சிவ வடிவம் -35. காலந்தகமூர்த்தி (கால சம்ஹாரர்)

காலன் என்றால் யமன். சம்ஹாரர் என்றால் அழித்தவர். காலனை அழித்தவர் என்று பொருளில் கால சம்ஹாரர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு காலாந்தகர், காலாரி, கால சம்ஹார மூர்த்தி, காலகாலர், கூற்றினையுதைத்தவர், அந்தகனுக்கந்தகர் என்று பல பெயர்கள் உண்டு.

கௌசிக முனிவரின் மகனான மிருகண்டு ரிஷியும் அவரது மனைவி மருத்மதியும் சிறந்த சிவபக்தர்கள். சிவபெருமானிடம் ஆண் குழந்தை வேண்டும் என வேண்டி பிரார்த்தித்தார்கள். இறைவன் அவர்களின் வழிபாட்டில் மகிழ்ந்து அவர்களுக்கு இரண்டு விருப்பங்களைக் கொடுத்தார். ஒன்று குறுகிய ஆயுளுடன் ஒரு புத்திசாலி மகனைப் பெறலாம் அல்லது குறைந்த புத்திசாலித்தனம் கொண்ட நீண்ட ஆயுளுடன் ஒரு மகனைப் பெறலாம். குறுகிய ஆயுளாக இருந்தாலும் புத்திசாலி மகன் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளின்படி அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயன் என பெயரிட்டார்கள். அவனுக்கு 12 வயது வரை ஆயுள் இருந்தது.

மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடன் இருந்தான். தான் வளர வளர பெற்றோர் ஆனந்தப்படாமல் வருத்தப்பட்டுக் கொண்டுள்ளார்களே என்ன காரணம் என்றுக் கேட்டான். பெற்றோர்களும் அவனது வரத்தைப் பற்றிக் கூறினர். மார்க்கண்டேயன் பெற்றோரை சமாதனம் செய்து தாம் பூரண ஆயுளுடன் இருக்க சிவபெருமானை நோக்கி தவமிருந்து வெற்றியுடன் திரும்புவதாக கூறி காசி சென்றார். அங்கு மணிகர்ணிகை அருகே ஒரு சிவலிங்கத்தைப் பூஜித்து வந்தார். சிவபெருமான் அவரது பூஜைக்கு மகிழ்ந்து எமபயம் நீங்க வரமளித்தார். பின் ஊர் திரும்பிய மார்க்கண்டேயன் அங்கும் தனது வழிபாட்டைத் தொடர்ந்து மகாமிருத்யுஞ்சய மந்திரத்தையும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது 16 வது வயது ஆயுள் முடிவடையும் சமயத்தில் மார்க்கண்டேயன் திருக்கடவூர் சிவன் கோயிலுக்கு வந்து அங்கு அருள் பாலித்து கொண்டு இருக்கும் அமிர்தகடேஸ்வரரை வழிபட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்தான் எமதூதன். மார்க்கண்டேயரின் பூஜை பலனால் எமதூதனால் அருகே நெருங்கக் கூட முடியவில்லை. பின்னர் சித்ரகுப்தனும் எமனது மந்திரியான காலனையும் அனுப்பினான். ஆனால் மார்க்கண்டேயனை நெருங்க முடியவில்லை. முடிவாக எமனே வந்தார். மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை உறுதியுடன் தழுவிக் கொண்டான். ஆனாலும் எமன் மார்க்கண்டேயனை இழுக்க மார்க்கண்டேயனோடு சிவலிங்கமும் வந்தது. உடனே சிவபெருமான் தோன்றி எமனை இடக்காலால் எட்டி உதைத்தார். மார்க்கண்டேயனை நித்ய சிரஞ்சீவியார்க்கி என்றும் பதினாறு என்று வரமளித்தார். மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை உதைத்த கோலமே காலந்தகமூர்த்தி ஆகும்.

அப்பர் திருஞானசம்பந்தர் சுந்தரர் மூவரும் தேவரம் பாடல்களில் இக்காட்சியை மிகவும் சிறப்பாக பாடியுள்ளார்கள். மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில் பல இடங்களில் இத்திருவுருவம் பற்றி சிறப்பாக பாடியுள்ளார். திருமூலரும் மாளிகை தேரும் இந்த வடிவை சிறப்பாக தங்களது நூலில் கூறியுள்ளார்கள். குங்கிலியக் கலச நாயனால் புராணத்திலும் காரைக்கால் அம்மையாரின் பாடல்களிலும் சிவபெருமான் யமனை உதைத்த வரலாறு உள்ளது. கம்பர் ராமாயணத்தின் விபீஷணன் அடைக்கல படலத்தில் சிவபெருமான் எமனை மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்ததை கூறியுள்ளார்.

அம்சுமத் போதகத்தின் படி காலனை இடக்காலால் மிதித்த சிவ பெருமானுக்கு மூன்று கண்கள் நான்கு கைகளுடன் சில உருவங்களில் எட்டு கைகளுடன் இருப்பார். நான்கு கரங்களுடன் இருப்பவர் வலக்கையில் உள்ள சூலம் காது வரை சென்றிருக்கும். இன்னோரு வலது கையில் பரசு அல்லது அருட்குறிப்பு இருக்கும். இடது முன் கரத்தில் சூசிக் குறிப்புடனும் பின் கரம் மலர் குறிப்புடன் இருக்கும். எட்டு கரங்கள் உள்ள உருவத்தில் வலது கரத்தில் சூலம் பரசு வச்சிரம் கட்கமுகமும் இடது கரத்தில் இரண்டில் கேடகமும் பாசமும் விசுமயசூசி முத்திரையுடன் இருக்கும். சிவனது வலது பாதம் தாமரையின் மீதும் இடது கால் எமனுடைய தலை மீதும் இருக்கும்.

காமிய ஆகமத்தின் படி சிவபெருமானின் இடது பாதம் எமனை உதைத்துக் கொண்டும் வலது பாதம் எமனுடைய தலையிலும் இருக்கும். சிவனின் வலக்கரங்களில் சூலமும் பரசும் இருக்கும். இடக்கரங்களில் நாகபாசமும் சூசிக் குறிக்கும் காணப்படும். சிவனுடைய கண்களும் அவர் ஏவும் சூலமும் எமனது கழுத்தை நோக்கியவாறு இருக்கும். சிவன் லிங்கத்தில் இருந்து எழுந்து வருவது போலவும் மார்க்கண்டேயன் சிவனை வணங்கிக் கொண்டிருப்பது போலவும் எமன் கீழே விழுவது போலவும் இருக்கும்.

திருக்கடவூரில் நின்ற கோலத்தில் இது உருவத்தின் செப்பு திருமேனி உள்ளது. இது தவிர பட்டீஸ்வரம் திருச்செங்காட்டங்குடியிலும் வடிவ சிற்பங்கள் உள்ளது. மேலும் பல சிவாலயங்கள் உள்ள கோபுரங்களில் சுதை சிற்பமாக இந்த வடிவங்கள் உள்ளது. இது தவிர பல ஆலய தூண்களிலும் வடிவங்கள் உள்ளன. சுவர் சித்திரங்களாக இவ் வடிவினை பல சிவன் கோயில்களிலும் காணலாம். சிதம்பரத்தில் திருமூலநாதர் சன்னதியின் வெளிச்சுவரில் 25 மகேஸ்வர வடிவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் பருநாடகங்கள் என்ற பெயரில் நாடகமாக வரலாற்றை நடித்துக் காட்டுகின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.