அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:
நம்பிக்கையின் அடிப்படையில் தான் பக்தியே பிறக்கிறது இறைவனை நம்பு என்பதற்காக ஒரு மனிதன் தான் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து ஒதுக்கி கொள்வது என்பது கூடாது. இந்த இறை நம்பிக்கையின் அளவு மூடத்தனமாக ஆகிவிடவும் கூடாது. அதே சமயம் நம்பிக்கையை விட்டு விலகும் வண்ணமும் ஆகி விடக்கூடாது. உடல்நலம் சரியில்லை என்றால் பிரார்த்தனை செய்வதோடு மருந்தினையும் ஏற்க வேண்டும். எப்படி ஒரு மருத்துவன் எழுதிக் கொடுத்த ஒரு மருந்தினை ஒரு பிணியாளன் நம்பிக்கையோடு ஏற்கிறானோ அதேபோலத்தான் ஆலயம் செல்வதும் பிரசாதம் ஏற்பதும் அதோடு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
இறை தரிசனமோ சித்தர்களின் தரிசனமோ கிடைப்பது பிரார்த்தனையினாலும் புர்வ ஜென்ம புண்ணியத்தாலும். பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தானே நம்பிக்கையும் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் பிரார்த்தனையும் ஒருவன் செய்கிறான். அது மட்டுமல்ல எத்தனையோ இடங்களுக்கு இறைவன் சென்று மகான்களின் வடிவிலும் சாதாரண மனிதர்கள் வடிவிலும் வேண்டிய உதவிகளை இன்னும் செய்து கொண்டுதான் இருக்கிறார். ஆனால் ஒரு கடினம் என்னவென்றால் வந்தது இறை தான் என்று அந்த ஆன்மாவால் புரிந்து கொள்ள முடியாது.