ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 311

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

காலம் மாற மாற மனிதன் பயன்படுத்தக்கூடிய பொருள்கள் மாறும். பொருள்கள் மாற மாற அந்த பொருள்களின் தன்மைக்கு ஏற்ப பயன்படுத்தக் கூடிய மனிதனின் வாழ்க்கை மாறும். வாழ்க்கை முறை மாற மாற அவன் எண்ணங்களும் அதை ஒட்டி செயல்படும். எண்ணங்கள் அப்படி செயல்பட செயல்பட அதன் விளைவுகள் பெரும்பாலும் அவனுக்கு எதிராக தான் இருக்கும். அதன் அடிப்படையில் ஆசைகள் பல கிளை விட்டு பரவிக் கொண்டே இருக்கும். அந்த ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மனம் துடிக்கும். அப்படி துடித்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள செயல்படும் தருணம் அதற்கு எதிராக வரும் தடைகள் அனைத்தையும் மனம் வெறுக்கும் தடைகள் ஏற்படுத்துகின்ற மனிதர்களை வெறுக்கும். அதனாலும் பாவம் சேரும். எனவே நீக்கமற நிறைந்திருக்கின்ற பரம்பொருளை எல்லாம் இறைவா பாவம் போக்கத்தான் அருள வேண்டும். உனது திருவடியை பற்றிக்கொண்டு இந்த சிறிய ஆன்மா இந்த கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறது. இந்த கூட்டையை தான் என்று எண்ணுகிறது. இந்த கூடு வேறு இந்த கூட்டுக்கு மேல் மனிதன் ஆடையை அணிந்து கொள்கிறான் மானம் காக்க என்று என்றாவது ஆடை சேதம் அடைந்து விட்டால் நான் சேதம் அடைந்து விட்டேன் என்று கூறுவானா? என் ஆடை தான் சேதம் அடைந்து விட்டது இனி புதிய ஆடையை போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுவான். ஏனென்றால் தன்னுடைய தேகம் வேறு தன்னுடைய தேகத்தையும் மறைத்திருக்க கூடிய ஆடை வேறு என்பது அவனுக்கு வெளிப்படையாக தெரிகிறது.

தேகத்தை சேதப்படுத்தினால் அவனுக்கு உணரக்கூடிய தன்மையாக இருக்கிறது. ஆனால் அவன் ஆடைக்கு சேதம் ஏற்பட்டால் அதனால் என் உடலுக்கு ஒன்றும் இல்லையே என்பான். ஆனால் ஆன்மாவின் மேல் படிந்து உள்ள இந்த தேகம் எனும் ஆடை அது விலங்கு ஆடையோ பட்சி (பறவை) ஆடையோ விருக்ஷ (மரம்) ஆடையோ எல்லாவற்றுக்குள்ளும் ஒரு உயிர் ஒளிந்து கொண்டு இருக்கிறது. சிறைபட்டு கிடைக்கிறது. இந்த தேகத்தை வருத்தினால் ஏதாவது ஆபத்துக்கு ஆளாக்கினால் சட்டை பழுதடைந்தால் தானே பழுதடைந்து விட்டதை போல புலம்புவதை போல மனிதன் புலம்புகிறான். அது எப்படி சட்டையை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கவில்லை ஆனால் தேகத்தை காயப்படுத்தினால் எனக்கு வலிக்கிறதே காரணம் என்ன?

விளாம் கனி இன்னும் பழுக்கவில்லை. பழுத்து விட்டால் ஓட்டை விட்டு விலகி அது உள்ளே தனியாக ஆட துவங்கும். எனவே அஞ்ஞானம் எங்கிருந்து வந்தாலும் அதனை தவிர்க்க வேண்டும். கூறுவது அன்புள்ள தாயே ஆகினும் மனைவியே ஆகினும் தந்தையே ஆகினும் சகோதரன் ஆகினும் பிரிய நண்பன் ஆகினும் அல்லது பிள்ளைகள் ஆகினும் கூறுவது மெய்யான மெய்யான மெய்யான ஞான வாழ்வுக்கு ஆதரவான கருத்தா அல்லது வெறும் உலகியல் கருத்தா என்று பார்த்து அப்படி இல்லை என்றால் அந்த கருத்தை புறக்கணித்து நான் இவ்வழி வரமாட்டேன் எவ்வழி மெய் வழியோ அவ்வழியே வருவேன் என்று திடம்பட மனதிற்கு கூறி வர வேண்டும். இது போல கருத்தினை மனதிலே அசைபோட அசைபோட வாழ்வியல் துன்பங்கள் என்பது மனிதனை என்றுமே வாட்டிக்கொண்டே இராது(இருக்காது).

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.