சிவ வடிவம் – 31. சண்டேச அனுக்கிரக மூர்த்தி

திருசேய்ஞலூரில் வாழ்ந்து வந்த அந்தணன் யஜ்ஞதத்தன். அவன் மனைவி பத்திரை. இவர்களது மகன் விசாரசருமர். இவர் பிறக்கும் போதே முன் ஜென்ம புண்ய பலனாக நல்லறிவுடன் பிறந்தான். யாரிடமும் வேதம் பயிலாமல் தானே உணரும் அறிவைப் பெற்றிருந்தான். ஏழு வயதில் அவருக்கு உபநயனம் செய்தனர். எந்த ஆசிரியரிடமும் கற்காமல் தானே அனைத்தையும் உணர்ந்து வேதாகம சொற்படி வாழ்ந்து வந்தான். தம்மை வழி நடத்த உரியவர் சிவபெருமான் ஒருவரே என தீர்மானமாக நம்பியிருந்தான். ஊரில் உள்ளவர்களின் பசுவே மேய்க்கும் தொழிலை செய்து வந்த ஒரு அந்தண சிறுவன் பசுவை அடிப்பதைக் கண்டான் விசாரசருமர். உடனே பசு மேய்க்கும் வேலையை தானே செய்ய ஆரம்பித்தான். கோமாதாவின் அருமை பெருமைகளை உணர்ந்ததால் அத்தொழிலைச் சிறப்பாகச் செய்தான். சரியான முறையில் அவற்றை அன்புடன் பராமரித்தான். அதனால் அவை முன்பை விட அதிகளவில் பால் கொடுத்தது. மாடு மேய்க்கும் இடத்தில் உள்ள ஆற்றங்கரையின் அருகில் மணல் மேட்டில் உள்ள அத்தி மரத்தின் கீழே மணலால் ஒரு சிவலிங்கம் செய்து கோயில் கோபுரம் மதில் போன்றவற்றை மணலாலே அமைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்து பாலபிசேகம் செய்து வழிபட்டு வந்தார்.

விசாரசருமரின் தினசரி இது போல் பூஜைகள் செய்துவர இதனைக் பார்த்தவர்கள் பசுவின் பாலை வீணாக்குவதாக ஊர் பெரியவர்களிடம் முறையிட்டார்கள். ஊர் பெரியோர் விசாரசருமனின் தந்தையிடம் முறையிட்டனர். விசாரசருமரின் தந்தை இனி மேல் இது போல் நடைபெறாதவாறு தான் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார். மறுநாள் அதிகாலை விசாரசருமர் ஆற்றங்கரைக்கு சென்று வழக்கம் போல் சிவலிங்கத்திறகு பூஜித்து பாலபிஷேகம் செய்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்ட அவரது தந்தை விசாரசருமரை திட்டிக் கொண்டே அவரது முதுகில் ஓங்கி அடி வைத்தார். தந்தை வந்ததையோ தன்னை திட்டியதையோ அடியின் வலியையோ உணராமல் சிவ பூஜையிலேயே விசாரசருமர் ஈடுபட்டிருந்தார் இதனால் மேலும் அதிக கோபமுற்ற அவரது தந்தை பால் குடங்களை காலால் உதைத்துத் தள்ளினார். சிவ பூஜை தடைபடுவதைக் கண்டு சுயநினைவு வந்த விசாரசருமர் சிவபூஜையை தடுத்தது தன்னுடைய தந்தை என்பதையும் பார்க்காமல் அருகில் இருந்த ஒரு கொம்பை எடுத்தார். அது மழுவாக மாறியது. உடன் தந்தையாரின் காலை வெட்டினார். உடனே தம்பதி சமேதராய் சிவபெருமான் அங்கு காட்சிக் கொடுத்தார். என்னுடைய தொண்டர்கள் அனைவருக்கும் இன்று முதல் நீ தலைவன் ஆவாய் என்று எனக்கு செய்யப்படும் நிவேதனம் அனைத்தும் உனக்கே உரியதாகும் என்று சொல்லி தனது ஜடாமுடியில் இருந்த கொன்றை மலர் மாலையை விசாரசருமருக்கு சூட்டி அவருக்கு சண்டேச பதவியை அளித்தார். விசாரசருமருக்கு சண்டேச பதவியை அனுகிரகித்து வழங்கியதால் சிவபெருமானுக்கு சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றப் பெயர் ஏற்பட்டது. கும்பகோணம் சேய்ஞலூர் அருகிலுள்ள ஊர் திருவாய்ப்பாடியில் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.