சிவபெருமான் உயிர்களுக்கு அருள்வதற்காகவே பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் சேய்விக்கிறார். சிவபெருமானின் இதயத்தில் இருந்து உருத்திரரும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருந்து பிரம்மாவும் வலப்பாகத்தில் இருந்து திருமாலும் தோன்றினார்கள். கண்களில் இருந்து சூரியனும் சந்திரனும் மூக்கிலிருந்து வாயுவும் கழுத்தில் இருந்து கணேசரும் இதயத்தின் ஒரு பாகத்தில் இருந்து கந்தனையும் தொந்தியிலிருந்து இந்திரன் குபேரன் வருணன் எமன் ஆகியோரையும் பிரத்யங்கத்தில் இருந்து 50 கோடி தேவர்களையும் ரோமங்களிலிருந்து எண்ணிக்கையற்ற முனிவர்களையும் தோற்றுவித்ததாக சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அவரிடமே ஒடுங்குகின்றன. அதனால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாக அவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் அவர் ஏகபாதத்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் என்று ஆகமங்கள் கூறுகின்றன.
