ராஜகோபுரம் உயர்ந்தும் மூலஸ்தான கோபுரம் சற்றே சார்ந்து இருப்பதும் ஒரு பொதுவான விதி. இன்னொன்று இதுபோல் நிலை மாறி சில ஆலயங்களில் மூலஸ்தான கோபுரம் உயர்வாகவும் பிரதானமான ராஜ கோபுரம் சற்றே உயரம் குறைவாகவும் கட்டப்படுகிறது. இது வேறு விதமான விதி முறைகளில் உட்பட்டதாகும். இருந்தாலும் இது போன்ற பிரதான ராஜகோபுரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து செல்லும் பொழுது ஒற்றைபடை முறையே பின்பற்றப் படுவதுண்டு. 1 3 5 7 என்று எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக மூலஸ்தான கோபுரம் அமைக்கப்படலாம். எனவே இதுபோல் நிலையோடு நீ கூறியபடி பிரகாரங்களும் அமைக்கப்பட்டு ஒரு ராஜகோபுரமோ அல்லது அடுத்து உள்ள கோபுரத்திலோ உள்ள சாளரங்கள் அடுக்குகள் இதே போல் ஒற்றை எண்ணிக்கை முறையில் அமைக்கப்பட்டு அது எந்த அளவு ஆகமத்தை பின்பற்றப்பட்டு இருக்கிறது. எத்தனை அடுக்குகள் கொண்ட கோபுரம் என்பதை மேலே உள்ள கலசம் அந்த எண்ணிக்கையில் இருந்து அது குறிப்பாக உணர்த்தும் ஆனால் பல இடங்களில் அந்த விதியும் மீறப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஒரு பிரதான ராஜகோபுரத்திலே ஒன்பது அடுக்குகள் கொண்ட சாளரங்கள் துணை கோபுரங்களாக இருக்கும் பட்சத்திலே மேலே ஒன்பது கலசங்கள் வைக்கப்பட வேண்டும். அடுத்த கோபுரத்தில் மூன்று சாளரங்கள் துணை கோபுரங்களாக இருந்தால் மூன்று கலசங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிஎல்லாம் பல இடங்களில் இன்று பின்பற்றப் படுவதில்லை.

எப்படி விஞ்ஞானப்படி ஒரு அலையை கிரகிக்க முறையான அளவுகளில் அந்த அலை உறிஞ்சி குழலை (Antenna) அமைக்கிறார்களோ அப்படி முறைமீறி எல்லாமே உலோகம் தானே என்று எப்படி வைத்தால் என்ன என்று வைத்தால் முழுமையான முறையில் அதாவது முழுமையாக அந்த அலையை உள்வாங்க முடியாது. அதே போல பிரபஞ்ச ஆற்றலை விதி முறைகள் மீறி கட்டப்படும் ஆலயங்களால் முழுமையாக உள்ளே வாங்க இயலாது. அங்கே வருகின்ற நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களால் இறை அருள் பரவுமே தவிர அங்கு உள்ள ஆகம விதிகள் மீறப்படுவதால் அங்கு எந்த நோக்கத்திலே அது கட்டப்பட்டதோ அந்த நோக்கம் காலப்போக்கிலே சிதறுண்டு போகும்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.