தாருவன முனிவர்கள் தாங்கள் செய்யும் தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதிக்கலாம். சிவபெருமானை வணங்கத் தேவையில்லை என்ற எண்ணத்துடன் சிவபெருமானை வணங்காமல் செருக்குடன் இருந்தார்கள். அவர்களது மனைவிமார்களிடம் தாங்களே கற்பில் சிறந்தவர்கள் தங்களின் கற்பின் வலிமையால் இறைவனை வணங்காமலேயே எதையும் பெறலாம் என்ற அகந்தை இருந்தது. இவர்களது செருக்கை அழிக்க இறைவன் எண்ணம் கொண்டார். அவர்கள் செருக்கை அழிக்க சிவபெருமான் பிட்சாடனராக உருமாறி முனிவர்களின் மனைவியர் முன்பு நடந்தார். இறைவனின் அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவியர்கள் அவரின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். திருமால் மோகினி அவதாரம் எடுத்து முனிவர்கள் முன்பு சென்று நடந்தார். முனிவர்களும் தங்களது யாகத்தையும் தவத்தையும் விட்டு மோகினி ரூபத்தின் பின்பாக நடக்க ஆரம்பித்தார்கள். தங்களது மனைவிமார்கள் பிட்சாடணரின் பின்பாக நடப்பதைப் பார்த்ததும் சுய உணர்விற்கு வந்த முனிவர்கள் இதற்கெல்லாம் சிவபெருமானே காரணம் என்று தங்களின் தவவலிமையால் தெரிந்து கொண்டார்கள். உடனே அபிசார வேள்வி நடத்தி அதிலிருந்து வெளிவந்த பொருட்கள் அனைத்தையும் சிவபெருமான் மீது பிரயோகித்தனர். அனைத்தையும் அழித்தார் சிவபெருமான். முயலகன் என்னும் அசுரனை யாக வேள்வியிலிருந்து வரவழைத்து சிவபெருமான் மீது ஏவினார்கள். சிவபெருமான் முயலகனை தன் காலின் கீழே போட்டு அவன் மேல் திருநடனம் புரிந்து தவத்தாலும் யாகத்தாலும் எதனையும் சாதித்து விட முடியாது என்பதை தாருவன முனிவர்களுக்கு உணர்த்தி அவர்களின் செருக்கை போக்கினார்.
இச்செய்தியை அறிந்த உமாதேவியார் தாமே சக்தியாக உள்ளோம். சிவபெருமான் தன்னை அழைக்காமல் திருமாலை மோகினியாக்கி அழைத்து சென்று விட்டாரே என்று எண்ணி சிவபெருமானோடு ஊடல் கொண்டாள். சக்தியின் ஊடலுக்கான காரணத்தை அறிந்த சிவபெருமான் அதனைப் போக்க நினைத்தார். சக்தியிடம் சென்று தேவி எனது ஒரு சக்தியான நீ செய்கின்ற வேலையைப் பொறுத்து நான்காகப் பிரிகிறாய். என் துணைவியாக கையில் நீயும் ஆணுருவம் கொள்கையில் திருமாலாகவும் யுத்தக் களத்தில் துர்க்கையாகவும் கோபத்தில் காளியாகவும் உருமாறுகின்றீர்கள். எனவே திருமால் காளி துர்க்கை இவர்கள் அனைவரும் நீயே என்பதை உணர்ந்து கொள் என்றார். உடனே உமாதேவியார் கோபம் மறைய இறைவா தாருகாவனத்தில் நீர் ஆடிய அத்திருநடனத்தை நான் காண வேண்டும். எனக்கு ஆடிக் காட்டருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். உடன் சிவபெருமானும் ஆடிக் காட்டினார் இந்த நடனமே கௌரி தாண்டவம் ஆகும். உமாதேவியார் தனது ஊடலுக்கு பலமுறை இறைவனிடம் மன்னிப்பு வேண்டினார். இறைவனும் மன்னித்து தன்னுள் ஐக்கியப்படுத்தினார். உமாதேவியின் பிரார்த்தனையால் சிவபெருமான் தனது திருநடனத்தை மறுபடியும் அவர் முன் நிகழ்த்திக் காட்டினார். இம்மூர்த்தியே பிரார்த்தனா மூர்த்தி ஆவார்.