சிவ வடிவம் – 49. ஜலந்தர வத மூர்த்தி

தேவலோகத்து அரசன் நான் என்ற அகந்தையுடன் இந்திரன் திருக்கைலைக்குச் சென்று சிவபெருமானை வணங்கி வர கிளம்பினான். இதனை அறிந்த சிவபெருமான் அவனது அகந்தையை அழிக்க அவன் வரும் வழியில் துவாரபாலகராக உருமாறி நின்றிந்தார். இந்திரன்‌ அவரிடம் நான்‌ இப்போது ஈஸ்வரனைச்‌ சந்திக்க இயலுமா எனக்‌ கேட்டான். சிவபெருமான்‌ எதுவும்‌ பதில்‌ கூறாமல்‌ வாய்மூடி அமைதியாக இருந்தார்‌. இதனால்‌ கோபம்‌ கொண்ட இந்திரன்‌ தன்‌ வச்சிராயுதத்தால்‌ அவரைத்‌ தாக்கினார்‌. வச்சிராயுதம் தவிடு பொடியானது. கோபமடைந்த சிவபெருமான் ருத்ரவடிவம் கொண்டார். உண்மை அறிந்த இந்திரன் பயந்து போய் தன்னுடைய அகந்தை அழிந்து அவரிடம் மன்னிக்க வேண்டினான். கருணையே வடிவான பரம்பொருள்‌ அவனை மன்னித்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார். தனது கோபத்தை எடுத்து கடலில்‌ எறிந்துவிட்டு கைலாயம்‌ சென்றடைந்தார்‌. கடலில்‌ விழுந்த கோபக்கனல்‌ ஒரு வலிமை மிக்க அரக்க குழந்தையாக உருவெடுத்தது. இந்த குழந்தையை கடலரசன் எடுத்து வளக்க ஆரம்பித்தான். தான்‌ வளர்க்கும்‌ அந்தக்‌ குழந்தைக்கு பெயர் வைக்க பிரம்மனிடம்‌ கொடுத்தான்‌. குழந்தையைத்‌ தன்‌ மடிமீது வைத்துக்‌ கொஞ்சிக்‌ கொண்டிருந்த பிரம தேவரின்‌ தாடியைப்‌ பிடித்து இழுத்தது குழந்தை. பிரம்மன்‌ வலி தாளாமல்‌ கண்ணீர்‌ சிந்த அது குழந்தையின்‌ மேல்பட்டது. கடல் நீர் பட்டதாலும் பிரம்மனின் கண்ணீர் பட்டதாலும் அக்குழந்தைக்கு ஜலந்தரன்‌ என பெயரிட்டார் பிரம்மர். ஜலந்தரன்‌ என்ற சொல்லுக்கு ஜலம்‌ தரித்தவன்‌ என்றும்‌ தண்ணீரால்‌ தாங்கப்‌ பெற்றவன்‌ என்றும்‌ பொருள்‌.

கடுமையான தவம் செய்து பிரம்மரிடம் பல வரங்கள்‌ பல பெற்றான் ஜலந்தரன்‌. அரக்கர்களுடன்‌ சேர்ந்து மொத்த உலகத்தையும் வெற்றி பெற்றான்‌. மிகப்பெரிய நகரம்‌ ஒன்றை அமைத்து அதற்கு ஜலந்தரபுரம்‌ எனப்‌ பெயரிட்டான்‌. அதில்‌ இருத்து மொத்த உலகத்தையும் அரசாட்சி செய்த ஜலந்தரன்‌ காலநேமி என்பவரின் மகள்‌ பிருந்தையை மணந்து இன்பமாக வாழ்ந்து வந்தான்‌. தன்‌ வரத்தின் பலத்தாலும்‌ உடல்‌ வலிமையாலும்‌ ஆணவம்‌ கொண்ட ஜலந்தரன்‌ தேவர்களை எல்லாம்‌ துன்புறுத்‌தத்‌ தொடங்கினான்‌. இவன்‌ வருகையைக்‌ கேட்டதும்‌ தேவர்கள்‌ எல்லாம்‌ அஞ்சி ஓடத்‌ தொடங்கி கயிலை மலையில்‌ அடைக்கலம்‌ புகுந்தனர்‌. இதனை அறிந்து மிகக்கோபங்‌ கொண்டு போர்க் கோலம்‌ தாங்கி கயிலை மலையை நோக்கி செல்ல ஆயத்தமானான். இதனைப் பார்த்த அவன்‌ மனைவி பிருந்தை சிவபெருமானின்‌ பெருமைகளை எல்லாம்‌ எடுத்துக்‌ கூறி கைலை மலையை நோக்கிப்‌ போருக்கு செல்லக் கூடாது என்று வேண்டி நின்றாள்‌. ஆனாலும் கயிலை சென்றான்‌ ஜலந்தரன்‌.

இந்திரன்‌ முதலானோர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்கள்‌. சிவபெருமானும்‌ அபயமளிக்கும்‌ திருக்கரத்தை காட்டி அஞ்சவேண்டாம்‌ என அருள்‌ செய்தார்‌. ஒரு அந்தணராக உருவம் மாறி ஜலந்தரன்‌ முன்னே சென்று அவனுடன்‌ பேசலானார்‌. அவன்‌ தான்‌ கைலைக்குச்‌ செல்லும்‌ எண்ணத்தைக்‌ கூறினான்‌. அதற்கு அவரும்‌ அவர்‌ கைலைக்குச்‌ செல்வது ஒருபுறம்‌ இருக்கட்டும்‌ தான்‌ சொல்லும்‌ சிறு வேலையைச்‌ செய்ய முடியுமா? என்று கேட்டார். ஆணவத்துடன்‌ எதையும்‌ செய்து முடிக்கும்‌ பேராற்றல்‌ தனக்கு உண்டு என்று கூறினன்‌. உடனே அந்த அந்தணர்‌ தன்‌ கால் பெருவிரலால்‌ மண்ணில்‌ ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தைப்‌ பெயர்த்து எடுத்து அவன்‌ தலைமேல்‌ தாங்க வேண்டும்‌ என்று கூறினார்‌. ஜலந்தரன்‌ அதைக்‌ கேட்டு சிரித்துவிட்டு அந்த வட்டத்தை அனாயாசமாகப்‌ பெயர்க்கக்‌ தொடங்கினான்‌. ஆனால்‌ அவனால்‌ அது எளிதில்‌ முடியவில்லை. தன் வலிமை அனைத்தையும் பயன்படுத்தி பெயர்த்து தன்‌ இரு கரங்களாலும்‌ உயரத்‌ தரக்கிப்‌ பிடித்து தலைக்குமேல்‌ தாங்கினான்‌. உடனே அது அவன்‌ உடலை இரு கூறுகளாகப்‌ பிளந்தது சக்கரம். அவனது உடலில் இருந்து சோதி வடிவமாக இறைவன்‌ திருக்கரத்தில்‌ சென்று அமர்ந்தான்.

ஜலந்தரன்‌ அழிந்ததால் அனைவரும் ஆனந்தப்பட்டனர். தேவர்கள் தங்களுக்கு உண்டான அவரவர் பதவியை மீண்டும் பெற்றார்கள். தேவர்கள் துயர்துடைக்க சலந்தரனை வதம் செய்த மூர்த்தியே ஜலந்தர வத மூர்த்தி ஆவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.