சிவ வடிவம் – 6. உமாமகேசமூர்த்தி

முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே திருக்கைலையில் அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும். உமா மகேசுரர் ஒரு முகமும் நான்கு கைகளையும் கொண்டிருப்பவர். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அது போல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே தாயாவார். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும் நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமாகி பிரிக்க முடியாதபடி இருப்பவள். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே

  1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
  2. ஆதிசக்தி – பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  3. இச்சா சக்தி – ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  4. ஞானசக்தி – இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  5. கிரியாசக்தி – ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத ஒன்று.

முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து மகிழ்ந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். உலகைக் காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள் பூமாதேவி. பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரச மரம் இருந்தது. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்க வேண்டிய இடம் இதுவென உணர்ந்தாள் பூமாதேவி. தேவ சிற்பியான விஸ்வகர்மா அங்கே முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி நாள்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்து பூமாதேவி கேட்ட வரத்தை அருளினார்.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை செல்லும் முன் வழிபட்ட திருவஞ்சைக் களத்தப்பர் கோயில் (கொடுங்களூர் பகவதி கோயில் அருகில் உள்ளது). இந்தக் கோயிலின் வடக்கு உள் பிராகாரத்தில் உமாமகேஸ்வரர் சந்நிதி உள்ளது. கேரளாவில் அநேக கோயில் களில் உமாமகேச வடிவங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் காணப்படுகின்றன. குருவாயூர் அருகே மம்மியூர் சிவாலயத்தில் உமாமகேசர் திருவுருவம் வண்ண ஓவியமாகத் திகழ்கிறது. நேபாளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வர வடிவங்கள் விசேஷமானவை. இவை ரூபமண்டலம் விஷ்ணு தர்மோத்தரம் முதலான நூல்களில் கூறியுள்ளபடி அமைந்துள்ளன. உயர்ந்த பீடத்தில் சிவபெருமான் வீற்றிருக்க அவருக்கு இடப் புறம் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் உமாதேவி. சில கோயில்களில், கருவறை விமானத்திலும் உமாமகேச வடிவங்களைக் காணலாம்.

டெல்லி அருங்காட்சியகத்தில், சாளுக்கியர் காலத்து உமாமகேஸ்வரர் வடிவம் ஒன்று உள்ளது. மைசூரை ஆட்சி செய்த ஹைதர்அலி ஒரு புறம் உமாமகேசர் வடிவமும் மறுபுறம் ஹை என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டிருக்கிளார். 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் உமாதேவியை மடி மீது அமர்த்தியபடி சிவபெருமான் காட்சி தருகிறார். சோழர்கள் காலத்தில் உமாமகேசர் திருவுருவங்களை தங்கத்தால் செய்து வழிபட்ட வழக்கம் இருந்து என்பதை திருவிடைமருதூர் கல்வெட்டில் காண முடிகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.