ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 178

கேள்வி: சங்கரனுக்கு சரவணகுகன் முருகப்பெருமான் ஓதிய கிரி (மலை):

சங்கடப்பட்ட பல்மாந்தர்கள் (பல மனிதர்கள்) தலைவிதி மாறிய கிரி. சபலங்கள் சலனங்கள் ஓட்டிடும் கிரி. சிறப்பில்லா முன்வினை ஊழ் பயன் சிறப்பாக மாற்றித் தரும் கிரி. சிந்தனையில் அணுவளவும் கட்டமில்லா தன்மையை நல்கிடும் கிரி. சிறப்போ சிறப்பில்லையோ பேதம் பார்க்கா வாழ்கையை ஏற்க வைக்கும் கிரி. சப்த கன்னியர்கள் அன்னையோடு அன்னை அருளால் அருளும் கிரி செப்புங்கால் பஞ்சமும் அடங்க பஞ்சவதனத்தோன் அருளும் கிரி. சிறப்பாக எத்தனை குன்றுகள் இளையவன் (முருகப் பெருமான்) அருளால் இருந்திட்டாலும் குன்றுக்கெல்லாம் உயர் குன்றாய் இன்றும் சான்றாய் அருளும் கிரி. அன்னையோடு ஐயன் அமர்ந்து அன்றும் இன்றும் என்றும் அருளும் கிரி. நீறு (திருநீறு) வேறு நாமம் வேறு என்று அறியாமையால் எண்ணும் மாந்தனுக்கு (மனிதனுக்கு) நீறு (திருநீறு) பூத்த அக்னிபோல் நீரோடு நாமமும் கலந்து வேங்கடகிரியாய் அருளும் கிரி. கட்டிய கணவன் காதில் ரகசியமாய் மனையாள் ஓதினாலும் கட்டிய மனைவி ஓதுகிறாளே என்று தாய் ஓதினாலும் உபயத்தையும் தாண்டி பிள்ளைகளுக்கு எதை ஓதினாலும் மாந்த குரு (மனித குரு) சிஷ்யனுக்கு ஓதினாலும் அனைத்திலும் பேதமுண்டு சுயநல நோக்கமுண்டு. பேதமில்லா தாண்டிய நிலையில் வேதமெல்லாம் ஓர் உருவாக ஓம்கார நாத வெள்ளம் ரூபமாக நேத்திரத்தில் (கண்ணில்) கருணை வெள்ளம் பிரவாகமெடுக்க அறுவதனமும் (ஆறு தலைகள்) ஐவதனமாகி (ஐந்து தலைகளாகி) (வழக்கமாக ஆறு தலைகளுடன் இருக்கும் முருகர் இக்கோவிலில் ஜந்து தலைகளுடன் மட்டுமே இருப்பார்) எழு பிறப்பும் எட்டென விரட்டி உபய வினையும் இல்லாது ஒழித்து சூல நேத்திரத்தோன் திரு மைந்தன் சதுரத்தை நவரசமாய் பிழிந்தெடுத்து அதனையும் தாண்டி பல்வேறு நுட்பத்தை பேதமில்லா ஓதி ஒருமுகமாய் திருமுகமாய் ஒரு நினைவாய் மாந்தன் (மனிதன்) வாழ அருளும் கிரி. ஞானத்தை நல்கும் கிரி. அஞ்ஞானத்தை அடியோடு அழிக்கும் கிரி. பேதத்தை நீக்கும் கிரி. வேதத்தை உணர்த்தும் கிரி. சீரற்ற குணங்களை சீராக்கும் கிரி. நிலைத்த செல்வத்தை நல்கும் கிரி. வாழ்வின் தடைகளை நீக்கும் கிரி. எதிர்பார்த்த விடைகளை நல்கும் கிரி. கர்ம நிலைகளை மாற்றும் கிரி. அக உளைச்சல் ஒழிக்கும் கிரி. பேதம் காட்டா வேதகிரி. ஓம் எனும் பிரணவம் ஒலிக்கும் நாத கிரி. இளையவன் (முருகப்பெருமான்) திருவடி பாதம் படிந்த கிரி. அன்னை நிரந்தரமாய் அருளும் கிரி. ஐயனோடு இன்று அனைவரும் இருக்கும் கிரி ஓதும் கிரி அது ஓதிய கிரி. பேதம் தவிர்த்து பிரணவநாதம் கலந்து ஒலிக்கும் கிரி.

ஓதிமலை முருகனைப் பற்றி தெரிந்து கொள்ளவும் கோவில் மற்றும் மலை புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.