சிவ வடிவம் – 61. வராக சம்ஹாரமூர்த்தி

இரணியாக்கன் எனும் அசுரன் பிரம்மனை நோக்கி தவமிருந்தான். அவனது தவத்தின் பலனால் பிரம்மன் அவன் கேட்ட அனைத்து வரங்களையும் கொடுத்தார். இதனால் அந்த அசுரன் உலகை பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலில் சென்று மறைந்தான். இதனால் தேவர்கள் செய்வதறியாது திகைத்து திருமாலிடம் முறையிட்டனர். திருமால் தனது கருட வாகனத்தில் கிளம்பினார். வைகுண்டம் தாண்டியதும் வராக உருவம் எடுத்தார். வராகம் மலையை விட உயரமாகவும் இரண்டு காலுக்கிடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. அதன் வால் அசைவு எட்டுத் திக்கையும் தொட்டது. இப்படி பயங்கரமான உருவம் கொண்ட திருமால் கடலை பிரட்டிப் போட்டு அசுரனைக் கண்டு பிடித்து தன் கொம்பினால் கொன்று உலகை மீட்டு ஆதிசேஷனிடம் ஒப்படைத்தார். பின் அந்த வராகம் பெரும் கர்வமுடன் எதிர்வந்த அனைத்து உயிர்களையும் அழித்தது. இதன் கொடுமை அதிகமாகவே பயந்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட அவர்களின் வேண்டுகோளுக்கு இசைந்த அவர் வேட வடிவம் கொண்டு வராக வடிவத்தை தன் சூலாயுதத்தால் குத்தினார். அதன் ஒரு கொம்பை ஒடித்து தன் மேனியில் ஆபரணமாக்கினார். அதனால் வராகத்தின் அகந்தை ஒழிந்தது. வராகம் சிவபெருமானை சரணடைய அதனுடைய மற்றொரு கொம்பு பிழைத்தது. சிவனருளால் வராக உருவம் நீங்கி பழைய உருவம் அடைந்ததும் திருமால் வைகுந்தம் சென்றார். உலகத்தவர்களின் துயர் துடைக்க வராகத்தை அழிக்க சிவபெருமான் கொண்ட கோலமே வராக சம்ஹார மூர்த்தி யாகும். இவரை காசியிலும் தமிழகத்திலும் உள்ள பழமலைக் கோயிலிலும் காணலாம்.

சிவபெருமான் முருகனிடம் அந்த வராகத்தின் கொம்பினை உடைத்து வரும்படி கூற முருகன் வராகத்தின் கொம்பினை உடைத்து வந்தார். அதனை சிவபெருமான் அணிந்து கொண்டார் என்றொரு புராணத்தினை திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டு பாடியிருக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.