கேள்வி: கோவில்களில் சிலர் பிரசாதம் வாங்க மறுக்கிறார்கள். ஏனென்றால் கொடுப்பவர்களின் கர்மாக்கள் தங்களைத் தாக்கி விடும் என்று கூறுகிறார்கள் இதனால் பல இடங்களில் மனஸ்தாபம் ஏற்படுகிறது. இதை இப்படி சரி செய்வது?
அடுத்த முறை அனைவருக்கும் கனகத்தை (தங்கத்தை) தானமாக பிரசாதமாக கொடுத்துப்பார். யாருமே மறுக்க மாட்டார்கள். பிரசாதத்தைப் பெறுவதால் பெறுகின்றவனுக்கு எந்தவிதமான பாவமும் தோஷமும் வராதப்பா. இது எல்லாம் அறியாமை மனிதர்களால் ஏற்கப்படுவது. இந்த நிலையிலே பிரசாதத்தைப் பெறுவது என்பது ஒரு உயர்ந்த நிலைதான். உண்மையில் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பொருள் அது (நிவேதனம்) செய்யப்படுவதற்கு முன்னால் சாதம். அது நிவேதனம் ஆன பிறகு பிரசாதம் ஆகிவிடுகிறது. எனவே இதைப் பெறுவதால் எந்தவிதமான கடினமோ கஷ்டமோ பெறுபவனுக்கு வருவதில்லை. எனவே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம். பெறவில்லை என்றாலும் கூட அது குறித்து ஒரு தவறான எண்ணமும் இல்லாமலிருந்தால் அதுவே போதும்.
கேள்வி: அத்வைதத்தை எப்படி நடைமுறைக்குக் கொண்டு வருவது?
எல்லாவற்றையும் சுருக்கமாக குறுக்கு வழியில் கூறுவதற்கு உண்மையில் வாய்ப்பு இல்லையப்பா. ஒரு வகையில் எல்லாம் எளிமை போல் தோன்றினாலும் இன்னொரு வகையில் மனிதனுக்கு எல்லாம் கடினமாகத்தான் இருக்கும். ஏன் என்றால் மனிதனின் மனம் முழுக்க தேகம் சார்ந்த விஷயமாகவே இருக்கிறது. கண் முன்னால் வைத்துக் கொண்டு இதனை விடு என்றால் மனிதனால் முடியாது. மெல்ல மெல்ல முயற்சி செய்துதான் மேலேற வேண்டும். இதற்கு வேறு வழியில்லை. இதற்கு ஒரே வழி தொடர்ந்து பக்தி மார்க்கம் ஒன்றுதான் இக்காலத்தில்.
