சிவ வடிவம் 9. சோமாஸ் கந்தமூர்த்தி

சோமாஸ்கந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும் உமையுடனும் இருக்கும் வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இளமுருகு உடனுறையும் அம்மையப்பர் சிவனுமைமுருகு என்ற தூய தமிழ் பெயர்களும் உண்டு.

சூரபத்மனின் கொடுமைகள் எல்லை கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத விண்ணோர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். வல்லமை பெற்ற தங்கள் மகனால் அவனது வாழ்வு முடிய வேண்டுமென அவர்கள் தங்களது விருப்பத்தினை தெரிவித்தார்கள். சிவபெருமானும் அவர்களுக்காக மனமிரங்கி தம்முடைய ஆறு திருமுகத்திலுமுள்ள நெற்றிக் கண்ணிலிருந்து ஜோதிமயமான ஆறு நெருப்புப் பொறிகளை வெளிக்கொண்டு வந்தார். அப்பொறிகள் அகிலமெல்லாம் பரவின. இதனைக் கண்ட தேவர்கள் கலங்கினர். பார்வதி தேவி தனது கொலுசுமணி சிதற அங்கிருந்து கிளம்பினாள். சிவபெருமான் வாயு தேவனையும் அக்னிதேவனையும் அழைத்து அப்பொறிகளை கங்கையில் விடச் சொன்னார். கங்கை அப்பொறிகளை சரவணப் பொய்கையில் சேர்த்தது.

ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களுடனும் பிறந்த இக்குழந்தையை கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர். பார்வதி தேவியின் கொலுசுமணியில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் நவ வீரர்களாயின. இதற்கிடையே சரவணப் பொய்கையில் வளரும் தங்கள் குமாரனைக் காண சிவனும் பார்வதியும் ரிஷப வாகனத்தில் முன் செல்ல தேவர்கள் பின் தொடர்ந்தன. அங்கு ஆறு குழந்தைகளை பார்வதி ஒன்றாக தூக்குகையில் அவை ஒரே குழந்தையாயிற்று. அந்த ஒரேக் குழந்தை ஆறு முகத்துடனும் பன்னிரு கரங்கள் கொண்டதாகவும் விளங்கியது. ஆறு முகங்களைக் கொண்டதால் ஆறுமுகன் என்றும் கந்தன் என்றும் அழைத்தனர். பின்னர் மூவரும் கயிலை மலையை அடைந்தனர். அங்கே சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அந்த தோற்றமே சோமாஸ் கந்த மூர்த்தி ஆகும்.

இந்திரன் அசுரர்களின் துன்பத்தில் இருந்து மீள்வதற்காக திருமாலை வழிபட்டான். அவனுக்கு திருமால் தனது இதயத் தாமரையில் வைத்து வழிபட்டு வந்த சோமாஸ்கந்த மூர்த்தியை வழங்கினார். அதனை இந்திரன் இந்திரலோகத்தில் வைத்து பூஜித்து வந்தான். அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியின் உதவியோடு அசுரர்களை வென்றான். இந்திரன் வைத்திருந்த சோமாஸ்கந்த மூர்த்தியை தனக்குத் தரும்படி முசுகுந்த சக்கரவர்த்தி கேட்டார். அதற்கு இந்திரன் இது திருமாலுடையது. அவர் சம்மதம் இல்லாமல் நான் தரமுடியாது என்று கூறினான். இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி திருமாலை வணங்கி அந்த சிலையை பெறுவதற்கான அனுமதியை பெற்றான். ஆனாலும் அந்தச் சிலையை கொடுக்க மனம் இல்லாத இந்திரன் தேவ சிற்பியைக் கொண்டு அதே போன்று 6 வடிவங்களைச் செய்தான். அதில் சரியான சிலையை முசுகுந்த சக்கரவர்த்தி எடுத்துக் கொண்டார. இதனால் மற்ற சிலைகளையும் அவனிடமே கொடுத்து பூலோகத்தில் வைத்து பூஜிக்கும்படி இந்திரன் அறிவுறுத்தினான். திருமால் இந்திரன் இருவரும் பூஜித்த சோமாஸ்கந்த மூர்த்தியை முசுகுந்த சக்கரவர்த்தி திருவாரூரில் நிறுவினார். மற்ற ஆறு மூர்த்திகளையும் திருநாகைக்காரோணம் திருநள்ளாறு திருக்காறாயில் திருவாய்மூர் திருமறைக்காடு திருக்கோளிலி ஆகிய தலங்களில் நிறுவி வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்தார். இத்தலங்கள் சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

