ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 539

கேள்வி: கச்சியப்பர் இயற்றிய ஐங்கரன் பாடலுக்கு விளக்கம் தர வேண்டும்:

திகட சக்கர செம்முகன் ஐந்துளான்
சகட சக்கர தாமரை நாயகன்
அகட சக்கர விண்மணி யாவுறை
விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்

முதல் அடி: திகட சக்கர செம்முகன் ஐந்துளான்

திகட சக்கரம் என்கிற வார்த்தை திகழ் சக்கரம் என்று இருக்கக் கூடியது. அந்த வெண்பாவின் இலக்கணத்திற்காக திகட சக்கரம் என்று திரிந்திருக்கிறது. தொல்காப்பியத்தில் இந்த குறிப்பு இல்லை என்பதால் இதனை ஏற்க இயலாது என்று புலவர்கள் வாதிட இதுபோல் அந்த சொல்லை யான் பிரயோகப்படுத்தவில்லை என்றார் கச்சியப்ப சிவாச்சாரியார்.

இங்கே ஒன்றை நினைவு கூற வேண்டும். கச்சியப்ப சிவாச்சாரியார் இறைவன் அருளால் கந்த புராணத்தை இயற்றும் சமயம் ஒவ்வொரு தினமும் ஓலையிலே எழுதி எழுதி அதனை இறைவன் திருவடியில் வைத்து விட்டு சென்று விடுவார். இறைவன் அந்த இரவு முழுவதும் தம் அருட்பார்வையால் அதனை திருத்தி திருத்தி மறுதினம் அதனை கச்சியப்பரிடம் ஒப்படைப்பார். எனவே இறைவனே ஒப்பு நோக்கிய நூல் கந்தபுராணம் என்பதால் மேல் சொன்ன அந்த சொல் நான் சொல்லவில்லை எனக்கு இறைவனே உணர்த்தியது என்று கச்சியப்ப சிவாச்சாரியார் கூற அதனை யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையிலே முருகனே தமிழ் புலவன் வடிவிலே வந்து திகட சக்கரம் என்கின்ற பதம் திகழ் சக்கரம் தசம் எனப்படும் பத்து அதாவது பத்து கரமாக திகழக்கூடிய ஐங்கரனை வணங்கி துவங்குகிறேன் என்பது போன்ற பொருளும் இந்த திகட சக்கரம் செம்முகம் ஐந்துளான் ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை என்று வணங்கக்கூடிய விநாயகரை குறிக்கக்கூடிய சொல்தான். இதற்கு ஆதாரம் வீரசோழியம் என்ற இலக்கண நூலில் இருக்கிறது என்று உதாரணத்தையும் கூறி முருகப்பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.

2 ஆம் அடி: சகட சக்கர தாமரை நாயகன்

தாமரை நாயகன் என்றால் அனைவருக்கும் தெரிந்திருக்கும் யார் என்று. மகாவிஷ்ணுவை குறிக்கிறது. இதுபோல் இந்த மகாவிஷ்ணுவின் கையிலே இருக்கக் கூடிய சகடை சுதர்சனத்தை இது குறிக்கிறது. இந்த சுதர்சனம் ஒருமுறை மகாவிஷ்ணுவின் கையில் இருந்து விநாயகரின் திருவருளால் திருக்குறிப்பால் உள்ளே ஈர்க்கப்பட்டு விட்டது. அப்பொழுது அந்த சுதர்சனத்தை மீண்டும் பெறுவதற்காக விநாயகரின் முன்னால் அவரை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு த்விப்பி கரணம் (இதனை தோப்புக்கணம் என்று கூறக்கூடாதப்பா) த்விப்பி கரணம் என்பதுதான் சரியான வார்த்தை பிரயோகம். திவி என்றால் இரண்டு என்று பொருள். இரண்டு காரணம் அதாவது இரண்டு காதுகளை மாறி வைத்து அந்த முட்டிகளை முழுமையாக செய்வது. (இப்போதெல்லாம் ஆலயத்தில் அரைகுறையாக செய்கிறார்கள்) அற்புதமான ஒரு யோகாசனம். காதுகளின் மடல்களில் உள்ள ரத்த நாளங்களெல்லாம் நன்றாக தூண்டி விடப்பட்டு காது மடல்களில் தான் நினைவாற்றலும் நன்றாக கல்வி கற்க உதவுகிற உந்து சக்தியும் இருக்கிறது. அதனால் தான் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே காதிலே சரியான இடம் பார்த்து துளையிடும் பழக்கம் ஏற்பட்டது. அதுபோல் பழக்கத்தினால் பின்னால் நல்ல அறிவு வரட்டுமே என்று அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் காலம் செல்ல செல்ல சரியான இடம் மாறி தவறான இடத்திலே துளையிடுவதால்தான் இது முறையாக யாருக்கும் சித்தியாகவில்லை. எனவே இரண்டு காதுகளையும் மாறி மாறி இடது கைகளால் வலது காதையும் வலது கையால் இடது காதையும் பற்றி இழுக்கும் பொழுது கட்டாயம் ஒருவகையான யோகாசன பயிற்சி அவனையும் அறியாமல் மனிதனுக்கு கிட்டுகிறது. இது மருத்துவம் யோகாசனம் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயம். இது ஒருபுறம் இருக்கட்டும். இப்படி விநாயகரை மகிழ்விக்கும் பொருட்டு மகாவிஷ்ணு செய்ய அந்த ஒரு செயலைதான் இந்த சொற்றொடர் குறிக்கிறது.

