சிவ வடிவம் – 53. கௌரி வரப்ரதமூர்த்தி

பிரம்மாவை நோக்கி அசுரன் ஒருவன் கடுமையான தவமிருந்தான். தவத்தின் பலனால் அவனுக்கு காட்சி கொடுத்த பிரம்மாவிடம் பார்வதிதேவியின் உடலிருந்து தோன்றியப் பெண்ணைத் தவிர வேறொருவரால் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் வாங்கினான். வரத்தின் பயனால் தேவர்கள் இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாரும் தன்னை அழிக்க முடியாது என்று அனைவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அசுரனின் கொடுமை அதிகரிக்க அவனது கொடுமையை தாங்க முடியாத தேவர்கள் பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். பிரம்மா தேவர்களுடன் சிவபெருமானிடம் சென்று அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். சிவபெருமான் பார்வதி தேவியை பார்த்து காளியே வருக என்றார். உடனே பார்வதி தேவியின் உடலில் இருந்து கருமையான நிறத்துடன் காளி தேவி வெளிப்பட்டாள். சிவபெருமானிடம் எம்மை அழைத்த காரணம் என்ன? என்று கேட்டு தனது கருமை நிறத்தை மாற்றி பொன்னிறமாக மாற்றிக் கொடுக்கும் படி கேட்டுக் கொண்டாள். அதற்கு சிவபெருமான் காளியிடம் இமயமலையில் தவமியற்று. அனைத்திற்கும் காரணம் உனக்கே தெரியும் என்றார். காளிதேவியும் இமயமலையில் தவம் செய்தாள். தவத்தின் பலனால் தேவி தனது கருமை நிறம் நீங்கி பொன்நிறத்தைப் பெற்றாள். பொன்நிறத்துடன் இருந்த தேவியிடம் சிம்ம வாகனத்தை கொடுத்த பிரம்ம அசுரனை அழிக்க கேட்டுக் கொண்டார். பொன் நிறத்துடன் சிம்ம வாகனத்தில் அசுரனை அழித்த தேவியானவள் துர்கை தேவி என பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் தனது போர்க்கோலம் நீக்கி மீண்டும் சிவபெருமானிடம் சென்ற தேவி கௌரி எனப் பெயர் பெற்றாள். பொன் நிறத்துடன் வந்த தேவியை சிவபெருமான் ஏற்றுக் கொண்ட திருவடிவமே கௌரிவரப்ரதமூர்த்தி ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.