ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 422

கேள்வி: உச்சிஷ்ட கணபதி ஜேஷ்டாதேவி வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் இதுபோல் இந்த வழிபாட்டை குறித்து மனிதர்களின் கருத்து எப்படியிருந்தாலும் அதனையும் நாங்கள் ஏற்கிறோம். ஆனாலும் கூட பல்வேறு மன உளைச்சல் காரணமாக பூர்வ ஜென்மத்தில் பலரின் தூக்கம் கெடுவதற்கு காரணமாக வாழ்ந்த மனிதர்கள் இந்த ஜென்மத்தில் அத்தனை எளிதாக தூங்க இயலாது. எனவே நல்லவிதமான தூக்கம் இல்லையே? அதனால் உடலில் பலவிதமான உபாதைகள் வருகிறதே? என ஏங்கித் தவிப்பவர்கள் ஜேஷ்டாதேவியை வழிபாடு செய்யலாம். அதோடு மட்டுமல்ல தூங்க வேண்டிய நேரத்தில் தூங்காமலும் தூங்கக் கூடாத நேரத்தில் தூக்கம் வருவதும் தோஷம்தான். அதற்கும் இந்த வழிபாடு முக்கியம். இது எல்லாவற்றையும் விட தூக்கம் என்பது வெறும் உடல் சார்ந்த ஓய்வு மட்டுமல்ல. இந்த உலக துக்கங்களில் இருந்து விடுபட்டு நிரந்தரமாய் தூங்கக் கூடிய அந்த தூக்கமும் நல்விதமாய் வருவதற்கும் ஜேஷ்டாதேவி வழிபாடு உதவும்.

அதைப் போல மூலாதார குண்டலினி யோக சக்தியை எத்தனை முயன்றாலும் எத்தனை பயிற்சி எடுத்தாலும் ஒன்றும் புரிவதில்லை என்று எண்ணக் கூடியவர்கள் இன்னவன் வினவிட்ட விநாயகப் பெருமானை நல்விதமாக வழிபட வழிபட கட்டாயம் அந்த ஆற்றல் ஏற்படுவதோடு எதைத் தொட்டாலும் தடை தடை வந்து கொண்டே இருக்கிறது எத்தனை கவனமாக திட்டமிட்டு முடிவெடுத்தாலும் தடை வந்து கொண்டே இருக்கிறது எல்லாவற்றையும் விட ஒருசில நேரங்களில் முடிவெடுக்கவே முடியவில்லை. இதை எடுப்பதா? அதை எடுப்பதா? இப்படி செய்தால் இந்தவிதமான பிரச்சினை வருகிறது. அப்படி ஒரு முடிவு எடுத்தால் வேறு விதமான பிரச்சினை வருகிறது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகின்ற மனிதர்களும் இதுபோல் விநாயகப் பெருமானை வணங்க நலமாம். இவ்வாறு இந்த விநாயகப் பெருமானை வணங்கினால் இது கிடைக்கும். வேறு விநாயகப் பெருமானை வணங்கினால் கிடைக்காது என்று எண்ணவேண்டாம். ஆத்மார்த்தமாக எங்கு சென்று வழிபாடு செய்தாலும் மேற்கூறிய பலன்கள் உண்டு. அங்கே மனம்தான் முக்கியம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.