3 வது அடி: அகட சக்கர விண்மணி யாவுறை

இப்பொழுது வினாவலாம் வார்த்தைக்காக பரம்பொருள் ஒன்று என்றாலும் மகாவிஷ்ணு பெரிய நிலையில் இருக்க விநாயகரைப் பார்த்து அவர் ஏன் கூத்தாட வேண்டும்? என்று இப்பொழுதெல்லாம் வீட்டிலே பெரியவர்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் தானும் குழந்தையாக மாறி விளையாடுவது போல என்று புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அந்த திகழ் சக்கரம் கொண்ட விநாயகப் பெருமான் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை எடுத்து வைத்துக் கொண்ட விநாயகப் பெருமானை மகிழ்விக்கும் வண்ணம் மகாவிஷ்ணு கூத்தாடி அகடங்களையெல்லாம் செய்து விநாயகர் பெருமானை மகிழ்வித்து மீண்டும் சுதர்சன சக்கரத்தை பெற்று அந்த ஒரு பெருமை கொண்ட விநாயகப் பெருமானை அந்த மூல முதல்வனை வணங்கி யாம் இந்த புராணத்தை துவங்குகிறேன் என்பதுதான் இதன் அடிப்படையான கருத்தாகும்.

4 ஆம் அடி: விகட சக்கரன் மெய்பும் போற்றுவான்

இதுபோல் இந்த விநாயகன் முன்னாள் விகடகவி போல ஒரு விதூஷகனைப் போல சக்கரத்தை கையில் கொண்ட மகாவிஷ்ணு கூத்தாடிய நிலையே அப்படி கூத்தாடி பெற்ற அந்த விநாயகரின் பெருமையை என்னவென்று கூறுவது? அப்பேற்ப்பட்ட விநாயகரை வணங்கி இதுபோல் கந்தபுராணத்தை துவங்குகிறேன் என்பதே பொருளாகும்.

ஆனாலும் கூட இதுபோல் புராண நுணுக்கத்தில் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதுபோல் கந்தபுராணத்தை எழுத முனைந்த கச்சியப்ப சிவாச்சாரியார் பாலாரை முன்வைத்துக் கூட துவங்கியிருப்பார். பொதுவாக பாலாறு என்பது சதா சர்வ காலமும் காவிரி போல் நீர் பெருக்கி ஓடக்கூடியது அல்ல. வருடத்தில் சில நாட்கள் மட்டும்தான் நீர் இருக்கக் கூடிய ஒரு நதி. இப்படி எத்தனையோ நதிகள் இருக்கின்றன. எப்பொழுதுமே வெள்ளம் பெருகக்கூடிய கங்கையை காவிரியை நர்மதையை பாடாமல் பாலாறை முன்வைத்து பாடியதில் கூட நுணுக்கம் இருக்கிறது. தாய்மாருக்கு குழந்தை பெற்ற பிறகு குழந்தை பேறுக்கு பிறகு குழந்தைக்கு வேண்டிய அமுதம் சுரக்கும். தேவையான பொழுது அமுதம் சுரப்பது போல தேவையான பொழுது மக்களுக்கு நீரை வழங்குவதால்தான் அந்த நதிக்கு பாலாறு என்று நாமமே இருக்கிறது. பால் எப்பொழுதுமே சுரக்காது. தேவையான பொழுது சுரக்கும். ஆனால் இன்றைய நிலை வேறு. கர்ம வசத்தால் பாலாறு பாழாறு என்கிற நிலைக்கு ஆட்பட்டு இருக்கிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.