ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 578

கேள்வி: நாகதோஷத்தைப் பற்றி

இறைவனின் கருணையால் சர்ப்ப தோஷம் நீங்குவதற்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை யாகம் மற்றும் சர்ப்ப தோஷ நிவர்த்தி தரும் சில ஆலயங்கள் சென்று சில குறிப்பிட்ட பூஜைகள் செய்வது என்றெல்லாம் சில வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்கே சர்ப்பம் என்பது ஒரு அடையாளம். குறியீடு மனிதர்கள் காலாகாலமாக நம்புவதைப் போல நாகங்களை கொன்றதால் அல்லது கொல்வதால் மட்டும் இந்த நாக தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்பது ஒரு தவறான கருத்தாகும். அப்படியானால் ஆட்டையும் மாட்டையும் கொன்றால் தோஷம் வராதா? எந்த உயிரை கொன்றாலும் பாவம்தான் தோஷம்தான். அதற்கு எத்தனை அடிப்படை நியாய வாதங்கள் கற்பித்தாலும் அது பாவமாகத்தான் வரும். எனவே பின் நாகம் அல்லது நாக தோஷம் என்று எதற்காக அதனை ஒரு குறியீடாக ஜாதகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் உச்ச கட்ட பாவத்தின் அடையாளம் நாக தோஷம்.

அதே போல பிரம்மஹத்தி எனப்படுவது மேலோட்டமாக பார்த்தால் பிரம்மாவை யாராவது ஹத்தி செய்ய இயலுமா? ஒருவேளை அப்படி ஹத்தி செய்தால் அது எந்தளவுக்கு பாவமாக இருக்குமோ அந்த அளவுக்கு பாவம் என்பதன் அடையாளம் தான் இந்த வார்த்தை. எனவே இது போன்ற சொல்லாடல்களை எல்லாம் நேருக்கு நேர் பொருள் கொள்ளாமல் நிறைய பாவங்கள் அந்த ஜாதகத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நிறைய தர்ம காரியங்கள் முதலில் செய்ய பழக வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தல யாத்திரைகள் செல்ல பழக வேண்டும். ஏனென்றால் இந்த பாவங்கள் ஒரு பிறவியில் ஏற்பட்டிருக்காது. பல்வேறு பிறவிகளில் ஏற்பட்டு ஏக்தாவது ஒரு பிறவியில்தான் அதை நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பை கிரகங்கள் மூலம் இறைவன் அனுமதி தருவார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஆத்மா எந்தெந்த ஊரில் பிறந்திருக்கும்? எந்தெந்த வகையான பிறப்பை எடுத்திருக்கும் என்பதெல்லாம் தெய்வீக சூட்சுமம். எனவே பல்வேறு நாடு நகரங்களுக்கு சென்று அங்கு உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்து அந்த ஆலயத்தை சுற்றி உள்ள ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து ஆலயத்திலேயே தொண்டு செய்யும் அந்த ஊழியர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து அந்த ஆலய திருப்பணிக்கு உதவிகளை செய்து இப்படியெல்லாம் சிறிது சிறிதாக பாவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வதும் பசுக்களை தானமாக தருவதும் பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும் இன்னொரு புறம் எல்லா வகையான தர்ம காரியங்களையும் அவனவன் சக்திக்கேற்ப செய்வதுமாக இருக்க வேண்டும். எனவே இப்படியே நாக தோஷத்தின் குறியீடாக நாகத்தை வைத்த நிலையிலேயே ஒரு சில தருணங்களிலே மெய்யான நாகத்தை வைத்து பூஜை செய்கின்ற காலமெல்லாம் இருந்தது. ஆனால் பொதுவாக மக்கள் அஞ்சுவார்கள் என்பதால் தான் அந்த குறியீட்டை பஞ்சலோகத்திலோ கனகத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து அதற்கு அபிஷேக ஆராதனை செய்து அதனை இவ்வாறு செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றெல்லாம் முறையை பின்பற்றப்பட்டன. ஆனால் எம்மை பொறுத்தவரை அப்படி செய்வத விட நாக தோஷத்திற்கு நாங்கள் முன்பு கூறிய தர்ம காரியங்களையும் தல யாத்திரைகளையும் செய்து கொண்டே நாக தோஷ நிவர்த்தி தலங்கள் சென்று முடிந்த பூஜைகள் செய்து கொண்டு ராகுவிற்கும் கேதுவிற்கும் ராகுவின் அதிதெய்வமான துர்க்கைக்கும் கேதுவின் அதிபதியான விநாயகருக்கும் என்னென்ன வகையான வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் செய்ய முடியுமோ அன்றாடமோ சப்த தினத்தில் ஏக தினமோ பட்சமோ திங்கள் ஒரு முறையோ செய்து கொண்டே இருப்பதும் இவை எதுவுமே செய்ய முடியாத மனிதர்கள் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து வாய்ப்பு உள்ள பொழுது நவகிரக காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் அதி தெய்வ காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் இதையெல்லாம் தாண்டி குறிப்பாக நாக தோஷம் கேது தோஷம் என்பதால் ராகு கேது காயத்ரி மூல மந்திரங்களையும் துர்க்கை விநாயகர் காயத்திரி மூல மந்திரங்களை அதிக பட்சம் தினத்திற்கு எத்தனை உருவேற்ற இயலுமோ அப்படி உருவேற்றுவதும் அந்த தோஷத்தை குறைக்கின்ற பக்தி பூர்வமான வழிகளாகும்.

குறிப்பாக எல்லா வகை தர்மங்களிலே பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.

வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தில் செய்து வைத்து ஏதோ மாண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு சில துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் மிக எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம் இருந்தாலும் நாங்கள் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு இந்த நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் எக்தாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிருக்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தானமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாத தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.