ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 365

குருநாதர் அருளிய பொதுவாக்கு

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையாலே மனிதப் பிறவி எடுத்திட்ட பல்வேறு ஆத்மாக்களில் சில குறிப்பிட்ட ஆத்மாக்களுக்கு குறிப்பிட்ட விதமாக குறிப்பாக இதுபோல் ஜீவ அருள் ஓலை மூலம் இறைவனின் அருளாணையின்படி வழிகாட்டவே எமைப் போன்ற சித்தர்கள் இதுபோல் ஓலை மூலம் ஒளி வடிவான அக்ஷரங்களை இதுபோல் இதழை ஓதுவதற்கென்றே தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆத்மாக்களின் மூலம் உள் உணர்வாக சில வழி காட்டுதல்களை இறையின் அருள் கொண்டு காலகாலம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதுபோல் நிலையிலே எத்தனைதான் இறைவன் அருளை பெறுவதற்கு ஒரு மனிதன் முயற்சி செய்தாலும் கூட பழ வினை அதோடு பல வினை ஒரு ஆத்மாவை கரையேற கடைத்தேற விடாது. பாசமும் பந்தமும் ஆசையும் அறியாமையும் ஒருபுறம் ஆன்மீகம் பேசிக் கொண்டே மறுபுறம் மிக மிக சராசரியாகவே நடந்து கொள்ளத் தூண்டும். இதனை யாம் உரைத்து ஒவ்வொரு மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை எல்லாம் புறந்தள்ளி அந்த ஆத்மாவை மேலேற்றுவதற்கு அந்தந்த ஆத்மாவின் அடிப்படை ஜாதக நிலை எமை நாடுகின்ற பொழுது இருக்கின்ற கிரக நிலை தசாபுத்தி அந்தர சூட்சுமம் அதுபோல் பல்வேறு கர்ம கணக்குகளின் அடிப்படையிலே யாம் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆயினும் கூட இவையெல்லாவற்றையும் நூற்றுக்கு நூறு புரிந்து கொள்ள முடியாது என்பது எமக்கும் தெரியும். புரிந்து கொள்ள இயலாது என்பதால் அதுபோல் முன் காலங்களில் எல்லாம் குருவானவன் எதைக் கூறுகிறானோ அதை ஏன்? எதற்கு? எப்படி? என்றெல்லாம் அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்யாமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. அதற்காக அவற்றையெல்லாம் இக்காலத்தில் அப்படியே புகுத்து விரும்பவில்லை. ஏனென்றால் குரு என்ற ஸ்தானத்தில் இருந்து கொண்டு ஏற்கக் கூடாத கருத்துக்களை கூறினால் அதை ஏற்க வேண்டும் என்று நாங்கள் ஒருபொழுதும் வலியுறுத்த மாட்டோம்.

சர்வ சுதந்திரமாக ஒரு ஆத்மாவை சிந்திக்க வைத்து அதன் கர்மக் கணக்கின் அடிப்படையில் மேலேற்றுவதுதான் எமது எண்ணம். என்றாலும் கூட அந்த அதீத சுதந்திரம் ஒவ்வொரு ஆத்மாவையும் திசை மாற்றித்தான் போக வைக்கிறது என்பதை யாங்கள் நன்றாகவே அறிவோம். இதுபோல் நிலையிலே இந்த ஜீவ அருள் ஓலையின் மூலமாக எப்பொழுதும் வாக்கை தந்து கொண்டிருப்பது சித்தர்கள்தான் மகான்கள்தான் என்ற அடிப்படை எண்ணம் அணுவளவும் கூட குறையாமல் அழுத்தந்திருத்தமாக எவனொருவன் நம்பிக் கொண்டிருக்கிறானோ அவனுக்கு யாங்கள் தோன்றாத் துணையாக தொடர்ந்து இருந்து கொண்டே இருப்போம். ஆனால் இங்கு வருவதும் எம்முன்னே அமர்வதும் வாக்குகளைக் கேட்பதும் சுவையான வாக்குகள் என்று விவாதம் செய்வதும் பிறகு புறம் பேசுவதுமாக இருக்கும் ஆத்மாக்களுக்கு நாங்கள் யாது வழி காட்ட இயலும்? பல முறை கூறியிருக்கிறோம் எம்மைப் பொறுத்தவரை அனைவரும் எமது சேய்களே என்று. ஆனால் அந்த அதீத உச்ச நிலை பக்குவம் மனிதர்களுக்கு வந்து விடாது என்பது எமக்குத் தெரியும். உதாரணமாக இந்த இதழை ஓதும் மூடனுக்கு என்ன எண்ணம் இருக்கிறது? வருகின்ற அனைவருக்குமே நல்லது நடக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் தீர வேண்டும். இது ஒரு புறமிருக்க இங்கு வருகின்ற அனைவருமே இந்த இதழை நம்ப வேண்டும் என்று எண்ணுவான். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமல்ல என்பதே உண்மை. ஆனால் இதை வெளிப்புறமாக நம்புவது போல் நடித்துக் கொண்டு உள்புறமாக இவை எல்லாம் சித்தன் வாக்கா? இல்லை பித்தன் வாக்கா? என்று எண்ணிக் கொண்டே ஒருவன் இங்கு உள்ளே நுழைந்தால் அவன் வாயிலிருந்து நம்பிக்கைக்குரிய உரிய வார்த்தைகள் வந்தாலும் அவன் எண்ணங்கள் எதிர்மறையாக இருப்பதால் அந்த அலை இந்த இதழ் ஓதும் மூடனை பாதிக்கும். இனம் தெரியாத வெறுப்பு அந்த ஆத்மாவின் மீது ஏற்படும்.

