ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 384

அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் கால காலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு . துன்பங்கள் எல்லாம் ஒரு கணப்பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும் சதா சர்வகாலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூறமாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விதத்தில்தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே அந்த எதிர்பார்ப்புதான் குறையாக மாறி விடுகிறது. எனவே மனிதர்கள் எதிர்பார்க்கக் கூடிய நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாவிந்தங்களை சரண் அடைந்து இறையோடு சாயுச்சமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

இந்த உலக வாழ்விலே உன்னதங்களை அடைந்தால் நிம்மதி சந்தோஷம் என்று அதை அடைவதற்கு முன்னால் ஒரு மனிதன் எண்ணுவான். அடைந்த பிறகு அப்படி அவனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. மனித மனம் பக்குவம் பக்குவம் பக்குவம் என்று பக்குவத்தின் உச்ச நிலையிலே நின்று பார்க்கும் பொழுது அவன் எதிர் பார்க்கின்ற அனைத்தும் அபத்தமாகத் தெரியும். யாங்கள் மிகத் தெளிவாகக் கூறுகிறோம் என்றாலும் மனிதனால் புரிந்து கொள்ள முடியாத நிலை அவன் கர்மாவில் அடங்கி இருக்கிறது. பெற்று வந்த கர்ம பாவத்தை நுகர்வதற்காக வந்த உடல் சார்ந்த விஷயங்களுக்கு மட்டும் வாழ்வது என்பது மனிதனின் இயல்பான விஷயம். அதை எதிர்த்து இறை நோக்கி செல்வதுதான் மகான்களின் ஆன்ம போதனையாகும். எனவே இயல்பான விஷயங்களுக்காக ஒரு மகானையோ ஞானியையோ மனிதன் நாட வேண்டியதில்லை. அதற்காக இயல்பான விஷயங்களே வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை.

விதி போக்கில் எப்படியெல்லாம் அவை கிட்டுகிறதோ அப்படியே மனிதன் அதை ஏற்றுக் கொள்ளட்டும். ஒரு வேளை அவன் விரும்புவது போல் அது கிட்டாமல் போனாலும் மிகப் பெரிய இழப்பு ஏதும் இல்லை. ஆனால் ஆன்மீக வழியில் வராமல் வரும் சிந்தனை கூட இல்லாமல் பாவம் புண்ணியம் என்கிற பேதம் தெரியாமல் வெறும் விலங்குகளைப் போல் உண்டு உறங்கி சந்ததிகளை உற்பத்தி செய்து வாழும் மனிதர்கள் அனைவரும் எம் பார்வையில் பரிதாபத்திற்கு உரியவர்கள் அவர்கள் இன்னும் எத்தனையோ பிறவிகள் எடுத்துதான் ஆன்ம ஞான வழியை நோக்கி செல்ல இயலும். அது போன்ற மனிதர்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பல்வேறு பிறவிகளில் சேர்த்த ஓரளவு புண்ணியத்தின் காரணமாக ஏதாவது ஒரு பிறவியிலே நல்ல வழியை இறைவன் காட்டிக் கொடுத்தாலும் கூட தடுமாற்றத்தாலும் குழப்பத்தாலும் வேறு வேறு வாழ்வியல் சிக்கலை முன்னிறுத்தி அந்த ஆன்மீக வழியை புரிந்து கொள்ள மாட்டேன் என்றோ அல்லது புரிந்தாலும் அதன் வழியாக வரமாட்டேன் என்று சில மனிதர்கள் வாழ்கிறார்களே அதுதான் விதியின் கொடுமையிலும் கொடுமை ஆகும். எனவே உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக் கூடாது என்பதுதான் எமது கோட்பாடாகும்.

கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையாக ஆற்றி தன்னால் முடிந்த தர்ம காரியங்களை ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மனநிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோஷமும் அவனைப் பின்தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்திலே புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்புணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளைக் கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போம் அப்பா.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.