சிவ வடிவம் – 44. தட்சயக்ஞஷதமுர்த்தி

உலகை படைக்க உதவியாக தட்சனை பிரம்மா படைத்தார். தட்சன் பிரம்மாவின் மானச புத்திரன். தட்சன் தவமிருந்து வானவர்கள் தனக்கு அடிபணிய வேண்டும் என்று வரம் பெற்றான். வரம் பெற்ற ஆணவத்தால் அண்டசராசரங்களுக்கும் தலைவன் ஆனான். பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று தவம் இருந்து பார்வதி தேவியை மகளாக அடைந்தான். அவளுக்கு தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தாட்சாயிணி பெரியவள் ஆனதும் சிவபெருமானைக் கண்டதும் தனது மாயை மறைந்து அவருடன் இணைந்து விட்டாள். தந்தையாகிய தனது சம்மதம் இல்லாமல் ஈசனுடன் இணைந்து விட்டாள் என்ற கோபத்தில் சிவனை அழிக்க ஒரு மாபெரும் யாகம் செய்த தட்சன் அதில் இறைவனை அழைக்காமலும் தேவர்களுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தை அவருக்குத் தராமலும் கொலைக் குற்றத்திற்கு மேலான குற்றம் புரிந்தான்.

சிவபெரிமானின் துணைவியும் தட்சனின் மகளுமான தாட்சாயிணி தனது தந்தையான தட்சனிடம் நியாயம் கேட்டு வந்த போது அவளை மதிக்காமல் தட்சன் பேசவே தாட்சாயணி யாகத் தீயில் வீழ்ந்து யாகத்தை தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமான் கோபத்தில் ருத்திர தாண்டவம் ஆடி தனது அம்சமான வீரபத்திரரை அழைத்து தட்சனை வதம் செய்ய உத்தர விட்டார். வீரபத்திரர் தட்சனை அழிக்க யாக சாலை சென்று அங்கிருந்த தேவர் முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார். வீரபத்திரிரன் பூத கணங்கள் தட்சன் இருப்பிடம் யாகசாலை கோட்டை மதில் என அனைத்தையும் அழித்தனர். தட்சனின் சிரசை தம் கைவாளினால் வெட்டி வீழ்த்தினார் வீரபத்திரர். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கு ஏற்ப மாண்ட அனைவரும் உயிர் பெற்றனர். தட்சனை பிழைக்க வைக்கும்படி பிரமன் வேண்ட உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். தட்சனின் ஆணவம் அகன்று சிவபெருமானை சரணடைந்தான். தட்சன் பார்வதி சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான். சிவனது அம்சமாக இருக்கும் வீரபத்திரருடன் மாண்ட அனைவரையும் பிழைக்க வைத்து அருள் செய்த பார்வதியும் ஆட்டுத் தலையுடன் இருக்கும் தட்சன் ஆகிய மூவரும் இருக்கும் கோலமே தட்சயக்ஞஷத மூர்த்தியாகும்.

தரங்கம்பாடி – செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூரில் இந்த வடிவத்தைக் காணலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.