ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 261

கேள்வி: வைணவ ஆலயங்களில் தீர்த்தம் சடாரி துளசி போன்றவற்றையும் சிவ ஆலயங்களில் விபூதியை பிரசாதமாக வழங்குவதின் தாத்பர்யம் என்ன?

சில சிவ ஆலயங்களிலும் சடாரி வைக்கப்படுவது உண்டப்பா. எல்லாவற்றிலும் மனிதனின் வித்தியாசமான சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். நீ இப்படி செய்கிறாயா? நான் இப்படி செய்யமாட்டேன் என்பது போன்ற மனோபாவத்தில் வருவதுதான். இருந்தாலும் கூட சில ஆகமங்களுக்குப் பின்னால் பலவிதமான மகான்களின் நீதி போதனைகள் அர்த்தங்கள் அடங்கியிருக்கின்றன. சகலமும் ஒரு தினம் ஒன்றுமில்லாமல் அழியப் போகிறது. அப்படி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது நெருப்பு. அந்த நெருப்பை தன்னகத்தே கொண்டவர் இறைவன். அந்த இறைவன் நெருப்பு வடிவமாக இருக்கும் பொழுது சிவனாக முக்கண்ணனாக லிங்க ரூபியாக இருக்கிறார். அந்த அக்னி எரிந்து கொண்டே இருக்கிறது. எரியும் அக்னியிலிருந்து என்ன வரும்? சாம்பல் வரும். எனவே அங்கே விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. அந்த விபூதி எரியும் அக்னியிலிருந்து வந்தாலும் விபூதி என்பது அக்னித் தன்மையும் கொண்டது. குளிர்ந்த தன்மையும் கொண்டது. அதே சமயம் தூய்மையான விபூதியை ஒருவன் நெற்றியிலே அதிகமாக இட்டால் கபாலத் தொல்லைகள் (தலைவலி) குறைவதோடு கபாலத்தின் உள்ளே இருக்கும் நீர் உறிஞ்சப்பட்டு பாதுகாப்பாக வெளியேறும். இதனால் சீதளத் தொல்லைகள் இல்லாமல் வாழலாம். அதனால்தான் அக்னி ஸ்வரூபமாக இருக்கக்கூடிய அந்த லிங்க ரூபிக்கு குளிர்ந்த வில்வத்தை ஆராதனை செய்ய பயன்படுத்த சொல்லி மகான்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

அதே இறை குளிர்ந்த ரூபமாக மஹாவிஷ்ணுவாக அங்கே காட்சி தருகிறார். யோக நிலையிலே சயன நிலையிலே நின்ற நிலையிலே இருக்கிறார். அங்கு சதா குளிர் சதா நீர் எனவே அங்கு வெது வெதுப்பும் வெப்பமும் தேவை என்பதால் அதுபோல் துளசி தரப்படுகிறது. யாருக்கெல்லாம் சீதளத் தொல்லை இருக்கிறதோ நுரையீரலிலே நீர் கோர்த்துக் கொண்டு இருக்கிறதோ நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருக்கிறதோ சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு தூய்மையான நீரை இட்டு அதை ஏக நாழிகை அல்லது உபய நாழிகை இயன்றால் சில நாழிகைகள் வைத்திருந்து பலமுறை தன்வந்திரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும் துளசி தளத்தையும் உண்டால் கட்டாயம் தேகம் (உடல்) நலமாக இருக்கும். எனவே எல்லா மருத்துவ முறைகளும் எல்லா விதமான மனிதனுக்குத் தேவையான பொருள் பொதிந்த ஆன்மீக உண்மையும் கொண்டதுதான் இறை வழிபாடு. இவையெல்லாம் சிறு குறிப்புதான். இன்னும் போகப் போக உள்ளே அதிக விஷயங்கள் இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் ஆய்வு செய்து பார்த்தால் ஒவ்வொரு இறை வழிபாட்டின் நுட்பங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவம் நன்றாகவே புரிபடும். சிக்கல் இல்லாமல் வாழ்வு இல்லை சிக்கலையெல்லாம் மெதுவாக களைந்தால்.

ஒரு கடினமான ஓடு உடைய தேங்காய் இருக்கிறது. அந்தக் கடினத்தையும் மோதி முயற்சி செய்து உடைத்து விட்டால் தேங்காயின் வெண்மையான தன்மை தெரிகிறது. எனவே அந்த இறை தத்துவமும் சிக்கல் போலவும் கடினம் போலவும் இருந்தாலும் கூட போராடி அதனை புரிந்து கொண்டால் இறுதியில் அந்த தேங்காயின் தன்மை போல் இறை பொருள் என்பது மனிதனுக்கு புரியவரும். அதைப் போல் அக்னி ஸ்வரூபமாக இருக்கக் கூடிய தெய்வத்திற்கு இன்னொரு அக்னியைக் காட்டி இந்த அக்னியும் ஒன்று நீயும் ஒன்று அக்னியாகிய உன் தன்மையை நாங்கள் தொட இயலாது. ஆனால் உன் சார்பாக இந்த சிறு அக்னியை உனக்கு காட்டிவிட்டு அந்த அக்னியை நாங்கள் தொட்டு ஆராதனை செய்கிறோம் என்றுதான் தூய்மையான கற்பூர தீபமும் நெய் தீபமும் காட்டப்படுகிறது. இவையெல்லாம் பல மனிதர்கள் அறிந்த உண்மைதான். இவற்றுக்குள்ளேயே ஆழ்ந்து விடாமல் ஒரு மனிதன் தனக்குள் இருக்கக் கூடிய இறையையும் தனக்குள் உள்ள பாவங்களையும் வென்று எண்ணங்களில் எல்லா விதமான நல் சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் கட்டாயம் இறையருள் அது எந்த நிலையாக இருந்தாலும் அவன் எந்த வடிவை வணங்கினாலும் அவன் விரும்பும் வடிவில் அவன் விரும்பும் நிலையில் அவனுக்கு இறைவனால் காட்சி தரப்படும் அருளப்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.