ஏதோ ஒன்று தடுக்கிறதே? இந்த ஆத்மா இங்கிருந்து அகன்றால் போதும் என்ற எண்ணம் வரும். இந்த போராட்ட நிலையிலே என்னதான் பிரார்த்தனை செய்து ஓலையை எடுத்தாலும் வருபவனின் கர்மக் கணக்கின் அடிப்படையிலே இவன் கர்மக் கணக்கையும் அனுசரித்து எதாவது பரிகாரத்தைக் கூறினாலும் கூட அது முழுமையான ஒரு நிலைக்கு ஆட்படாது. அதனால்தான் ஆதியிலிருந்து நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் சில முறை வந்து பார்த்துவிட்டு இந்த ஏட்டிலே கூறப்படும் விஷயங்கள் எமக்கு ஏற்புடையது அல்ல என்று யாருக்கு தோன்றினாலும் வெளிப்படையாக நேர்மையாக அதை ஒப்புக் கொண்டு விலகிவிட வேண்டும். இங்கும் வருவேன் அங்கும் செல்வேன் மனம் போனபடி பேசுவேன் என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தானும் கரையேறாமல் கரையேற முயற்சி செய்யும் மற்ற ஆத்மாக்களையும் திசை மாற்றிக் கொண்டேதான் இருக்கும். எனவே இதுபோன்ற ஆத்மாக்களுக்கு எதிர்காலத்திலே இறைவன் தன் அருளை அதீதமாக அளித்தால் ஒழிய நாங்கள் வாக்கினை பகர இயலாது.

இதுபோல் அதிகாலை நேரத்திலே இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட ஆத்மாக்களைக் குறித்து எதற்காக கூறுகிறோம்? என்றால் அதுபோல் ஆத்மாக்கள் தன்னிச்சையாக இங்கு வருவதும் போவதும் தவறில்லை என்றாலும்கூட வாஸ்தவமாகவே எம் மீது அதீத பற்று கொண்டு இந்த சுவடியை நூற்றுக்கு நூறு நம்புகின்ற சில நல்ல ஆத்மாக்களும் கூட இப்படிப்பட்ட எதிர்மறை எண்ணம் கொண்ட ஆத்மாவை இங்கு அழைத்து வந்து விடுவார்கள். எம் மீது முழு நம்பிக்கை கொண்டவனுக்காக இன்னவனுக்கும் நாங்கள் வாக்கினை பகர வேண்டியிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக பல முறை கூறியிருக்கிறோம் தர்மங்களின் அடிப்படையில்தான் கலிகாலத்திலே ஒவ்வொரு ஆத்மாவின் பாவத்தை இறைவன் சுத்தி செய்ய விரும்புகிறார் என்று. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் வேண்டும். சுப கிரகங்கள் ஆதிபத்யம் பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும்கூட ஜாதகத்தில் அங்ஙனம் வழியில்லாத ஆத்மாவிற்கும் தொடர்ந்து வாக்குகளைக் கூறி தர்ம வழியில் திசை திருப்ப இறைவன் அருளாணை இடுவதால் நாங்கள் கூறிக்கொண்டு இருக்கிறோம் என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகளாக வாக்குகளைக் கேட்டாலும்கூட எம் முன்னே அமரும்போது மட்டும் ஒருவன் நல்லவனாக இருந்து பயனில்லை. அவன் 60 நாழிகையும் நல்லவனாக இருந்தால்தான் இறைவன் அருளை பெற முடியும். இறைவன் அருளை பெறுவது என்பது ஒருவிதத்தில் எளிமை ஒருவிதத்தில் மிக மிகக் கடினம். எந்த விதத்தில் எளிமை? வனம் சென்று தவம் செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமல்ல. வாழ்க்கையில் இருந்து கொண்டே இறை வழியில் செல்வது என்பது வனம் சென்று தவம் செய்வதை விட கடினம் என்பது எமக்கு தெரியும். சராசரி எண்ணங்கள் அவ்வப்பொழுது வந்து மனிதனை பாடாய் படுத்தும் என்பதும் எமக்குத் தெரியும். அதற்கு இடம் தராமல் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளா விட்டாலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு பிரச்சினை வரும் பொழுது அடுத்த மனிதன் தன்னை காயப்படுத்துகிறான் புறந்தள்ளுகிறான் என்பதைவிட அந்த பிரச்சினையின் இரு பக்கத்தையும் அலசி ஆராய கற்றுக் கொள்ள வேண்டும். வேறுபாடு இல்லாமல் தானே குற்றவாளியாக தானே நீதிபதியாக இருந்து பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தான் எண்ணுவதே சரி செய்வதே சரி மற்றவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் என்று எண்ணினால் அங்கே உண்மை காயப்படுகிறது. பொய்மை மேலேறுகிறது. பாவம் சேர்ந்து விடுகிறது. தேவையில்லாமல் புண்ணியத்திலே பங்கம் ஏற்பட்டுவிடுகிறது. இதை எத்தனை முறை கூறினாலும் மனிதர்களின் ஜாதகப்பலன் அவனை மதி இழக்கத்தான் செய்கிறது. இது ஒருபுறமிருக்க எதிர்காலத்திலே தடையற்ற வாக்குகள் வேண்டும் என்று பலரும் எண்ணுகிறார்கள். நல்ல எண்ணம்தான். இறைவன் அருளால் நாங்கள் முழுமையாக எல்லோருக்கும் வாக்கை ரிஷபத் திங்கள் வளர்பிறையோ அல்லது அதற்குப் பிறகோ என்று முன்னரே கூறியிருக்கிறோம்.

