சிவ வடிவம் – 36. காமதகனமூர்த்தி

பார்வதி தேவியார் பர்வத மன்னனின் மகளாகி இமயமலையில் சிவபெருமானையே கணவனாக எண்ணி தவத்தில் இருந்தார். இங்கு சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு யோக முறையை விளக்கி தட்சணாமூர்த்தி நிலையிலேயே இருந்தார். அவரால் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுமே யோக நிலையில் இருந்தன. இதனால் உலக இயக்கம் நின்றது. நான்முகனின் படைப்புத் தொழிலும் நின்றது. தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் துயரப்பட்டனர். இதனால் கலக்கமுற்ற தேவர்கள் சிவபெருமானை பார்க்க அனுமதிக்குமாறு நந்திதேவனை வேண்டினர். நந்திதேவன் மறுத்திடவே அனைவரும் சிவ தியானத்தில் ஈடுபட்டனர். உடன் இந்திரன் கனவில் சிவபெருமான் தோன்றி பார்வதியை திருமணம் செய்வோம். எங்கள் மகனால் தேவர்களின் துயரம் தீரும் என்றுரைத்தார். பின்னர் இந்திரன் அனைத்து தேவர்களுடன் சென்று பிரம்மாவிடம் ஆலோசனை கேட்டார்கள். அதற்கு பிரம்மா மன்மதன் சிவபெருமான் மீது பாணம் விட்டால் அவரது யோகம் கலையும். உலகம் முன்போலவே இயங்கும் என்று ஆலோசனைக் கூறினார். அனைவரும் மன்மதனிடம் சிவபெருமானின் மீது பாணம் விடுமாறு கோரிக்கை வைத்தாரகள். அதற்கு மன்மதன் பாணம் விட மறுத்தார். இறுதியில் உலக நன்மைக்காக பாணம் விட சம்மதித்தார். யோக நிலையிலுள்ள சிவபெருமானிடம் மன்மதன் சென்றார்.

சிவபெருமானின் மீது மன்மதன் பாணம் விட சிவபெருமானின் யோகம் கலைந்தது. அதனால் கோபப்பட்ட அவர் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தார். பின்னர் பர்வத மலைக்கு சென்று பார்வதிதேவியை மணம் புரிந்தார். இந்த நிலையில் மன்மதனின் மனைவி ரதி தன் கணவனைத் திரும்ப தரும்படி சிவபெருமானிடம் வேண்டினார். ரதியின் கண்களுக்கு உருவமாகவும் மற்றோர்க்கு அரூபமாகவும் இருக்கும்படி ஒரு நிபந்தனையுடன் மன்மதனை சிவபெருமான் உயிர்பித்தார். மன்மதனை எரித்ததால் சிவபெருமானுக்கு காம தகன மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.

உத்திர காமிகாமம் சுப்பிரபோத ஆகமம் பூர்வ காரணாகமம் ஆகிய ஆகமங்கள் இவ்வுருவத்தை விளக்கியுள்ளன. சிவனுக்கு மூன்று கண்களும் நான்கு கைகளும் கையில் நாகம் அகமாலை கடகக் குறிப்பு சூசிக் குறிப்பு ஆகியவை உள்ளது. சிவபெருமான் யோக மூர்த்தியாக இடக் காலை மடித்து வலக்காலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். பின்னால் உள்ள இரு கைகளிலும் மானும் மழுவும் ஏந்தி முன் வலது கையில் காக்கும் குறிப்புடனும் முன் இடக்கையை முழங்கால் வரை நீட்டி வைத்தவாறு அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி சனகாதி முனிவர்கள் வணங்கிக் கொண்டு நிற்கின்றனர். அம்பிகை அருகில் இருக்கிறாள். காமனின் உயரம் சிவபெருமானின் உருவத்தில் பத்தில் எழு பங்காக இருக்கிறது. அழகிய அணிகலன்களை அழிந்த காமன் பொன்னிறமாக இருக்கிறான். அவனது கையில் கரும்பு வில்லும் ஐந்து வகை பூக்களால் ஆன மலர் அம்புகளும் இருக்கும். மன்மதனின் அருகில் ரதி தேவபாகா வசந்தா ஆகிய மூவரும் இருப்பார்கள்.

திருமுறைகளில் காமதகனமூர்த்தி பற்றி பாடப்பட்டுள்ளன. காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் காம தகன மூர்த்தியின் சிற்பம் உள்ளது. பல சிவாலயங்களில் சுதை சிற்பமாகவும் ஓவியங்களாகவும் உள்ளன. மாயமவரம் அருகே உள்ள குறுக்கையில் காமதகனமூர்த்தி உள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.