பிரம்ம தேவரின் மகன்களான சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்போது யோக நிலையைப் பற்றியும் எடுத்துரைக்க நால்வரும் வேண்டினார்கள். அவர்களின் வேண்டுதல்களை ஏற்று யோகம் பற்றியும் அதன் உட்கருத்துப் பற்றியும் சிவபெருமான் எடுத்துரைத்தார். யோகத்தினை உணர்ந்து கொள்ள தானே யோக நிலையில் இருந்து காட்டினார். இவ்வாறு சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக யோக நிலையில் இருந்த தருணத்தினை யோக தட்சிணாமூர்த்தி என்று வழங்குகின்றனர்
சிந்து சமவெளியில் நடத்தப்பட்ட ஆழ்வாராய்சியின் போது சுண்ணாம்பு கல்லால் ஆன யோகியின் சிலை கிடைத்துள்ளது. அத்துடன் அங்கு மரத்தாலும் களிமண்ணாலும் செதுக்கப்பட்ட முத்திரைகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இவை பல்வேறு வகையில் காணப்படுகின்றன. தட்சிணாமூர்த்தியின் உருவம் மூன்று வகையாக காணப்பட்டது. இதில் யோக தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அவரது பாதம் இரண்டும் சுவஸ்திகாசன அமைப்பில் இருக்கிறது. முன் இடக்கையை மடி மீது யோக அமைப்பில் வைத்திருக்கிறார். பின் இடக்கையை மார்புக்கருகில் யோகா முத்திரையுடன் வைத்திருக்கிறார். பின் வலக்கையில் ருத்ராட்ச மாலையும் முன் இடக்கையில் தாமரையும் வைத்திருக்கிறார். அவரது பார்வை மூக்கின் நுனியை பார்த்துக் கொண்டிருக்கும். அவரைச் சுற்றி முனிவர்கள் அமர்ந்திருப்பார்கள்.