இது ஒருபுறமிருக்க இதற்கு இடையிலே தூய்மையான எமது இந்த இதழ் வழியாக வருகின்ற வாக்குகளை நம்புவதோடு நூற்றுக்கு நூறு (இப்படி கூறுவது கூட சித்தர்களாகிய எங்களுக்கு உடன்பாடில்லை. ஒரு குறிப்புக்காக கூறுகிறோம்) இங்கு நடக்கின்ற அறப்பணிகளிலே எவ்விதமான ஐயமும் இல்லாமல் அணுவளவு கூட சந்தேகம் இல்லாமல் இவ்வளவு தனத்தை தருகிறோமே முறையாக செலவு செய்கிறார்களா? இங்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லையே? இதை நம்பி தரலாமா? உணர்ச்சி வசப்பட்டு தந்துவிட்டு மற்றவர்களிடம் கூறும் போது நீ ஏனப்பா தனம் தந்தாய்? இப்படியெல்லாம் தனம் தந்தால் உன் பாவங்கள் போகும் இறையருள் கிட்டும் என்று யார் கூறினார்கள்? இப்படியெல்லாம் ஒரு நூலில் கூட நாங்கள் படிக்கவில்லையே? என்றெல்லாம் விவாதம் நடக்கும் பட்சத்திலே அதைக் கூட நாங்கள் குறை கூறவில்லை. அப்படிப்பட்ட எண்ணங்கள் கடுகளவு தோன்றினாலும் கூட அதுபோல் ஆத்மாக்கள் இக்குடில் மூலம் நடக்கின்ற அறப்பணிகளுக்கு எதுவும் தரவேண்டாம் என்றுதான் நாங்கள் பலமுறை வலியுறுத்தி வருகிறோம். நூற்றுக்கு நூறு ஐயம் இல்லாத நிலை எப்பொழுது வருகிறதோ அன்று செய்யட்டும் அல்லது அவர்கள் மனம் போனபடி செய்துவிட்டுப் போகட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம். கொடுத்தவனின் பாவங்கள்தான் குறையுமே தவிர அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு எந்த பலனுமில்லை. அதை வாங்கி தர்மம் செய்தவனுக்கு செய்கூலி உண்டப்பா. இங்கு கனகத்தை (தங்கத்தை) நினைவூட்டிக் கொள்ள வேண்டும்.

இதுபோல் நிலையிலே நாங்கள் வாக்குகளுக்கு தடை கூறினால் அவரவர்கள் மனம் போனபடி அதற்கு கற்பனை காரணங்களை பொருளாக்கிக் கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. குடிலும் குடில் சார்ந்த அறப்பணிகளும் தெய்வத்தின் அருளாணையால் சித்தர்களால் நடத்தப்படுகிறது. இவற்றை குறித்து வினா எழுப்ப நமக்கு அருகதையில்லை. முடிந்தால் நம் பங்களிப்பை செய்வோம். இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்வோம் என்பதே ஒரு உயர்ந்த வழியாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.