ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 499

கேள்வி: அரசாங்கம் செய்ய வேண்டிய சேவைகளை தனியார் செய்து கொண்டிருக்கிறது. தனியார் செய்ய வேண்டிய வியாபாரத்தை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதுஅப்படியே மாறி விட்டது. உதாரணமாக கல்வி என்ற சேவையை அரசாங்கம் மட்டுமே செய்ய வேண்டும் அதை தனியார் செய்கிறார்கள். மது விற்பனை தனியார் செய்ய வேண்டும் அதனை அரசாங்கம் செய்கிறது. இது எப்போது மாறும். இதற்கு ஏதாவது வழி உண்டா?

இறைவனின் கருணையாலே இதுபோல் இயம்புவது யாது என்றால் யாங்கள் பலமுறை சிலருக்கு கூறியதை நினைவூட்டுகிறோம். ஒரு தீய பழக்கம் அது தப்பு மதிமயக்கும் பானத்தை அருந்துவது என்பது எக்காலத்திலும் சித்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத பழக்கம்தான். ஆனால் இதே பழக்கத்தை வைத்திருக்கும் மேல் தேசத்தை மனிதர்கள் என்றாவது இதனால் பாதிக்கப்படுகிறார்களா? அங்கு யாராவது இந்த மதிமயக்கம் பானத்தின் அங்காடிகளை எல்லாம் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்துகிறார்களா? அதற்காக அதனை யாங்கள் அங்கீகரிக்கவில்லை. எனவே எந்த ஒரு தீய பழக்க வழக்கமும் தனிமனித வாழ்க்கையை அந்த சமுதாயத்தை பாதிக்காத வண்ணம் கல்வியை அறிவை ஒழுக்கத்தை செயல்பாட்டை தொழிலை சமுதாயத்தை பாதிக்காத நிலையில் வைத்துக் கொண்டால் எல்லாவற்றையும் மனிதன் ஏற்றுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு இல்லாமல் வெறும் மிருகக் குணம் கொண்டு வாழ்கின்ற மனிதர்களுக்கு கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன.

இது ஒருபுறம் இருந்தாலும் கூட ஒரு சமுதாயம் என்பது ஒரு கனி என்று வைத்துக் கொள்வோம். முன்பே கூறியது போல அந்தக் கனி கெட்டு விட்டால் அதிலிருந்து எந்த ஒரு துண்டங்களை அறுத்தாலும் அந்த துண்டமும் கெட்டுப்போன துண்டங்களாகத்தான் இருக்கும். எனவே சமுதாயத்தில் இருந்து அந்த சமுதாயத்தை ஆள வருகின்ற மனிதன் சரியில்லை என்றால் அந்த ஒட்டுமொத்த சமுதாயம் சரியில்லை. இதிலே யாராவது ஒரு தனிமனிதனை மட்டும் குற்றம் கூறி எந்தவிதமான பலனும் இல்லை. இது அறிவு பூர்வமான சிந்தனை. கர்ம பார்வையிலே பார்க்கும் பொழுது ஒரு சமுதாயம் இந்த மாதிரியான ஒரு சூழலில் இருக்க வேண்டும் என்று விதி அமைப்பு இருக்குமானால் அப்படித்தான் அந்த சமுதாயம் இருக்கும் என்பது நிலையாகும். பரிபூரண பக்தியும் ஞானத் தெளிவும் வளர்த்துக்கொள்ள மனிதன் முயற்சி செய்தால் இன்னவன் கூறிய நிலை தன்னால் மாறிவிடும். ஒவ்வொரு மனிதனுமே இது தக்கது இது தகாதது. இதனை ஏற்கலாம் இதனை ஏற்க கூடாது என்று எந்த இடத்தில் அறிவை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் அறிவை பயன்படுத்தி எந்த இடத்திலேயே உணர்வை பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் உணர்வே பயன்படுத்தி சரியான முறையிலே நேர்மையான குணத்தோடு வாழ முயற்சி செய்தால் கட்டாயம் எதிர்பார்த்த நற்பலன்கள் ஏற்படும். ஏற்பட விரைவில் வாய்ப்பும் இருக்கிறது சற்று முயற்சி செய்தால் போதும். கல்வி என்ற பெயரில் அறிவை திணிப்பதை விட ஒழுக்கத்தை திணித்தால் தனிமனித கட்டுப்பாட்டை திணித்தால் பொது இடங்களில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற போதனையை திணித்தால் எதிர்கால சமுதாயம் சிறப்பாக வளரும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.