சிவ வடிவம் – 29. பிட்சாடனமூர்த்தி

தாருவன முனிவர்களின் தவத்தையும் முனிபத்தினிகளின் கற்பையும் சோதிக்க சிவபெருமான் எடுத்த உருவமே பிட்சாடன மூர்த்தியாகும். இவருக்கு பரிகொள் செல்வர் என்ற பெயரும் உள்ளது. தமிழ்நாட்டில் பல சிவத்தலங்களில் திருவுருவம் உள்ளது. அம்சுமத்பேதாகமம் காமிகாமகம் சில்பரத்தினம் முதலிய நூல்கள் இந்த உருவத்தைப் பற்றி கூறுகின்றன. இவர் நான்கு கைகளை உடையவர். முன் வலக்கையில் அருகம்புல்லை மானுக்கு கொடுத்தும் பின் வலது கையில் உடுக்கை ஏந்தியும் பின் இடக்கையில் பாம்பையும் திரிசூலத்தை ஏந்தியும் முன் வலக் கையில் கபாலத்துடன் இருப்பார். ஆடை இன்றி பாம்பை அரைஞானாக அணிந்து விளங்குவார். சூலத்தில் மயிலின் தோகை இருக்கும். மரத்தால் செய்யப்பட்ட பாதுகையை அணிந்திருப்பார். இவரது தலையில் சடை அல்லது சடாமகுடம் இருக்கும். நெற்றியில் முக்கண்ணுடன் நீலகண்டனாக இருப்பார். வலக்காலில் வீரக்கழல் அணிந்திருப்பார். பிரம்மனின் கபாலத்தை பிச்சா பாத்திரமாக கொண்டு உடுக்கை வைத்திருப்பார். வலது கையை காது வரை நீட்டி வலப்பக்கம் மானும் இடப்பக்கம் குறட்பூதத்தையும் வைத்திருப்பார்.

தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்‌ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்‌ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.

தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்‌ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்‌ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்‌ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்‌ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் அபிசார ஹோமம் என்ற யாகத்தினை வளர்த்தனர். பின்னர் சிவபெருமானை அழிக்க எண்ணிய முனிவர்கள் அபிசார யாகம் இயற்றி அதிலிருந்து வெளிவரும் பொருளினால் சிவபெருமானை கொல்ல ஏவினர். ஆனால் அவர் அவற்றையெல்லாம் ஆடையாகவும் ஆபணமாகவும் அணிந்துக் கொண்டார். முனிவர்கள் மற்றும் அவர்களின் மனைவிகளின் கர்வம் அடங்கிய பின்னர் மோகினியான திருமாலும் பிட்சாடனரான சிவபெருமானும் திருத்தளிச்சேரி எனும் ஊரில் மறைந்தருளினர்.

காஞ்சிபுரத்திலும் கும்பகோணத்திலும் பல புராண கோயில்களிலும் வழுவூரிலும் பந்தநல்லூரிலும் உள்ள சிவ தலங்களில் இவரது திருவுருவம் உள்ளது. திருவல்புறத்தில் உள்ள பிச்சை உகுக்கும் பெருமானின் செப்புத் திருமேனியின் கைகள் வீணையை ஏந்தி உள்ளன. தஞ்சை கலைக்கூடத்தில் முனி பத்தினிகள் சூழ்ந்து வர பெருமான் வரும் கோலம் சிற்பமாக உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இத்திருக் கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது. திருவண்ணாமலை முதலான சில சிவத்தலங்களின் உற்சவத்தின் போது ஓர் நாள் ஒதுக்கி திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனமூர்த்தி திருவிழா இடம் பெறுவதுண்டு. சிதம்பரத்தில் உற்சவத்தின் எட்டாம் நாள் இரவு தங்க இரதத்தில் பிட்சாடனமூர்த்தி வீதியுலா நடைபெறும். திருக்கழுக்குன்றம் சித்திரை பெருவிழா ஒன்பதாம் நாள் அன்று மாலை பிட்சாடனமூர்த்தி திருவீதியுலா நடைபெறும். இத்திருவுருவைப் பற்றிய தகவல்கள் திருமுறைகளிலும் திருமந்திரத்திலும் உள்ளன. மாணிக்க வாசகர் ஆரூர் எம் பிச்சைத் தேவா என்று பாடுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.