ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 212

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப் படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே (அறிவிலே) படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப் பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?. அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவே தான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறை பக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்ம சிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அது போல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாச வலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதுவே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கி விழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதரிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும் சொந்த நட்புகளுக்கும் பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்த பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற் கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப் பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.