சிவபெருமான் வெண்ணீறு பூசிய மேனியுடன் மான் மழு அஞ்சேல் அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்திருக்க அருகே உமாதேவி குவளை மலர் ஏந்தி அமர்ந்திருக்க உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பது உமேசமூர்த்தி வடிவமாகும்.
நான்முகன் தன்னுடைய படைத்தல் தொழிலுக்கு உதவியாக நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பதைக் கண்ட அவர்கள் நால்வரும் படைப்பு தொழிலை செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தினை அடைய விரும்பினார்கள். எனவே ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கையிலை நோக்கி சென்றார்கள். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பது போல் தாமும் உமையுடன் இருப்பதைக் கண்டால் நால்வருக்கும் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என எண்ணிய சிவபெருமான் தன் அருகே இருந்த உமையையும் சேர்த்து சுற்றியிருந்த அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் பார்க்க அனைவரும் எரித்து சிவபெருமானிடம் ஒடுங்கினார்கள். பின் ஞானத்தை தேடி தன்னிடம் வந்த நால்வருடன் தனித்து அமர்ந்து நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார். பின்பு தனது இடத்தோளைப் பார்த்தார். அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றியிருந்த உமையம்மை வெளிப்பட்டு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்தாள். இருவரும் சேர்ந்து அருள் செய்ய சிவபெருமானிடம் ஒடுங்கிய அனைவரும் வெளிப்பட்டார்கள். அனைவரும் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்கள். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து காத்து துயர்துடைத்து அனைத்தையும் வாழ வைக்கும் சக்தியாக உமையவள் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு ஆனந்தப்பட்டனர். சிவபெருமானது பெயரில் உமையவளின் பெயரும் சேர்ந்து உமேச மூர்த்தி ஆனது.
கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலில் மூலவர் இம்மூர்த்தியின் திருப்பெயரிலேயே இருக்கிறார். கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் உள்ளது.