சங்கார காலத்தில் சிவ பெருமானால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருள் ஒடுங்கிய பின் அவர் தனித்து நிற்பதால் சிவபெருமானுக்கு ஏகபாத மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. பேருழிக் காலத்தில் உலகங்களும் உலகங்கத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவ பரம்பொருளுக்குள் ஒடுங்குகின்றன. இறைவனிடம் சரிசமமாக இருக்கும் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். அனைத்தும் தனக்குள் ஒடுங்கியதும் சிவபெருமான் ஏகபாத மூர்த்தியாக நிற்கிறார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. எத்தனை சர்வசிருஷ்டி ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன. இவரிடமே முடிகின்றன. இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன.
இத்திருவுருவின் வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் மழுவும் முன் வலக்கையில் காக்கும் குறிப்பும் இடக்கையில் அருளல் குறிப்பும் இருக்கிறது. இவர் புலித்தோலை அணிந்து மணிகளால் ஆன மாலைகளை அணிந்து சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிந்து காணப்படுகிறார். விஸ்வகர்மா சிற்ப சாத்திரம் என்ற நூல் ஏகபாதமூர்த்திக்கு 16 கரங்கள் உண்டு என்று சொல்கிறது. கம்பரும் ஸ்ரீவில்லிபுத்தரும் தமது காவியங்களில் ஏகபாதமூர்த்தியின் சிறப்புகளை கூறியுள்ளார்கள். அனைத்துக் காலங்களிலும் எல்லாவுலகமும் இவரது திருவடியின் கீழ் இருப்பதால் இவர் ஏகபாத மூர்த்தி என்று பெயர் பெற்றார். தப்பளாம் புலியூரில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்.