சிவ வடிவம் 58. பிரம்மசிரச்சேதமூர்த்தி

பிரம்மாவுக்கும் திருமாலிற்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டானது. வேதமும் பிரணவமும் சிவனே இருவரிலும் உயர்வானவர் என்று கூறிய பின்னும் இருவரின் சண்டையும் தொடர்ந்தது. இதை தேவர்கள் மூலம் அறிந்த சிவபெருமான் லிங்கோத்பவராக காட்சி தந்தார். அதனைக் கண்ட திருமால் தன்னைவிட சிவப்பரம்பொருளே பெரியவர் என்று அமைதியானார். ஆனால் பிரம்மா அதை ஏற்காமல் இன்னும் செருக்குடன் இருந்தார். சிவனுக்கு ஐந்து முகங்கள் இருப்பது போலவே தமக்கும் ஐந்து முகங்கள் இருப்பதால் நானே பெரியவன் என்ற அகந்தை உண்டானது. (பிரம்மாவுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தது) பிரம்மனது அகந்தையை போக்க எண்ணிய சிவபெருமான் பைரவராக மாறி அவருடைய தலைகளில் ஒன்றினை கொய்தார். இதனால் பிரம்மா நான்கு முகத்துடன் நான்முகன் என்று பெயர் பெற்றார். பிரம்மாவின் செறுக்கும் அழிந்தது. செருக்கு மிகுந்த பிரம்மாவின் தலைகளில் ஒன்றினை கொய்த சிவபெருமானின் திருவுருவம் பிரம்ம சிரச்சேத மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வு நடந்த இடம் திருக்கண்டியூர் ஆகும். இத்தலம் திருவையாறு அருகே அமைந்துள்ளது. இறைவனது திருநாமம் பிரம்மநாதர் என்றும் இறைவி மங்களநாயகி என்றும் வணங்கப் படுகின்றார்.

சிவபெருமானின் இந்த பேராற்றலை திருஞானசம்பந்தரும் அப்பரும் சுந்தரரும் தேவாரங்களில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்கள். திருஞானசம்பந்தர் சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களில் இதுவும் ஒன்று என்று பாடியதோடு இவ்வீர செயலை பற்றி தேவாரங்களில் 29 இடங்களில் சிறப்பாக பாடியுள்ளார். அப்பர் 35 இடங்களிலும் சுந்தரர் 5 இடங்களிலும் மாணிக்கவாசகர் 6 இடங்களிலும் சிறப்பித்து பாடி உள்ளார்கள். ஸ்ரீ தத்துவநிதி சில்பரத்தினம் என்ற சிற்ப நூல்கள் இவர் வெண்ணிறத்தவர் என்றும் நான்கு கரங்களை உடையவர் என்றும் வலக்கரத்தில் வஜ்ஜிரமும் கைக்கோடாரியும் வைத்திருப்பார் என்றும் இக்கரங்களில் பிரம்மனின் கபாலமும் சூலமும் வைத்திருப்பார் என்றும் சுருண்ட தலைமுடியை உடையவர் என்றும் புலித்தோலை அணிந்திருப்பார் என்றும் கூறுகின்றன. இவ் வடிவத்தை கொண்ட இவரது அழகிய சிற்பம் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் உள்ளது. இதில் நான்கு தலைகளுடன் பயத்துடன் பிரம்மன் காட்சியளிக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.