சிவ வடிவம் – 43. அகோர அத்திரமூர்த்தி

சத்ததந்து என்றும் மன்னன் சிவனருளால் பல வரங்களைப் பெற்று தனக்கு நிகர் எவருமில்லை என ஆடம்பரமாகவும் ஆணவத்துடனும் வாழ்த்து வந்தான். சிவனருளால் தான் அனைத்தும் தனக்கு கிடைத்தன என்பதை மறந்து சிவபெருமானை அழைக்காமல் பிரம்மன் முதலிய தேவர்களை அழைத்து யாகத்தை நடத்த தீர்மானித்தான். பிரம்மா இந்திரன் முனிவர்களும் சத்ததந்துவிடம் சென்று சிவபெருமானை வணங்கித்தான் நீ குறைவில்லா செல்வத்தையும் எல்லா வளத்தையும் பெற்றாய். மேலும் தக்கன் என்பவன் இதுபோல் சிவபெருமானை அழைக்காமல் யாகம் நடத்தி அதனால் பெரும் துன்பத்திற்கு ஆளானான். ஆகவே நீயும் அதே தவறை செய்யாதே. அவரை கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிவுறை கூறினார்கள். ஆனால் இவர்கள் எனக்கு அறிவுரை கூறலாமா? என்று ஆணவம் கொண்ட சத்ததந்து மிகுந்த கோபம் கொண்டு புத்திமதி கூறியவர்களை தண்டித்தான். தண்டனைகளுக்கு பயந்து தேவர்களும் முனிவர்களும் யாகத்தை செய்ய தொடங்கினார்கள்.

இதனை அறிந்த சிவபெருமான் மண்டலத்தை தேராக்கி உலகை சக்கரமாக்கி அக்னியை வில்லாக்கி சந்திரனை நாணாக்கி வருணனை பாணமாக்கி முருகனை தேரோட்டுபவனாக்கி போர்க் கருவிகளுடன் தன்னருகில் இருந்த வீரபத்திரரை நோக்கி சத்ததந்துவை அழித்து வரும்படி உத்தரவிட்டார். அதற்கு அடிபணிந்த வீரபத்திரர் யாகம் நடைபெறும் இடத்தை அடைந்தார். இச்செய்தி தெரிந்த தேவர்கள் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தார்கள். வீரபத்திரர் தனது வர்ண அஸ்திரத்தால் வேள்வியை அழித்தார். எதிர்த்து வந்த சத்ததந்துவை அகோர அஸ்திரத்தினால் கொன்றார். பின் சிவபெருமானிடம் சரணடைந்தார். அகோர அஸ்திரத்தினால் சத்ததந்து வேள்வியை அழித்துக் கொன்ற வடிவமே அகோர அத்திர மூர்த்தி எனப் பெயர் பெற்றது. இவரது உருவம் திருவெண்காட்டில் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.