சிவ வடிவம் – 54. சக்கரதானமூர்த்தி

குபன் என்றும் மன்னன் முன்னொரு சமயம் உலகம் முழுவதையும் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்காக திருமால் ததீசி எனும் முனிவரை எதிர்த்து யுத்தம் செய்தார். யுத்தம் நடைபெறும் போது திருமாலால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை வந்தது. திருமால் தனது சக்ராயுதத்தை அனுப்பினார். சக்ராயுதம் முனிவரின் வஜ்ஜிரக் கையில் பட்டு திரும்ப திருமாலிடமே சரணடைந்தது. உடன் திருமால் தன்னைப்போல் ஒரு உருவத்தை மாயையால் உருவாக்கினார். அதனைக் கண்ட முனிவர் தனது பாத கட்டை விரலை அசைத்தார். அந்த அசைவிலிருந்து பல திருமால்கள் உருவானார்கள். இதனைக் கண்ட திருமால் இம்முனிவர் தம்மைவிட வலிமை வாய்ந்தவர் என்று அவரிடம் சரணடைந்து விடைபெற்றார்.

திருமால் வைத்திருந்த சக்கரத்தின் வரலாறு. ஒரு சமயம் பிரளயத்தால் உலகம் முழுதும் அழிந்தது. இறைவன் மீண்டும் ஒரு புதிய உலகைப் படைக்க பிரம்மாவையும் திருமாலையும் உண்டாக்கினார். அவர்கள் இருவரிடமும் படைத்தல் மற்றும் காத்தல் தொழிலை ஒப்படைத்தார். காத்தல் தொழிலுல் செய்வதற்காக திருமால் இறைவனிடம் ஆயுதம் ஒன்று வேண்டினார். சிவபெருமான் தனது முக்கண்களால் சூரிய சந்திர ஒளியைக் கொண்டு கதை ஒன்றும் சக்கரம் ஒன்றும் கொடுத்தார். உடன் பார்வதி தன்பங்கிற்கு தனது முகத்தினால் ஒரு சங்கும் கண்களால் பத்மமும் உருவாக்கி அவை தாங்குவதற்கு இருகரங்களையும் உருவாக்கிக் கொடுத்தார். காத்தல் தொழில் செய்ய இறைவன் கொடுத்த சக்கராயுதம் ததீசி முனிவரிடம் தோற்றதால் அதனை விட வலிமையான ஆயுதத்தை சிவபெருமானிடம் இருந்து பெற வேண்டும் என்று திருமால் எண்ணினார். யாராலும் அழிக்க முடியாத சலந்தரனை அழிக்க சிவபெருமான் தனது கால் கட்டை விரலால் பூமியில் ஒரு சக்கரம் வரைந்து அதனை ஆயுதம் ஆக்கி சலந்தரனை அழித்தார். அது போல் ஒரு ஆயுதத்தை பெற வேண்டும் என்று முடிவு செய்து கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தார். தினந்தோறும் ஆயிரம் தாமரைகளால் சிவபெருமானை பூஜித்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைகளில் ஒன்றை சிவபெருமான் மறைத்தார். பூஜை செய்து கொண்டிருக்கும் போது ஒரு மலர் இல்லாததைக் கண்ட திருமால் தனது கண்களில் ஒன்றைப் பிடுங்கி எடுத்து இறைவனுக்கு சமர்ப்பித்து அன்றைய தனது பூஜையை முடித்தார். கமலம் என்றால் தாமரை. தனது கண்ணை தாமரை மலராக எண்ணி இறைவனுக்கு அர்ச்சித்ததால் சிவபெருமான் அவரை கமலக்கண்ணன் என்றழைத்து அவரின் விருப்பப்படி சுதர்சன சக்கர ஆயுதத்தை கொடுத்தார். யாரையும் எதிர்த்து வெற்றி பெறும் வலிமை கொண்ட சுதர்சன சக்கரத்தை திருமாலின் சிவபக்திக்காகக் கொடுத்ததால் சிவபெருமானுக்கு சக்கர தான மூர்த்தி எனப் பெயர் ஏற்பட்டது.

அதர்வண வேத உபநிடாதமான சரபோப நிடதத்திலும் மகாபாரதத்திலும் காஞ்சி புராணத்திலும் சிவபெருமானிடம் திருமால் சக்கரம் பெற்ற வரலாறு உண்டு. சக்கரதான மூர்த்தியின் திருவடியில் சிவபெருமான் நான்கு கைகளுடன் சடாமகுடம் தரித்துக் காணப்படுகிறார். வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு சாந்தமாக அமர்ந்திருப்பார். இரு கரங்களிலும் மானும் டங்கமும் இருக்கும். முன் வலது கரத்தில் சக்கரம் இருக்கும். சிவபெருமானின் பக்கத்தில் உமையமை அமர்ந்திருக்கிறாள். வலப்பக்கத்தில் பிரம்மாவும் எதிராக திருமாலும் வழிபட்டுக் கொண்டு நிற்பார்கள். இவ்வடிவ அமைப்பு உத்தரகாமிய ஆகமத்தில் உள்ளது. காஞ்சி கைலாசநாதர் கோயிலிலும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இத்திருவுருவம் உள்ளது. திருவழிமிழலை திருக்கோயிலில் இவ்வடிவத்தின் செப்புத் திருவுருவம் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.