குமார சம்பவம் என்ற அற்புதமான காவியத்தை இயற்றிய காளிதாசன் உலகத்துக்கே பெற்றோர்களைப் போல இருக்கும் வகையில் அந்த தோற்றத்தைத் தருகிறார்கள் என எழுதி உள்ளார். குமரகுருபரர் தன்னுடைய நூலான பிறப்பான் திரட்டு என்னும் நூலில் இந்த மூன்று உருவங்கள் சத்வம் தமஸம் மற்றும் ராஜாஸ் என்ற மூன்று குணங்களையும் குறிப்பிடுவதாகவும் சோமஸ்கந்தனை நகிலம்குலவி (குழந்தை) எனவும் எழுதி உள்ளார். குமாரவேல் கந்தபுராணத்தில் சிவன் பார்வதி இருவரின் தோற்றங்களை இரவும் பகலும் எனவும் ஸ்கந்தனை மாலையைப் போன்றது என்று கூறுகிறது. சத் – சக்தி சித் – சிவம் ஆனந்தம் – முருகன். இந்த மூவரின் ஒருங்கிணைந்த வடிவமே சோமாஸ்கந்த வடிவம். உண்மை அறிவு இன்பம் ஆகிய மூன்று இயல்புகளின் ஒருங்கிணைந்த அழகிய வடிவமே சோமாஸ்கந்த வடிவம் என்று தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள மலைகள் வெள்ளிமலை நீலிமலை மருதமலை உள்ளது. இதில் வெள்ளி மலை சிவன் உருவம். நீலிமலை உமை உருவம். மருதமலை கந்தன் உருவம் என மூன்று மலைகளும் சோமாஸ்கந்த வடிவில் விளங்குவதாக பேரூர்ப் புராணம் கூறுகிறது. மலைகளைப் போல் ஆறுகளில் அலகாபாத்தில் கங்கை யமுனை சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. இவற்றுள் கங்கை நதி சிவபிரானை ஒத்து செந்நிறமாயும் யமுனை நதி உமையவளை ஒத்ததாய் நீலநிறம் உடையதாயும் சரஸ்வதி நதி கந்தன் நிறத்தினதாய் வெண்மையாகவும் சோமாஸ்கந்த வடிவ அமைப்பில் உள்ளதாக திருவாரூர் நான்மணிமாலை கூறுகிறது. குமரகுருபரரும் இதே கருத்தை கூறுகிறார்.

திருநெல்வேலி நெல்லயப்பர் கோவில்
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
குமரக் கோட்டம்
காமாட்சியம்மன் கோயில்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
திருச்சிக்கு அருகில் உள்ள திருப்பைஞ்ஞீலி குடை வரைக் கோயில்
கும்ப கோணத்துக்கு அருகில் உள்ள நாச்சியார் கோயில்
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கள்ளி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சக்தியமங்கலம் பவானீஸ்வரர்
திருத்துறைப் பூண்டியில் உள்ள வர்தமானஸ்வரர் கோயில்
உலகிலேயே மிகப்பெரிய சோமாஸ்கந்தர் வடிவம் இலங்கை திருக்கேதீச்சரத்தில் உள்ளது.

ஆகிய கோயில்களிலும் மேலும் பல பழமையான கோயில்களிலும் சோமாஸ் கந்த மூர்த்தி உள்ளார். ராஜ சிம்ம பல்லவர் என்ற இரண்டாம் நரசிம்ம வர்மன் தான் எழுப்பிய சிவாலயங்களில் கருவறையின் உள்ளே சோமாசுகந்த புடைப்புச் சிற்பத்தினை செதுக்கியுள்ளார். சோமாஸ்கந்தமூர்த்தி வடிவத்தை பித்தளை உலோகங்களில் சோழர்கள் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அறுபத்து மூவரில் சிறுதொண்ட நாயனாருக்கு மட்டும் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளித்துள்ளார் இறைவன்.

One thought on “சிவ வடிவம் 9. சோமாஸ் கந்தமூர்த்தி

  1. Ramesh Reply

    மிகவும் பயனுள்ள செய்தி

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.