ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 214

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இந்த மனித சிந்தனைகளும் மனித எண்ணங்களும் காலகாலம் பெரும்பாலும் மனிதன் பட்ட அனுபவத்தைப் பொறுத்தும் உடல் வலிமை அவனின் சமகால பதவியின் நிலைமை கையிலுள்ள செல்வத்தின் அளவு இவற்றை பொறுத்தே மனித ரீதியாக மனிதனுக்கு மனிதன் அந்த எண்ணங்களும் உரு பெறுகிறது. மாற்றம் பெறுகிறது. ஒரு ஞானியின் பார்வையில் கூறுவதென்றால் மனிதன் எண்ணுகிறான் மதியால் (அறிவால்) சிந்தித்து மதியை (அறிவை) கூர்மையாக்கி விசாலமாக்கி ஆழமாக்கி நன்றாக பயன்படுத்தினால் மனிதன் நன்றாக வாழலாம் என்று. இதை நாங்கள் ஒரு பொழுதும் மறுப்பதில்லை. ஆனால் இறைவன் தந்த மதியை அறிவை பரிபூரணமாக பயன்படுத்துவதற்கு உண்டான சூழலை அவனுக்கு விதிதான் தரவேண்டும். இல்லையென்றால் கடுமையான போராட்டத்தோடு வாழவேண்டிய நிலைமையும் அறியாமையில் சிக்கி வாழ வேண்டிய சூழலும் ஏற்படும். அங்கனமாயின் எத்தனையோ குணக்கேடானவர்கள் பண்பாடற்றவர்கள் புத்தி கூர்மையில் சிறந்து விளங்குகிறார்களே?அவர்களுக்கு விதி சாதகமாக இருக்கிறதா? நல்ல குணம் கொண்ட ஒரு மனிதனுக்கு அறியாமை மதியில் அமர்ந்து விட அதனால் அவன் எடுக்கும் முடிவுகளெல்லாம் தவறாக முடிந்து அவன் துயரில் ஆழ்வதற்கு வழிவகுக்கிறதே? இதுதான் விதியின் வேலையா? என்றெல்லாம் மனிதனுக்கு ஐயம் (சந்தேகம்) எழலாம். இதை மனிதர்கள் மறுத்தாலும் ஏற்றுக் கொண்டாலும் உண்மைதான். எல்லாம் விதிதான் என்றால் மதியின் தன்மைதான் என்ன? எதற்காக மனிதனுக்கு மதி (அறிவு) தரப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் முயன்றால் தன்னுடைய மதியின் ஆற்றலைக் கொண்டு கடுமையான சிந்தனையை வளர்த்துக் கொண்டு தன் வாழ்க்கையில் எதிர்படும் துன்பங்களையெல்லாம் விலக்கிக் கொள்ள இயலாதா? என்றால் தாராளமாக. அதை யாரும் செய்ய வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. இதை வேறு வகையில் கூறப் போனால் இப்பொழுது மனிதர்களுக்கு எந்தளவு மதி இருக்கிறதோ அதே அளவு மதிதானே சில ஆண்டுகளுக்கு முன்பும் பல ஆண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்க வேண்டும்? இப்பொழுது மனிதன் விஞ்ஞான பூர்வமாக உணர்ந்த விஷயங்கள் ஏற்கனவே இந்த நில உலகில் (பூமியில்) உள்ளதுதான்.

இறைவன் அருளால் செப்பு சுருளுக்குள் காந்த சக்தியை பாய்ச்சினால் மின்சாரம் வரும் என்றால் இந்த விதி 1000 ஆண்டுகளுக்கும் முன்பும் பொருந்தும் அதற்கு முன்பும் பொருந்தும். ஆனால் அப்பொழுதுள்ள மனித மூளைக்கு இந்த கருத்து ஏன் எட்டவில்லை? எனவே ஏற்கனவே உள்ள விதிமுறைகள் எல்லாம் இன்னின்ன காலத்தில் இன்னின்ன மனித மூளையின் மூலமாக உலகிற்கு வரவேண்டும் என்று இதன் மூலம் தெரிய வருகிறது. அப்படியானால் நடப்பது நடந்து விட்டுப் போகட்டும். நான் ஏன் சிந்திக்க வேண்டும்? உழைக்க வேண்டும்? என்றெல்லாம் இருக்கலாமா? என்றால் அது குதர்க்க வாதத்தைக் குறிக்கும். அப்படியொருவன் எண்ணினாலும் கூட விதி அவனை இருக்க விடாது என்பது வேறு விஷயம். ஆன்மீகம் என்றால் எப்பொழுதுமே ஒரு மனிதன் அந்த ஆன்மீகத்தை தன் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து அது பொருந்தாத நிலையாக இருக்கும் பட்சத்தில் ஆன்மீகத்தை ஏற்க மறுக்கிறான். அதைப் போல மெய் ஞானத்தையும் அவன் ஓரளவு கற்ற விஞ்ஞானத்தையும் பொருத்திப் பார்த்து அவனுடைய அறிவிற்கு எட்டாத நிலையில் அவனால் எதையும் ஏற்க முடியவில்லை. நாங்கள் கூறுகின்ற கருத்தாக இருந்தாலும் இன்னும் மகான்களின் ஞானக்கருத்தாக இருந்தாலும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்றோ நாங்கள் கூறவில்லை.

ஓரளவு பாவங்கள் அற்ற நிலையில் எம்மை (அகத்திய மாமுனிவர்) நோக்கி வருகின்ற ஆன்மாக்களுக்கு வழிகாட்டி மெய் எது? மெய்யிலும் மெய் எது? என்பதை உணர்த்துவதற்காகத்தான் இறைவனின் கட்டளை எம் போன்ற (அகத்திய மாமுனிவர்) மகான்களை இந்தக் கலியில் (கலியுகத்தில்) இது போன்ற நிலையில் வாக்கினை கூற அருளாணையிடுகிறது. ஆயினும் கூட நாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு அதனைக் கூறுகிறோம்? ஒரு வாக்கு எதற்காக உரைக்கிறோம்? ஒரு வாக்கை எதற்காக மறுக்கிறோம்? ஏன் மெளனம் காக்கிறோம்? ஏன் பின்னர் உரைக்கிறோம் என்று கூறுகிறோம்? என்பதை சற்றே கடுகளகாவது இறைவனை எண்ணி சிந்தித்துப் பார்த்தால் இறைவனே அவன் சிந்தனைக்குள் சிலவற்றை உணர்த்துவார். ஆனாலும் கூட அறியாமையின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதன் இதையெல்லாம் நினைத்து பார்ப்பதேயில்லை.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.