ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 569

கேள்வி: கர்மா வாசனை இல்லாது போக வேண்டும்.

ஆகுமப்பா உந்தனுக்கு. கர்மா வாசனை இல்லாது போக வேண்டும். அதுபோலத்தான் வாழ்வை நீ எதிர்கொள்ள வேண்டும். அறிந்திடுவாய் எமது வழியில் தொடர்வது என்பது நன்மையே என்றாலும் அதுபோல் உணர வேண்டும். பல்வேறு பேச்சுக்கள் ஏச்சுக்கள் அவமானங்களை தாண்டித்தான் எமது வழி தொடர வேண்டுமப்பா. விசனங்கள் (துன்பம் பேராசை) இல்லாது வாழ வேண்டும். விளக்கங்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும் நன்மைகளை தொடர வேண்டும்.

வாழ்த்துவோம் தர்ம வழி சத்திய வழி வழுவாது (தவறாமல்) நடக்க வேண்டும். அறிவாயே அங்ஙனம் நடக்கும் பொழுது பல்வேறு இடர்கள் எதிர்பட்டாலும் தர்ம வழி மாறாது நடக்க வேண்டும். வேண்டுமே. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா. மனிதர்கள் வாக்குகளை குறித்து எண்ண வேண்டாம். மனிதன் பலகீனமானவன். கர்மத்திற்கு உட்பட்டவன். பக்குவம் அடையாதவன். பக்குவம் அடையாத மனிதர்கள் எது உரைத்தாலும் அதை நீ செவியில் ஏற்க வேண்டாம். உன் பொருட்டு அனைவருக்கும் யாம் இயம்புவது என்னவென்றால் எமது வாக்கை கேட்பதாலேயே ஒரு மனிதன் மேன்மை அடைய இயலாது. இது போல் இவனுக்கெல்லாம் சித்தர்கள் என்றென்றும் வாக்கு உரைக்கின்றார்களே? ஆயினும் இவனுக்கெல்லாம் வாக்கு உரைத்தாலும் இவன் பிறர் மனம் புண்படவும் சித்தர்களுக்கு விரோதமாகவும் நடக்கிறானே. இதுபோல் இன்னவனுக்கு எதற்கு சித்தர்கள் வாக்கு உரைக்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. யாராக இருந்தாலும் இறைவன் கட்டளைப்படி வாக்கு உரைத்து அவனின் மன நிலையை மாற்றி நல்வழியில் திருப்ப வேண்டும் என்பதற்காக நல்லோர் நல்லோர் அல்லாதோர் அனைவருக்கும் பல்வேறு சூழலில் வாக்கு உரைக்க வேண்டியுள்ளது. உள்ளதே உள்ளபடி கூறி வாழுங்கால் (வாழ்ந்தால்) என்றென்றும் வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது அல்லதை கூறுங்கால் தொடர்ந்து பாவச் சேற்றிலே ஆழ்ந்து ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம் எவன் எப்படி வாழ்ந்தாலும் அது குறித்து கவனம் செலுத்தாது உண்மையை நன்றாக ஆய்ந்து உணர்ந்து சிந்தித்துப் பேசி உள்ளதைக் கூறி நல்லதை செய்து வாழுங்கால் நலம் தொடரும்.

உரைத்திடுவோம் எவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும் அது நீடிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே நல்ல விதைகளை ஊன்றி ஊன்றி தெளித்துவிட்டால் காலப்போக்கிலே அந்த நல்வித்துக்கள் எல்லாம் முளைத்து நல் விருட்சங்களாகி நல் கனிகளை தரும். அந்த கனிகள் மூலம் மேலும் மேலும் பல வித்துக்கள் உருவாகும். எனவே இது குறித்தும் கலங்காது உன்னால் இயன்ற தர்மங்களை பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை ஆசிகள் சுபம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.