சிவ வடிவம் – 38. பைரவமூர்த்தி

கருமையான மலை போன்ற உடலையும் விகாரமான முகத்தையும் கோரமான பற்களையும் யானையின் துதிக்கையை போன்ற கைகளையும் உடைய மிகவும் கொடிய அசுரன் அந்தகன். இவன் சிவபெருமானை நினைத்து பஞ்சாக்கினி வளர்த்து அதன் மத்தியில் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பார்வதி தேவியுடன் இடப வாகனத்தில் வந்து என்ன வரம் வேண்டுமென்றுக் கேட்டார். பிரம்மா விஷ்ணு இவர்களை விட பலமும் யாவரும் அழிக்க முடியாத ஆற்றலும் வேண்டும் என்று கேட்டான். அவன் செய்த தவத்தின் பலனால் அவன் கேட்டதை கொடுத்தார் சிவபெருமான். தான் பெற்ற வரத்தினால் தானே வலிமையுள்ளவன் என்ற அகங்காரம் அதிகமானது. இதனால் இந்திரன் விஷ்ணு பிரம்மா என அனைவரிடமும் சண்டை போட்டான். அவனது சண்டைக்கு முன் அனைவரும் தோல்வியுற்று விஷ்ணு முன்செல்ல தேவகணங்ளும் பின்சென்று அனைவரும் அந்தகனிடம் சரணடைந்தனர். சரணடைந்த பின்பும் அவனது கொடுமை தொடர்ந்தது. அந்தகன் கொடுமைகள் அதிகமாக தேவகணத்தினர் கையிலை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட பைரவரிடம் அந்தகனை வெற்றி பெற உத்தரவிட்டார். பைரவர்க்கும் அந்தகனுக்கும் இடையே அதிபயங்கரப் போர் நிலவியது. பல அசுர சேனைகள் பைரவர் அழித்தார். அழிந்த அனைவரையும் அசுரனின் தலைவர் சுக்கிராச்சாரியார் உயிர்ப்பித்தார். உடனே சிவபெருமான் சுக்கிராச்சாரியாரை விழுங்கினார். அடுத்த நொடி அசுர சேனைகள் அனைத்தும் அழிந்தன. பைரவர் தனது சூலத்தால் அந்தகனை குத்திவிட்டு சிவபெருமானை சரணடைந்தார். பைரவரின் சூலத்தால் குத்தப்பட்டு அதன் அருளால் மனம் மாறிய அந்தகன் தனது அகங்காரமெல்லாம் அழிந்து போக வேண்டும் என்றும் சிவபெருமானிடம் தன்னை பூத கணங்களுக்கு தலைவனாக்கவும் வேண்டினான். சிவபெருமான் அவனது தவத்தின் பலனாலும் வேண்டுதலாலும் அவனது எண்ணத்தை நிறைவேற்றினார். சிவபெருமானின் வயிற்றிலிருந்த சுக்கிராச்சாரியாரை இறைவன் வெளியேற்றினார். பின்னர் தேவர்கள் தொல்லையின்றி நிம்மதியுடன் வாழ்ந்திருந்தனர். அந்தகனின் அகங்காரத்தை அழிக்க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவ மூர்த்தியாகும்.

சிவபெருமானைப் போல் ஐந்து தலையுடன் இருந்த நான்முகனின் அகங்காரத்தை அடக்க சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து நான்முகனின் ஐந்தாவது தலையை கிள்ளியெடுத்தார் என்ற புராண வரலாறும் உள்ளது. நானே பெரியவன் என்ற அகங்காரம் தோன்றும் இடத்தில் எல்லாம் அகங்காரத்தை அழிக்க இறைவன் எடுக்கும் ரூபமே பைரவர் வடிவம் ஆகும்.

அனைத்து சிவ ஆலயங்களிலும் வடகிழக்கு மூலையில் பைரவரது சன்னதி இருக்கும். இவ்வடிவம் ஆடையின்றி நாயின் வாகனத்துடன் உக்கிரமான பார்வையுடனும் தோற்றமளிக்கும். நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன் ஒவ்வொரு கைகளிலும் டமருகம் பாசம் சூலம் கபாலம் இருக்கும். இவரே திருக்கோவிலின் பாதுகாப்பாளர் ஆவார். ஊர்களின் காவல் தெய்வமும் இவரே. பைரவர் 64 திருக்கோலங்களை உடையவர் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. சிவ பெருமானின் வீர செயல்கள் எட்டாகும். அவரது வீரச் செயல்களின் வெளிப்பாடாக பைரவரும் எட்டு திருவுருவங்களை எடுத்து அருள் பாலிக்கிறார். அவை 1.அசிதாங்க பைரவர் 2.ருரு பைரவர் 3.சண்ட பைரவர் 4.குரோத பைரவர் 5.உன்மத்த பைரவர் 6.கபால பைரவர் 7.பீஷண பைரவர் 8.சம்ஹார பைரவர் என்பதாகும். இவர்கள் எட்டு பேரும் எட்டு இடத்தில் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்கள். அவை அட்ட பைரவேச்சரங்கள் என்று அழைக்கப்படுக்கிறது.

சீர்காழியில் உள்ள பிரம்மேஸ்வரர் சன்னதியில் அட்ட பைரவா சன்னதிகள் உள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் முக மண்டலத்தில் எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்கள் உள்ளது. காசியிலும் எட்டு பைரவர்களின் சன்னதி உள்ளது. குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் அட்ட பைரவர்களின் ஓவியங்கள் உள்ளது. சூரியனது கோயிலில் உள்ள பைரவர் மார்த்தாண்ட பைரவர் என்றும் முருகர் ஆலயத்தில் உள்ள பைரவர் குமார பைரவர் என்றும் விநாயகர் ஆலயத்தில் உள்ள பைரவர் பிரமோத பைரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சில திருமாலின் திருக்கோயிலிலும் பைரவர் திருவுருவங்கள் உண்டு. அந்த உருவத்திற்கு முகுந்த பைரவர் என்று பெயர். திருவண்ணாலையில் மூலவர் சன்னதி அருகே சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி உண்டு. இவர் அடியவர்களுக்கு அள்ளிக் கொடுப்பவர். பண்டைய கால அரசர்கள் இந்த பைரவரை உபாசித்து வேண்டியளவு பொருளை பெற்றிருக்கிறார்கள் என்று வரலாறு உள்ளது. திபேத்தில் உள்ள பௌத்த நூல்களில் 84 வகையான பைரவ திருவுருவங்களும் வழிபாட்டு முறைகளும் கூறப்பட்டுள்ளன. சமண சமய நூல்களில் 96 வகையான பைரவர்களின் திருவுருவங்கள் பற்றிய குறிப்புகள் உண்டு. காசியில் ஆதிசங்கரருக்கு பிரம்மஞானம் அருளிய கோலம் பைரவத் திருக்கோலமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.